Feeds:
Posts
Comments

விவேகானந்தரிடம் பேச மறுத்த ராமகிருஷ்ணர்.

Sw

ஒரு நாள் நரேந்திரர் தட்சிணேசுவரத்துக்கு வந்த போது அவரைக் கண்டதாகவே காட்டிக் கொள்ளவில்லை பரமஹம்சர். நரேந்திரர் குரு நாதரை வணங்கினார். அப்போதும் அலட்சியமாகவே இருந்தார் குரு. அவருடைய பக்கத்தில் சீடர் அமர்ந்தார். அப்படி ஒருவர் அருகில் உட்கார்ந்திருப்பதைக் குரு மகராஜ் கவனித்ததாகவே தெரியவில்லை. அவர் ஏதோ தீர்க்கமாய்ச் சிந்தித்துக் கொண்டிருக்கிறார் போலும் என்றெண்ணிய நரேந்திரர் அறைக்கு வெளியே வந்தார்.

ஹாஸ்ராவுடன் பேசிக் கொண்டே புகைத்தார். அப்போது உள்ளே பரமஹம்சர் மற்றவர்களுடன் உரையாடிக் கொண்டிருப்பது கேட்டது. உடனே நரேந்திரர் ஆர்வத்துடன் அவரது திருமுன்னர் சென்றார். என்ன ஆச்சரியம்! இம் முறை ஸ்ரீராமகிருஷ்ணர் அலட்சியம் செய்தது மட்டுமில்லை ; நரேந்திரருக்கு எதிர்ப்புறமாக சுவரை நோக்கி முகத்தைத் | திருப்பிகொண்டு விட்டார். ஏமாறிய நரேந்திரர் அங்கிருந்து புறப்பட்டார். அப்போதும் பரம ஹம்சர் போக்கில் மாறுதலே இல்லை.

இரண்டாம், மூன்றாம் முறையாக தட்சிணேசுவரத்துக்கு வந்தார் நரேந்திரர். நாலாம் முறையும் வந்தார். |அவர் வராத இடைக் காலத்தில் ஸ்ரீராமகிருஷ்ணரும் நரேந்திரரின் சௌக்கியத்தைப் பற்றி கேட்டறிந்து தான் வந்தார். எனினும் அவர் வந்தபோது ஏனோ கல்லாகச் சமைந்திருந்தார் குருதேவர். இப்படியே ஒரு மாதம் ஆகி விட்டது. ஸ்ரீராமகிருஷ்ணர் அப்படியே தான் இருந்தார். நரேந்திரரும் முன் போலவே வந்து கொண்டு இருந்தார். குருநாதர் தம்மைப் புறக்கணிப்பது பற்றி அவர் யாரிடமும் குறை கூறக் கூட இல்லை . அதற்கு மேலும் பரமஹம்சரால் எப்படி, பொறுக்க முடியும்?

நரேன், உன்னோடு நான் ஒரு வார்த்தைக்கூடப் பேசாமலிருக்கிறேன்; அப்படியும் நீ வந்து கொண்டிருக்கிறாயே! இது எப்படி ?” என்று சிஷ்யனைக் கேட்டே விட்டார் ஆசான். “நீங்கள் பேசி நான் கேட்க வேண்டும் என்பதற்காக நான் இங்கே வருவதாகவா எண்ணுகிறீர்கள் ? நான் அதற்காக வர வில்லை . எனக்கு உங்களிடம் அன்பு இருக்கிறது. அந்த அன்பி னால் உங்களைக் காண விரும்பு கிறேன். அதற்காகவே நான் தட்சிணேசுவரத்துக்கு வருகிறேன்என்றார் நரேந்திரர்.

அன்பு தனக்குப் பிரதியாக எதையும் எதிர்பாராது என்பது உண்மை தான். நரேந்திரரின் அன்பு அதற்குப் பிரதியாக குருதேவரின் அன்பைக்கூட எதிர்பார்க்கவில்லை. எதையும் எதிர்பாராது எவரிடமும் அன்பு செலுத்துவதே நம் கடமையாகக் கொள்ளவேண்டும் என்று முழங்கியவர் சுவாமி விவேகானந்தர்.

மனிதர்களே மனிதர்களே நமக்கு வேண்டும் – சுவாமி விவேகானந்தர்.

12107953_1024411640949711_8074768904993930253_n

மனிதர்களே மனிதர்களே நமக்கு வேண்டும். மற்றவை அனைத்தும் தயாராக வந்து சேரும். ஆனால் வலிமை மிக்க, சுறுசுறுப்பான, சிரத்தை பொருந்திய, உண்மையில் பிடிப்புக்கு கொண்ட இளைஞர்களே தேவை. அத்தகைய ஒரு நுறு இளைஞர்களால் இந்த உலகமே புரட்சிகரமான நல்ல மறுதலைப்   பெற்றுவிடும்.  முதலில் அப்படிப்பட்ட இளைஞர்களின் வாழ்வை நாம் நல்ல முறையில உருவாக்க வேண்டும். அதன் பிறகுதான் எதாவது உண்மையான முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம்.

பாரதமாதாவின் நன்மைக்காக அவளுடைய மிகவும் சிறந்த, உத்தமமான புதல்வர்களின் தியாகம் தேவையாக இருக்கிறது என்பதை நான் திட்ட வட்டமாக அறிந்திருக்கிறேன். பலரின் நன்மைக்காக, அனைவரின் சுகத்திற்காக, உலகில் தைரியமும் சிறப்பும் பெருமளவில் பெற்றிருப்பவர்கள் தங்களைத் தியாகம் செய்து கொண்டுதான் ஆகவேண்டும். என்றென்றும் நிலைத்த மாறாத அன்பும் கருணையும் பொருந்திய பல நுறு புத்தபிரான்கள் இப்போது தேவைப்படுகிறார்கள்.

12189183_1025915864132622_9057793412933950991_n

காலத்தால் அழியா சுவடுகள்:- 7

ஜூன் 20, 1909.

