Feeds:
Posts
Comments

Archive for the ‘ஆசிரியர்’ Category

ஆண்டவா, என்னை ஆச்சாரியனாக்கு!

  •  கல்வி புத்தாண்டைத் தொடங்கும் புத்திளம் புஷ்பங்களே! உங்கள் பள்ளி வாழ்வை வளமாக்க, மங்களப் பொருள்களுடன் உங்களை வரவேற்கிறேன், வாருங்கள்!
  •   படிப்பும், மார்க்கும் வரவில்லை என்று சென்ற ஆண்டில் வாழ்வை முடித்துக் கொண்ட மாணவர்களுக்காக இன்று நாம் அனைவரும் பிராத்திப்போம்.

இந்த மோசமான நிலை எங்கும், என்றும் தொடராதிருக்க, சிலவற்றைச் சிந்தித்து வைத்திருகிறேன். என்னோடு சேர்ந்து சிந்திக்க வாருங்கள்.

  •   என் தோளுக்கு மேல் வளர்ந்துள்ள மாணவர்களே! மேற்கூறிய பிரச்னைகளைத் தீர்த்திட, பொறுப்பை உங்கள் தோள் மீது ஏற்றிக் கொள்ள உங்களை வரவேற்கிறேன்.
  •   இனி நீ பாடசுமையை உணராதபடி சுவையுடன் பாடம் நடத்துவதாகச் சங்கல்பம் எடுத்துக் கொண்டுள்ளேன்.
  • இனி உனது மதிப்பெண்ணை மட்டுமே வைத்து உன்னை மதிப்பதைவிட, உன் தனித்திறன் என்னவென்று கண்டுபிடிப்பதில்தான் என் திறமையே உள்ளது.
  •   ஜுரத்தில் சில தினங்கள் படுத்த பிறகு, நீ பள்ளிக்கு வந்ததும் இனி உன்னிடம் ‘லீவ் லெட்டர் எங்கே?’ என கேட்காமல், ‘இப்போது நீ நலமா?’ என்று கேட்ட பின்பே லீவ் லெட்டரை நினைவுபடுத்துவேன்.

வகுப்பு நிர்வாகம் என்பது முக்கியம்தான். ஆனால் உன் மனநலனும் நட்பும் எனக்கு மிக மிக முக்கியம்.

  •  மாணவ மாணவியே, நீ பள்ளியில் பிறர் அறியாமல் அலைபேசியில் அட்டகாசம் செய்யும்போதும்….,

கிரிக்கெட், இணையதளம், திரைப்படங்கள் என்று பவர்ரிலும் உன் கவனம் ஈர்க்கப்படும்  போதும்….,நான் ஒன்றைக் கற்றேன். அதனால்…., நான் நடத்தும் பாடம் உன் காதுக்கு மட்டுமே போய்ச் சேர்வதாக இனி இருக்காது.

மாறாக, உன் எல்லாப் புலன் அறிவுகளையும் ஈர்க்கும் வகையில் அன்பைக் கூறியோ, செய்து காண்பித்தோ, வேறு வகையில் புரிய வைத்தோ பாடங்களை நடத்தலாம் என்று திட்டமிடுகிறேன்.

  •  இனி வகுப்பில் நான் மட்டுமே பாடம் நடத்துபவராக இல்லாமல், கற்பதையும் கற்பிப்பதையும் நீயும் நானும் சேர்ந்து ஓர் இனிய செயலாக மாற்றிவிடுவோம், வா!

எப்படி ? உனக்கு கிரிக்கெட் பிடிக்குமென்பதால் உன் பாணியிலேயே ஒன்று கூறுகிறேன்.

நீ பந்தை விலாச நிற்கும் ,ஸ்ட்ரைக்கர்’ என்றால் நான் உன் எதிரில் காத்திருக்கும் ‘நான் – ஸ்ட்ரைக்கர்!’

உன் எதிரிலுள்ள நான், வகுப்ப எப்படி வளப்படுத்தலாம் என்று உறுதி கொண்டுள்ளேன்!.