லண்டனிலுள்ள இந்தியா ஹவுஸில் ஒரு திட்டம் ஒன்று உருவாகிக் கொண்டிருந்தது. இந்திய தேச விடுதலைக்காக ஒரு புரட்சி வீரன் அன்று ஒரு முக்கிய பணியை முன்னிட்டு வீர் சாவர்க்கருடன் சில முடிவுகளை எடுத்துக் கொண்டிருந்தான். புரட்சி வீரன் அமைதியாக திட்டத்தை விவரித்துக் கொண்டிருந்தான். சாவர்க்காரின் சம்மதத்தைப் பெற்றான். இறுதியில் ஜூலை ஒன்றாம் நாள் அந்தப் திட்டத்திற்கு நாள் குறிக்கப்பட்டது. திட்டத்தின் படி அந்த புரட்சி வீரன் ஒரு ஆங்கிலேயரை கொலை செய்யும் கடமையை ஏற்றுக் கொண்டான்

இதன் பின்புலம் என்ன?

”இண்டியா ஹவுஸ்” என்பது வீர் சாவர்க்கரால் தேச பக்தியை ஒருங்கிணைப்பதற்கும், பிரிட்டிஷ் அரசாங்கத்தை எதிர்த்து போராடுவதற்க்காகவும் லண்டனில் ஏற்படுத்தப்பட்ட ஒரு அமைப்பு. இதில் அனேகமாக லண்டனுக்கு பல்வேறு துறைகளில் கல்வி பயில வந்த தேச பக்தி மிகுந்த மாணவர்கள் உறுப்பினர்களாக இருந்து வந்தார்கள். இதனால் இண்டியா ஹவுஸ் பிரிட்டிஷ் நிர்வாகத்திற்கு ஒரு பெரிய அறைகூவலாகவே இருந்து வந்தது.

பிரிட்டிஷ் அரசும் தன் பங்குக்கு ஒரு அமைப்பை போற்றி வளர்த்து வந்தது. அது தேசிய இந்திய கூட்டமைப்பு என்ற பெயரில் லண்டனில் இயங்கி வந்தது. இதன் முக்கிய நோக்கங்களுள் ஒன்று லண்டனுக்கு கல்வி கற்க சென்ற இளைஞர்கள் இந்திய விடுதலை இயக்கத்தில் ஈடுபடுவார்களேயானால் மூளை சலவை செய்து அவர்களை தேசபக்தியற்றவர்களாக செய்வதாகும். அதன் செயலாளர் எம்மா ஜோசஃபின் என்னும் அம்மையார். பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தக் அமைப்பின் அங்கத்தினர்களை மூளை சலவை செய்வதற்க்காக மூவர் அடங்கிய ஒரு கமிட்டியை உருவாக்கியிருந்தது. அந்தக் கமிட்டியின் முக்கிய உறுப்பினர் சர் வில்லியம் கர்ஸன் வைலி. கர்ஸன் வைலியின் தந்திரத்தினால் பல இந்திய இளைஞர்கள் இதயத்தில் குடியிருந்த இந்திய விடுதலை போராட்டம் என்ற மாயை விலகி தேசபக்தியை கைவிட்டனர். இதனால் கொதிப்படைந்தது ”இண்டியா ஹவுஸ்”.

அன்று அந்தத் திட்டம் வகுக்கப்பட்டதன காரணம் இதுவே. புரட்சி வீரன் எம்மா அம்மையாரை நட்பு செய்து கொண்டான். பின்னர் அவருடைய அமைப்பில் முழு உறுப்பினரானான். பின்னர் ஜூலை 1, 1909ல் தேசிய இந்திய கூட்டமைப்பு வருடாந்திர தினத்தை கொண்டாடுவதற்க்காக இம்பீரியல் இன்ஸ்டிடுயூட் ஜெஹங்கீர் ஹாலிற்கு வந்த கர்ஸன் வைலியை சுட்டுக் கொன்றான்.

விரைவில் அவனுக்கு தூக்கு தண்டனை வழங்கியது பிரிட்டிஷ் அரசு. அவனும் அதையே விரும்பினான். காரணம், அப்பொழுதுதான் மேலும் பல இந்திய இளைஞர்கள் கொதிப்படைந்து தேச விடுதலைக்குப் போராட முன் வருவார்கள் என்பதே. அந்த புரட்சி வீரன் மதன்லால் திங்க்ரா.

நீதிமன்றத்தில் திங்க்ரா சொன்னான், ” என் தாய்நாட்டுக்காக நான் உயிரிழக்க போகிறேன் என்பதில் பெருமை கொள்கிறேன். நினைவில் கொள்ளுங்கள். எங்கள் காலம் விரைவில் வரும். என்னை காத்துக்கொள்ள நான் சொல்ல எதுவுமில்லை. எந்த ஆங்கிலேய நீதிமன்றத்திற்கும் என்னை கைது செய்யவோ, தண்டிக்கவோ அதிகாரமில்லை. அதனால்தான் வாதாட வக்கீல் வைக்கவில்லை.

ஜெர்மானியர்களை எதிர்த்து போராட உங்களுக்கு உரிமை உள்ளதென்றால் அதே உரிமை என்னாட்டுக்காக போராட எனக்கும் மிக அதிகமாகவே உள்ளது. கடந்த 50 ஆண்டுகளில் எங்கள் மக்கள் 8 கோடி பேரை கொன்றதற்கும், ஆண்டுதோறும் 100,000,000 பவுண்டு நிகரான செல்வங்களை எங்கள் நாட்டிலிருந்து கொல்லை அடித்து செல்லும் உங்களை கொல்லும் கடமை எனக்கு இருக்கிறது.

எங்கள் தேசபக்தர்களை கொல்கிறீர்கள், ஒரு ஆங்கிலேயன் வாழ எங்கள் மக்கள் 3000 பேர் இரத்தம் சிந்த உழைக்க வேண்டியிருக்கிறது. உங்கள் எதிரியான ஜெர்மானியர்களை கொல்லும் ஆங்கிலேயன் வீரன் என்றால், எங்கள் எதிரியான உங்களை கொல்லும் நான் மட்டும் எப்படி குற்றவாளியாவேன் என்றான்.

12187685_1025411007516441_6111743954458650091_n

காலத்தால் அழியா சுவடுகள்:- 6

வந்தே மாதரம் (தாய் மண்ணே வணக்கம்) பாடல், பக்கிம் சந்திர சட்டர்ஜியினால் 1882-ல் “ஆனந்த மடம் “ நாவலில் எழுதப்பட்டது என்பது எல்லோரும் அறிந்த விஷயம். ஆனால் அத்தகைய தாராக மந்திரத்திற்கு பின்னனியில் நடந்தது என்ன ?

வங்காளத்தில் ஒரு மாவட்ட துணை ஆட்சியாளராகப் பணியில் இருந்த பக்கிம் சந்திர சட்டர்ஜி, தட்சிணேசுவரம் சென்று ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சியரிடம் ஆசி பெற்றார்.

சட்டர்ஜிக்கு ஆசி வழங்கிய பரமஹம்சர், ‘உனது பெயர் என்ன?’ என்று கேட்டார். ‘என் பெயர் பக்கிம் சந்திரர் ‘ என்று பதிளிலத்தார்.

வங்காள மொழியில் பக்கிம் என்றால் ‘வளைந்த’ என்று பொருள். வளைந்த சந்திரன். அதாவது ‘பிறைச் சந்திரன்’ என்று அர்த்தம்.

இதை கேட்ட பரமஹம்சர் சிரித்தபடி ” நீ…. வளைந்த சந்திரனா! ஆங்கிலேய அரசில் பணிபுரிபவன் தானே நீ! ஆங்கிலேயன் பூட்ஸ் காலால் மிதித்ததில் வளைந்து போய்விட்டாயா!” என்று கேட்டார்.

பரமஹம்சரின் வார்த்தைக் கேட்ட பக்கிம் சந்திரர் குறுகிப் போனார்; வருந்தினார். நேராக தம் வீடு வந்தவர், அந்நியரிடம் பணியாற்றுவது தமக்கு அவமானம் என உணர்ந்தார். உடனடியாகத் தமது துணை ஆட்சியாளர் பதிவியை ராஜினாமா செய்தார். பின்னர் தேச விடுதலைக்குப் பாடுபட்டார்.

அப்போது அவர் எழுதிய நூல்தான்’ஆனந்தமடம்’. அந்த நூலில்தான் ‘வந்தேமாதரம்’ பாடல் இடம் பெற்றுள்ள்ளது.

விடுதலை பெருநெருப்பை மூட்டிய வந்தேமாதரத்திற்கு முதல் பொறி கொடுத்தவர் பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர்.

12107953_1024411640949711_8074768904993930253_n

காலத்தால் அழியா சுவடுகள்:- 5

வந்தேமாதரம்..

நமது நாட்டின் தாரம மந்திரம் வந்தேமாதரம்! பக்கிம் சந்திர சட்டர்ஜி எழுதிய ‘ஆனந்தமடம்’ எனும் நாவலில் வந்தேமாதரம் இடம் பெறுகிறது. வந்தேமாதரம் என்றால் என் தாய்திருநாட்டை வணங்குகிறேன் என்று பொருளாகும். பாரத நாட்டை பாரத மாதாவாக, சரஸ்வதியாக, துர்க்கையாக, லட்சிமியாக வர்ணித்து பாடுகிறார்.

’தாயே! பாரதமாதா! நான் எந்தக் கோயிலுக்குச் சென்று வணங்கினாலும் அங்கே உன் எழில் வடிவத்தினையே காண்கிறேன்’ என்று பாடுகிறார். இந்தப் பாடலில் இருந்துதான் வந்தேமாதரம் என்ற சொல் உணர்ச்சிப் பிழம்பான கோஷமாக பிறந்தது. வந்தேமாதரம் என்ற கோஷத்திற்கு எவ்வளவு சக்தி இருந்தது என்பதனை, சுதந்திரப் போராட்ட வீரர் ம.பொ. சிவஞானம் மிக அருமையாக விளக்குகிறார்.

சுதந்திரப் போராட்டத்தில் போலீசார் தடியால் தாக்கும்போது ஒன்றிரண்டு அடிகளுக்கு மேல் தாங்கமுடியாத ஒருவர், அடிக்கு அடி வந்தேமாதரம் சொல்லும்போது அவரது உடலில் பத்துக்கு மேற்பட்ட அடிகளைத் தாங்கக் கூடிய சக்தி வந்துவிடும்’ என்பார். வந்தேமாதரம்! என்ற கோஷம், சுதந்திரப் போராட்ட வீரர்களிடையே மெய்சிலிர்ப்பையும் ஆவேசத்தையும் உருவாக்கியது. இளைஞர்கள் புன்முறுவலுடன் தூக்குக் கயிற்றை முத்தமிடவும் வெஞ்சிறையில் வாடவும் தைரியத்தைக் கொடுத்தது.

விண்ணைப் பிளந்தது வந்தேமாதரம்…

ஆயிரக்கணக்கான தேசபக்தர்களின் வீர முழக்கம் கேட்டு ஆவேசமடைந்தனர் ஆங்கிலேய அதிகாரிகள். “அடக்குங்கள் ஒடுக்குங்கள்” என்ற அவர்களின் உத்தரவையடுத்து போலீசார் ஆவேசத்துடன் கண்மூடித்தனமாக தேசபக்தர்களைத் தாக்கத் தொடங்கினர். எங்கு பார்த்தாலும் தலை உடைந்தும் விலா எலும்புகள் நொறுக்கப்பட்டும் கைகள் முறிக்கப்பட்டும் ரத்தம் சொட்ட சொட்ட மக்கள் காணப்பட்டனர். ஆனாலும் ஒவ்வொரு தடியடித் தாக்குதலுக்கும், எதிர்த்தாக்குதலாக அவர்களின் வந்தே மாதரம் இடி முழக்கமாக முழங்கிக் கொண்டிருந்தது. தேச பக்தர்களின் ஆவேசத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினார்கள். வந்தே மாதரம் என்ற போர் முழக்கம் அந்த பகுதியையே எதிரொலித்துக் கொண்டிருந்தது.

வந்தே மாதரம்! வந்தே மாதரம்! வந்தே மாதரம்!
போலீசாரின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை எதிர் கொண்ட அந்தக் கூட்டம் நொடிப்பொழுதில் தேசபக்தியின் உணர்வுகளை ஒருமுகமாக வந்தே மாதரம் என்ற மந்திரம் மூலமாக வெளிப்படுத்திக் கொண்டிருந்தது. தேசபக்தர்கள் அடிக்கப்பட்டார்கள், உதைக்கப்பட்டார்கள், இருந்த போதும் கூட்டம் கட்டுக்கோப்பாக தங்களது உணர்வுகளை வெளிப்படுத்திக் கொண்டேயிருந்தது. தாக்குதலில் சாலையோர சாக்கடையில் விழுந்தவர்கள் தங்கள் வலியையும் பொருட்படுத்தாது மீண்டும் போராட்டக் களத்தில் எழுந்து வந்து நின்றனர். உள்ளத்தின் அடிப்பாகத்திலிருந்து சொல்லி வைத்தார் போல் ஒரே குரலில் அனைவரும் வந்தே மாதரம் வந்தே மாதரம் என்று முழங்கிய கர்ஜனை விண்னைப் பிளந்தது. வந்தே மாதரம்! வந்தே மாதரம்! வந்தே மாதரம்! பல ஆண்டுகளாக அடிமைப்பட்டுக் கிடந்த அவர்களின் சுதந்திர தாகம் சூறாவளி காற்றாக என கரையை புரட்டிக் கொண்டிருந்தது.

மேற்குவங்கத்தின் பாரிசால் வீதிகளில் எழுந்த இந்த சுதந்திர போர் முழக்கம், பாரத தேசத்தின் மூலை முடுக்கெல்லாம் உள்ள ஒவ்வொரு இந்தியனின் உணர்வுகளை தட்டி எழுப்பியது. பாரிசால் வீதிகளில் முழங்கப்பட்ட வந்தே மாதரம் தேசமெங்கும் எதிரொலித்தது. நாடெங்கும் வந்தே மாதரம் வந்தே மாதரம் கோஷங்கள் விண்ணைப் பிளந்தது. வந்தே மாதரம் என்ற இடிமுழக்கம் கேட்டு ஆங்கில அரசு நிலை குலைந்தது. இந்த கோஷங்கள் அவர்களுக்கு பல விதமான அச்சங்களை தந்தது. ஆங்கில அரசு செய்வதறியாமல் திகைத்தது. அவர்கள் காதுகளில் திரும்ப திரும்ப எதிரொலித்துக் கொண்டே இருந்தது…………… வந்தே மாதரம்! வந்தே மாதரம்! வந்தே மாதரம்!

வந்தேமாதரம் அன்று மட்டும் அல்ல, இன்றும் ஒவ்வொருவரின் நாடி நரம்புக்களை தட்டி எழுப்பும் விதமாக அமைந்துள்ளது.

”வந்தே மாதரம் என்போம்– எங்கள்
மாநிலத் தாயை வணங்குதும் என்போம்”

–பாரதி…

12189743_1023169424407266_7972276975650302072_n

காலத்தால் அழியா சுவடுகள்:- 4

எத்தனை ஆண்டுகள் வாழ்கிறோம் என்பதைவிட எப்படி வாழ்கிறோம் என்பதே முக்கியம். 81 ஆண்டுகள் வாழ்ந்த எவ்வளவோ பேரைக் காலம் மறந்துவிட்டது. ஆனால் 18 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த ஒரு சுதந்திரப் போராட்ட வீரரை நினைவில் வைத்துள்ளது. அந்த இளைஞன் தான் குதிராம் போஸ்.

குதிராம் போஸ் வங்காளப் புரட்சியாளர். இந்திய விடுதலை இயக்கத்தில் மிக இளம் வயதிலேயே புரட்சியில் ஈடுபட்டவர். ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக மாஜிஸ்திரேட் கிங்க்ஸ்போர்ட் என்பவர் மீது வெடிகுண்டு வீசி, தனது 18 ஆம் வயதில் தூக்குமேடை ஏறியவர்.

குதிராம் போஸ்க்கு முன் மூன்று பெண் குழந்தைகள் வீட்டில் ; ஆனால் வீட்டில் அதற்கு முன் பிறந்த இரண்டு ஆண்பிள்ளைகள் இறந்து போக இவரை தானியத்திற்கு தத்து கொடுத்தால் காப்பாற்றலாம் என்கிற நம்பிக்கையில் அம்மா தானம் கொடுத்து விட்டார் .தானியம் (குதி -வங்க மொழி ) மூலம் பெறப்பட்ட பிள்ளை என்பதால் குதிராம் ஆனார் .

இளவயதிலேயே அரவிந்தர்,நிவேதிதை ஆகியோரின் ஆவேசம் மிகுந்த பேச்சுகளை ரொம்ப இளம் வயதில் கேட்டு விடுதலைக்கனல் மூண்டது. யுகாந்தார் எனும் புரட்சி அமைப்பில் சேர்ந்து கிங்க்ஸ்போர்ட் எனும் ஆங்கிலேய அதிகாரிக்கு குறி வைத்தார்; உடன் பிரபுல்லா சக்கி எனும் இன்னொருவரும் சேர்ந்து அவர் வரும் வண்டியில் குண்டு வீசிவிட்டு தப்பி விட்டனர் ; அதில் இருந்தது அவரின் மனைவி மற்றும் மகள் அவரில்லை; இதை அறிந்து ஏகத்துக்கும் வருந்தினார் குதிராம் போஸ் .

அப்பாவிகளை எப்பொழுதும் கொல்வதில்லை எனும் கொள்கைகொண்டவர்கள் அவர்கள் .பிரபுல்லா அங்கேயே சுட்டுக்கொண்டு இறந்து விட வழக்கு விசாரணைக்கு பிறகு தூக்கு என ஆங்கிலத்தில் அறிவித்தார் நீதிபதி.

“ஏன் சிரிக்கிறாய் ?நான் சொன்னது புரிந்ததா ?”என கேட்க ,”நன்றாக புரிந்தது “என சொல்ல, இங்கு இருப்பவர்களுக்கு எதாவது சொல்ல வேண்டுமா என அவர் கேட்க ,”வேண்டுமானால் உங்களுக்கு எப்படி வெடிகுண்டு தயாரிப்பது என சொல்லித்தருகிறேன்” என சொல்லி ”என் வருத்தமெல்லாம் Majistrate Kingsford தண்டனைப் பெறாமல் தப்பிவிட்டான் எனபதே”. என அவன் சொன்ன பொழுது வயது பதினெட்டு தான் ! தூக்குதண்டனை விதிக்கபட்டு கையில் பகவத் கீதையுடன், வாய் “வந்தே மாதரம்” என முழங்க அவர் தூக்கிலிடபட்ட பொழுது பதினெட்டு வயது ஏழு மாதம் பதினொரு நாள் வயதான இளைஞன் அவர்…

அவர் தூக்கிலிடபட்ட பின் அவரின் அஸ்தியை பெண்கள் கொண்டு சென்று தங்கள் பிள்ளைகளுக்கு கொடுக்கும் பாலில் கலந்து கொடுத்தார்கள். தேசபக்தி தங்கள் பிள்ளைகளின் ரத்தத்தில் பாயவேண்டும் என்பதற்காக அப்படி செய்தார்களாம் ! குதிராம் இறக்கிற பொழுது அவரின் சித்தி கருவுற்று இருந்தார். இப்படி ஒரு கவிதை எழுதி வைத்துவிட்டுப்போனார் குதிராம்.

“ஒருமுறை விடைகொடு அம்மா!
என் அருமை அம்மா!
நான் மீண்டும் பிறப்பேன்
சித்தியின் வயிற்றில்…
பிறந்தது நான்தான் என்பதையறிய
குழந்தையின் கழுத்தைப் பார்
அதில் சுருக்குக் கயிற்றின்
தடம் இருக்கும்”…..

அவனது மரணவேளையில் எப்படி இருந்தான் என்பதை அப்போதைய பத்திரிக்கைகள் வெளியிட்டன.

12 – 8 – 1908 அமிர்த பஜார் பத்திரிகை ‘குதிராமின் முடிவு’ என்ற தலைப்பிட்டு, பெரிய எழுத்துக்களில் தலைப்புச் செய்தி வெளியிட்டிருந்தது. “மகிழ்ச்சி யோடும் புன்னகையோடும் அவன் மரணமடைந்தான்.அவன் தூக்கு மேடையை நோக்கி கம்பீரமாக நடந்து சென்றான். தலையில் கறுப்புத்துணியை மூடும் வரை அவன் மரணத்தை அலட்சியப்படுத்தும் புன்னகையோடு நின்றான்” என்று அப்பத்திரிகை, செய்தி வெளியிட்டது.

பெங்காலி என்ற பத்திரிகையின் நிருபர் எழுதுகிறார்: “நான்கு போலீசார் குதிராமை அழைத்துவந்தனர். அவன் விறைப்பாக நடந்து வந்தான். வேகமாய் நடக்கும்போதே எங்களைப் பார்த்துச் சிரித்துவிட்டுப் போனான். அவனது தைரியமும், மிடுக்கும், மரணத்தைக் கண்டு அஞ்சாமையும் கண்டு எங்களுக்கு சிலிர்த்துவிட்டது.”

அந்த வெள்ளைக்கார நீதிபதிக்குத் தன்னால் விதிக்கப்பட்ட தண்டனையின் கடுமைபற்றி அந்தப் பையன் குதிராமுக்குப் புரியுமா என்ற சந்தேகம் வந்தது. ஏனெனில் தீர்ப்பைக்கேட்டு அவன் சந்தோசமாகச் சிரித்துக் கொண்டிருந்தான். அவனிடம் பயமோ, துயரமோ சிறிதும் தென்படவில்லை.

குதிராம், பிரபுல்லசாகிபின் தியாகம் வங்க இளைஞர்களிடையே பெரும் எழுச்சியை ஏற் படுத்தியது. அவர்களது தியாகத்தைப் போற்றும் பாடல்கள் புனைந்து மக்கள் பாடினர். விடுதலைப் போரில் வங்க மக்களை ஈர்த்ததில் இந்த இரு தியாகிகளும் புகழ்பெற்றனர். ‘வந்தேமாதரம்’ என்ற கோஷம் வங்கம் முழுதும் எதிரொலித்தது.

12066029_1022753674448841_5207711536653819889_n

காலத்தால் அழியா சுவடுகள் 3:

வீரமும், தியாகமும், தேசபக்தியும் தெரியாத நம் குழந்தைகளுக்கு இத்தகைய நிகழ்வுகளை சொல்லி தியாக சிந்தனையும் தேச பக்தியையும் வளர்ப்போம்.

கப்பல் ஓட்டிய சிதம்பரனாருக்கும் சுப்பிரமணிய சிவாவுக்கும் ஆயுள் தண்டனை பெற்றுக் கொடுத்த ஆஷ் என்ற ஆங்கிலேய அதிகாரி,பதிவி உயர்வு பெற்ற திமிரில் தலைகால் தெரியாமல் நடந்தான். மக்களை அடக்குவதில் தனது அதிகாரத்தை தாறுமாறாகப் பயன்படுத்தினான். அடக்குமுறைகள் கொண்டு வந்து தேசபக்தர்களை அலைக்கழித்துக் கொண்டிருந்தான். அவன் பெயரை கேட்டதுமே மக்கள் நடுங்கும் நிலை.

ஒருமுறை இந்த கலெக்டர் ஆஷ் கொடைக்கானலுக்குப் புகை வண்டியில் சென்று கொண்டிருந்தான். அவ்வண்டி மணியாச்சி சந்திப்பில் நின்றது. அந்நேரம் ஆங்கிலேயர் போல் உடை அணிந்திருந்த ஒரு பாரதீய இளைஞர், ஆஷ் இருந்த பெட்டியினுள் புகந்தார். அவனுக்கு எதிரே போய் நின்று தன் கைத் துப்பாக்கியை எடுத்து அவன் நெஞ்சுக்கு நேரே நீட்டினார். அடுத்த கணம் துப்பாக்கிக் குண்டுகள் ஆஷின் நெஞ்சைத் துளைத்தன. மேலோரை வெஞ் சிறையில் வாட வைத்து நல்லோர் இதயங்களில் துயரத் தீயை வளர்த்த அக்கொடியோன் பிணமாக சாய்ந்தான்.

அந்த இளைஞன் அங்கிருந்து மின்னலென மறைந்து பயணிகள் கழிவறையில் புகுந்து துப்பாக்கியின் விசையைத் தட்டினான். அதிலிருந்த தெறித்த குண்டுகள், அவன் தலையைச் சிதற வைத்தன. இவ்வாறு அவ்விளைஞன் நாட்டுக்காக தன்னையே மாய்த்துக் கொண்டான். அவன் தான் வாஞ்சிநாதன்.

திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையில், 1886-ம் ஆண்டு ரகுபதி ஐயர், ருக்மிணி அம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார் வாஞ்சிநாதன். இயற்பெயர் சங்கரன். ஆனால், அவரை வாஞ்சி என்றே அனைவரும் அழைத்துள்ளனர். செங்கோட்டையில் பள்ளிப்படிப்பை முடித்த வாஞ்சி, திருவனந்தபுரத்திலுள்ள மூலம் திருநாள் மகாராஜா கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார். கல்லூரியில் படிக்கும்போது பொன்னம்மாளுடன் திருமணம் நடந்தது. தொடர்ந்து, புனலூர் வனத்துறையில் பணியாற்றினார் வாஞ்சி. ஆங்கிலேய அரசாங்கத்தை எதிர்த்து நாடெங்கும் நடத்தப்பட்ட போராட்டம் உச்சத்தை அடைந்திருந்த நேரம். அந்த நேரத்தில், வ.உ.சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணிய சிவா ஆகியோரின் மேடைப் பேச்சுகளால் திருநெல்வேலி பகுதியில் சுதந்திர இயக்கம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. இவற்றால் ஈர்க்கப்பட்ட வாஞ்சியும் விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டு தன்னை இந்த தேசத்திற்காக தியாகம் செய்தான்.

சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாழ்க்கை வரலாற்றை இன்றைய மாணவ சமுதாயம் தெரிந்து கொள்ளும் வகையில் அனைத்து வகுப்புகளிலும் பாடத் திட்டத்தில் சேர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் சுதந்திரப் போராட்ட வீரர்கள் இந்திய மண்ணில் சிந்திய ரத்தத்தின் வலிமையை மாணவ சமுதாயம் அறிய முடியும்.

12193705_1022358431155032_2458426635633520101_nகாலத்தால் அழியா சுவடுகள் 2 :-

‘சிவமும் பிள்ளையும், இல்லாவிட்டால் இந்தப் பாரதி வெறும் குருடன்’ என்று பாரதி புகழ்ந்த இருகண்கள் வ.உ.சி. என்ற கப்பலோட்டிய தமிழனும், சுப்பிரமணிய சிவாவும்.

‘எனது ஜாதி பாரத ஜாதி, எனது மதம் பாரதிய மதம், என் வழிபடு தெய்வம் பாரத மாதா’ என்று பாரத மாதாவுக்கு ஆசிரமம் அமைத்து, ஊர் ஊராகப் பிரசாரம் செய்து நாட்டுப்பற்றை ஊட்டி வளர்த்து 47-ல் நாம் விடுதலை பெற 41 வயதிலேயே வீரமரணம் எய்திய சிவா என்ற சுப்பிரமணிய சிவாவை மறக்க முடியுமா?

ஒருபுறம் வறுமை, மறுபுறம் தொழு நோய் என்ற இருபுறத் தாக்குதலுக்கு அஞ்சாமல், தேச பக்திக்கனலை மூட்டி அந்த தியாக வேள்வியில் கற்பூரமாகக் கரைந்த சுப்பிரமணிய சிவா, பிரிட்டிஷ் அரசுக்கு அடிமடியில் கட்டிய நெருப்பாகவே இருந்தார்.

4.10.1884 வத்தலகுண்டு நாகமய்யர் நாகலட்சுமி அம்மாளின் மகனாக சுப்பிரமணியன் அவதரித்தார். 12 வயது வரை மதுரையில் வாசம். பின் ஊட்டுப்புறை (ஏழை அந்தணப் பிள்ளைகளுக்கு உணவு தந்து படிக்க உதவும் கேரளத்துச் சத்திரம்)யில் திருவனந்தபுரத்தில் தங்கினார். கோவை புனித மைக்கேல் கல்லூரியில் ஒரு வருடம் படிப்பு. 1899-ல் மீனாட்சியை மணந்தார்.

லார்டு கர்சான் (பாரதி வாக்கில் கர்சான் குரங்கு) வங்காளப் பிரிவினைத் திட்டம் கொணர்ந்தபோது வங்கம் மட்டுமல்ல இந்திய தேசமே கிளர்ந்தெழுந்தது. வறுமை ஓர்புறம் வாட்ட தேசப்பற்று மறுபுறம் இழுக்க, தேச பக்திக்கனல் மூண்டபோது வயிற்றுத்தீயைப் பொருட்படுத்தினாரா சுப்ரமண்யம்? ’ இல்லை.

லால், பால், பால் (லாலா லஜபத்ராய், பாலகங்காதர திலகர், விபின் சந்திபால்) என்ற முத்தலைச் சூலம் ஆங்கிலேயரை எதிர்த்து நின்றது. திருவனந்தபுரத்தில் இளைஞர்களைத்திரட்டிய சுப்பிரமணியம், ‘தர்ம பரிபாலன சங்கம்’ என்ற அமைப்பைத் தொடங்கினார். திருவாஞ்கூர் சமஸ்தானம் அவரை அங்கிருந்து விரட்டிற்று. 1908-ல் தூத்துக்குடி வந்தார். வ.உ.சி என்ற வேளாளன் (உபகாரி என்ற பொருள்) நாட்டு விடுதலை, தொழிலாளர் நலன் என்ற இரண்டையும் இருகண்களாகக் கொண்ட சுப்பிரமணியத்திற்கு அடைக்கலம் தந்தார்.

இந்தியர்களைக் கூலி என்பர் ஆங்கிலேயர். அதிலும் தூத்துக்குடி கோரல் மில்லில் வேலைபார்த்த நமது சகோதரர்கள் கூலிக்காரர்களோடு கூட இல்லை. வாழ்நாள் அடிமைகள் என்று ஆங்கில அரசும் அதிகாரிகளும் நினைத்தனர். காலை 6 முதல் மாலை 6 மணி வரை வேலை. விடுமுறை கிடையாது. உணவு இடைவேலை இல்லை, ஊதியமோ மிகமிகக்குறைவு. சிறு தவறுக்கும் பிரம்படி பலமாக உண்டு.

வந்தனர் சிவமும் பிள்ளையும். போலீஸ் அதிகாரி பத்மநாப ஐயங்காரும் தன்வேலையைத்துறந்து இவர்களுடன் கை கோர்த்தார். துவங்கியது வேலை நிறுத்தம். சிவா 1908, பிப்ரவரி 23-ல் பேசிய உரை ரகசிய போலீஸ் மூலம் ஆங்கில அரசுக்குப் போனது.ஆண்டுதோறும் இவ்வளவு தொகை இந்தியாவிலிருந்து போகிறது. நீங்கள் வேலை நிறுத்தம் செய்தால் ஐரோப்பிய முதலாளிகளின் நிதி நிலை மோசமாகும்.” என்றெல்லாம் எடுத்துச் சொன்னார் சிவா. ‘இயந்திரங்களுக்கு ஊறு செய்வது சரியில்லை. அறப்போராட்டம் வேலை நிறுத்தமே! என்று சுப்ரமண்யசிவா சொன்னது மூவாயிரம் வேலையாட்களின் மனதில் பதிந்தது’ என்றெல்லாம் ரகசியபோலீஸ் அறிக்கை அனுப்பியது.

1908 பிப்ரவரி 27-ல் வேலைநிறுத்தம் தொடங்கியது. முதன் முதலாக நடந்த வேலைநிறுத்தம் இது எனலாம். தூத்துக்குடி சப்கலெக்டர் ஆஷ்துரை எத்தனையோ வழிகளில் தடுத்தும் வந்தேமாதரம் கோஷத்துடன் போராட்டம் வலுவடைந்தது. மக்களின் ஆதரவு நிதியுடன் போராட்டம் வெற்றியடைந்தது. (9 நாளிலேயே; அதுவும் தொழிற்சங்க இயக்கம் வலுவடையாத காலத்திலேயே சிவா, வ.உ.சி பத்மநாப ஐயங்கார். மூவருடைய உழைப்பும் எத்தகையதாக இருந்திருக்கும்!)

9.3.1908 விபின் சந்திரபால் விடுதலை பெற்றதைக் கொண்டாட பாரதி, வ.உ.சி, சிவா, பத்மநாபன் ஆகியோர் கூட்டங்கள் நடத்தினர். வீரவுரைகள் ஆற்றிய சிவா, வ.உ.சி. மார்ச் 12-ல் கைதாயினர். ‘தலைவர்களை விடுதலை செய்’ என்று மக்கள் முதன் முதலாக அரசியல் வேலைநிறுத்தம் செய்தனர். 7.7.1908-ல் நீதிபதி பின்ஹே, வ.உ.சிக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் சுப்பிரமணிய சிவாவுக்கு 10 வருடக் கடுங்காவல் தண்டனையும் அளித்தார்.

1915 மே 15-ல் சுப்பிரமணிய சிவாவின் மனைவி மீனாட்சி காசநோயால் இறந்தார். முழு சன்யாசியானார் சிவா. 1921-ல் செட்டிநாட்டுக் காரைக்குடியில் பாரதமாதா ஆசிரமம் நிறுவினார். 1921 நவம்பர் 17-ல் கைதானார். இரண்டரை ஆண்டுகளுக்குப்பின் விடுதலை பெற்று, பாரதமாதா ஆசிரமத்தை உயிர்ப்பித்தார். திரு.வி.க தனது நவசக்தியில் அறிக்கை வெளியிட்டு தாய் நாட்டுச்சேவைக்கு பொது வாழ்வில் நாட்டமுள்ள தொண்டர்கள் தேவைஎன்று எழுதினார்.

‘வந்தேமாதரம், அல்லாஹு அக்பர்’ இரண்டும் இருபுறம் அச்சிடப்பட்டு பாப்பாரப்பட்டி பாரதாமாதா ஆசிரம பிரதிக்ஞைப் பத்திரம் வெளியானது. தருமபுரி பாப்பாரப்பட்டி நண்பர்கள் பேருதவி செய்துள்ளனர் என்பது தெரியவருகிறது. சின்னமுத்து முதலியார், தீர்த்தகிரி முதலியார், ஆகியோரை நல்ல நண்பர்களாகப் பெற்றிருந்த சிவா ஸ்வதந்திரானந்தர் என்ற பெயருடன் காவியுடை உடுத்தி பாரதமாதா கோவில் கட்டத் திட்டமிட்டார்.

மே 1 1923-ல் தோழர் சிங்காரவேலு செட்டியார், சப்பிரமணியசிவா, கிருஷ்ணசாமி சர்மா இவர்கள் முதல் முதலாகத் தொழிலாளர் தினம் என்ற மே தினத்தைக் கொண்டாடினர். சென்னையில் செங்கொடி முதல் முதலில் ஏற்றப்பட்டது.

‘அந்தணர் என்போர் அறவோர்’ இது வள்ளுவர் பிற உயிர்கள் வாழத் தான் முனைந்து பாடுபட்ட அந்தணர் சிவா. நூலாசிரியர் பத்திரிகை ஆசிரியர். தொழிற்சங்கம் இல்லாமலேயே பாட்டளிகளை ஒன்றாக்கியவர்.பொதுவுடைமைவாதி. தனித் தமிழில் கட்டுரை எழுதுவோருக்கு 5 ரூபாய் பரிசு என்று 1915-லேயே அறிவித்த தனித்தமிழ்ப் பற்றாளர். ‘ஒன்று எங்கள் ஜாதியே’ என்று திருமூலர் வழியில் நடந்த சித்தர். எந்த நேரமும், பாரத விடுதலை, பாரத மாதா வழிபாடு என்று வாழ்ந்த அப்பழுக்கற்ற துறவி.

-இன்னும் வீரத்துறவி சுப்பிரமணிய சிவா குறித்து எவ்வளவோ எழுதலாம்.

நாட்டு விடுதலைக்குப் பேச்சு, எழுத்து, இதழியல், நாடகம், நடிப்பு என்ற பல துறையிலும் தொண்டு செய்த சுப்பிரமணிய சிவம் அடுத்தடுத்த சிறைவாசம், தன் உடல்நலத்தைக் கவனிக்காமல் ஈடுபட்ட விடுதலைப் போராட்டம், வறுமை இவற்றால் நோயுற்றார்.

22.7.1925-ல் மதுரையிலிருந்து சுந்தரபாரதி என்ற சீடருடன் புறப்பட்டு பாப்பாரப்பட்டி நண்பர்களைக் காணவந்து அடுத்தநாளே (23.7.1925) அதிகாலை 5 மணிக்கு பாரதமாதா ஆசிரமத்தில் உயிரை நீத்தார்.

தருமபுரியை அடுத்த பாப்பாரப்பட்டி சென்று அந்தத் தூய வீரத்துறவி சிவாவின் சமாதியைக் கண்டு தொழுது, ‘பாரத் மாதா கீ ஜய்’ என்று சொல்லிவிட்டு வரலாமே!

12108875_1021966531194222_4681583889223314664_nகாலத்தால் அழியா சுவடுகள்-1

வீரமும், தியாகமும் நிறைந்ததுதான் பாரதத்தின் வரலாறு அத்தகைய வரலாற்றை நாம் நம் பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுப்போம். பாரத தாயின் தவபுதல்வர்களின் வீரவரலாறு மற்றும் அவர்களது தியாகத்தை எடுத்துசொல்லும் அளவிற்கு தொடர்பதிவாக பதிவிட இருக்கிறேன். பல்வேறு இணையதளங்களில் இருந்தும் மற்றும் புத்தகங்களில் இருந்தும் எடுத்து போடுகிறேன். ஏதேனும் தவறுகள் இருந்தால் சுட்டிக்காட்டவும். முதல் பதிவாக வ.உ.சிதம்பரனார் பற்றி பதிவிடுகிறேன்.

”வந்தேமாதரம்” என்று முழுங்குவதா குற்றம்? “வந்தேமாதரம், என்பதன் பொருள்தான் என்ன?” எமது தாய்நாட்டை வாழ்த்துகிறோம், தலையார வணங்குகிறோம்’ என்பது அன்றோ?” தாய்நாடு வாழ்க’ என்று முழுங்குவது குற்றமானால் அந்தக் குற்றத்தை எங்கள் இறுதிமூச்சு இருக்கும்வரை செய்து கொண்டேயிருப்போம். தாயகத்தை வாழ்த்துவது ஈனச் செயலன்று என கலெக்டர் விஞ்சுவுக்கு தக்க பதிலடி கொடுத்தார் வ.உ.சி. செக்கிழுக்க நேர்ந்தது பற்றி வீரச் சிதம்பரனார் விம்மி அழவில்லை. பின் எப்படித்தான் அந்த துன்பத்தைச் சகித்திருப்பார்? எண்ணெயாடும் செக்கை சுற்றுவதா அவர் எண்ணிட வில்லை. மாறாக சுதந்திர அன்னையின் திருக்கோயிலை வலம் வருவதாக கற்பனை செய்து கொண்டார். கற்பனா சக்தி படைத்த கவிஞரல்லவா அவர்?

என் மனமும் என்னுடலும் என் சுகமும் என் அறமும் என் மனையும் என் மகவும் என் பொருளும் என்னறிவும் குன்றிடினும் யான் குன்றேன் கூற்றுவனே வந்தாலும் வென்றிடுவேன் காலால் மிதித்து. துன்பங்கள் அடுத்தடுத்துத் தொடர்ந்து வந்த போதிலும் அவர் கலக்க மடையவில்லை என்பதையே அவரது இக்கவிதை காட்டுகிறது.
தமது இறுதிக்காலத்தில் அவர் காண விரும்பியது சுதந்திரம்; கேட்க விரும்பியதெல்லாம் பாரதியாரின் பாடல்கள்; வணங்க விரும்பியது தேசபக்தர்களின் கூட்டத்தை!

சுவாமி விவேகானந்தர்  யார் தெரியுமா?

 

Mail

* ஒரு பெண்ணை குருவாக ஏற்று, தன் மனைவியையே தெய்வமாக    பூஜித்து, பார்க்கும் ஒவ்வொரு பெண்ணிலும் ஆதிபராசக்தியை கண்டு வழிபட்ட ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரின் முதன்மைச் சீடர்.

* நம்நாட்டுப் பெண்கள் சங்ககாலப் பெண்களைப் போன்று கல்வியில் தேர்ச்சிமிக்கவர்களாகவும், சாதனையாளர்களாகவும் திகழவேண்டும் என்று தணியாத ஆவல் கொண்டு அதற்காகப் பாடுபட்டவர்.

* நமது பாரத நாட்டின் சுதந்திரப் போராட்டத்திற்கு ஆணிவேராய் நின்று வலிமை சேர்த்தவர்.

* திலகர், காந்திஜி, நேதாஜி, அரவிந்தர், பாரதி…. போன்ற கணக்கில்லா பல சுதந்திர போராட்ட வீரர்களை ஊக்குவித்தவர்.

* சிகாகோவில் சர்வமத மாநாட்டில் கலந்துகொண்டு இந்து தர்மத்தையும், பாரத நாட்டின் பெருமையையும் உலகோர் அனைவரும் அறியச் செய்தவர்.

* பாரதத்தை அடிமை நாடாகவும், காட்டுமிராண்டிகளின் நாடாகவும் எண்ணிய மேற்கத்திய நாட்டவரிடம் நமது நாட்டின் உயர்வையும் பெருமையையும் எடுத்துரைத்து உணர்த்தியவர்.

* இன்றும் நம்மிடையே அவரது படைப்புகள் மூலம் வாழ்ந்து, இளைஜர்களுக்கு தேசபக்தியையும், தன்னம்பிக்கையையும் அளித்து வருபவர்.