  •   பாடங்களை நடத்தும் போது நீ கேட்பவனாக மட்டுமே இருப்பதால் தான் போரடிக்கிறது. நாம் இருவரும் கலந்து கற்றால் பாடத் திட்டத்தைச் செயல்திட்டமாக மாற்றிவிடலாமே!
  •   என் வகுப்பில் நீ துங்கி விட்டால் நீ என்னை மதிக்க வில்லை என்று கருதி வந்தேன். ஒரு மாற்றுச் சிந்தனையாக உன் கவனைத்தை ஈர்க்க என்ன வெள்ளம் செய்யலாம் என இனி நினைத்துப் பார்ப்பேன்.
  •   வாலிப வயதில் உன் விளையாட்டுப் புத்தியை மேம்படுத்த, உன்னை மன இறுக்கத்தில் வருந்தவிடாமல், விளையாட விடுவேன்.
  •  உனக்கு தெரியுமா, நீ உன் வீட்டில் கண்டிப்பாக ‘ஹோம் ஒர்க்’ செய்ய வேண்டும் என்பதற்காக, நானும் உனக்காக ‘ஹோம் ஒர்க்’ செய்து வருகிறேன் என்று?
  •   நீ என்னிடம் இயல்பாகப் பேசாமல்,என்னிடம் சரளமாகப் பழகப் பயந்தால் எனக்கு வருத்தம் ஏற்படும்.

நீ என்னிடமிருந்து தள்ளி நின்றாலோ, என்னிடம் என் கற்பிக்கும் முறையிலும் என்ன குறை என யோசிப்பேன்.

  •   மாணவர்களே, உங்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இருக்க வேண்டிய உறவுமுறை – பாலுக்கும் நெருப்பிற்கும் உள்ளது போன்றது.

அக்னி சுதேர்ருவதோ பாத்திரத்தை!

பால் இருப்பதோ சூடான பாத்திரத்தில்!

ஆசிரியர் – மாணவர் இருவரது கவனமும் பாத்திரத்தில்தான் ! ஓட்டை  யற்ற பாத்திரத்தில் நான் ஆர்வமெனும் அக்னியைச் செலுத்துகிறேனா  என்பதில் என் கவனம்.

சத் பாத்திரத்தில் உள்ள பாலைப்போல, மாணவ – மாணவியாக நீ இருக்க வேண்டும் என்பதில் உன் கவனமும் இருக்கட்டும்.

  •   நீ வகுப்பக் கவனிக்க வேண்டுமென்றால், விளையாட்டு மைதானத்தில் குதூகலமாகக் குதித்தாடு. அங்கு நீ உடலால் குதிக்க வில்லை என்றால், வகுப்பில் உன் மனம் அங்குமிங்கும் அலைகிறது என்பதை நான் உணர்வேன்.
  •   நீ படிக்க வேண்டிய பாடங்கள் பலப் பல. எனக்கு நேரமில்ல என்றுதான் நானும் பலர் கூறுவது போல் நம்பியிருந்தேன்.ஆனால் ‘நீ என்னை நம்பிக் கற்க வந்தவன்’ என்ற ஓர் எண்ணமே எனக்குப் புதுச் சக்திகளை வழங்குகிறது.
  •   தம்பியே! நீ நுலகத்தை நன்கு பயன்படுத்து வதைப் பார்த்தால், நான் பெரும் ஆனந்தம் கூற முடியுமா?
  •  உங்களைக் கோவிலில் பார்த்தால், ‘இறைவா,என் மாணவர்களைச் சிறந்தவர்களாக்கு’ என் உங்களுக்காக என் மனம் வேண்டிக் கொள்ளும்.
  •  நீ வாலிபன் / யுவதி என்பதை மறந்து, நான் சில சமயத்தில் சற்றுக் கடுமையாக உன்னிடம் பேசி விட்டாலும், நீ அதைப் பெரிதுபடுத்தாதபோது…, எனக்கு எப்படிப்பட்ட  பெருமை   தெரியுமா?
  •   மாணவனே, நீ நினைக்கலாம் உன் விஷயத்தில் நான் மிகவும் விட்டுக் கொடுக்கிறேன் என்று! மற்ற ஆசிரியர்களும் மாணவர்கள் விஷயத்தில் நான் பணிவதாக நினைக்கலாம்.

ஆனால் மாணவனே, ஆசிரியர் எனும் நிலத்தில் வளர வேண்டிய வீரியமுள்ள விதை நீ. விதை வேரூன்றும்போது எந்த நிலமாவது விதை தன்னை மிதிக்கிறது என்று நினைக்குமா, சொல்!

  •   எனக்கே தெரிகிறது, நடத்தும் பாடத்தில் நான் தெளிவாக இருக்கும்போது மாணவர்களே, நீங்கள் மிக மரியாதையுடன் என்னிடம் நடந்து கொள்வது!
  •   தன்னம்பிக்கையுடன் நான் இருந்தால்தான், உங்களுள் சிலர் வாலாட்டாமல் இருக்கிறீர்கள். அந்த வாழை அடக்க, என் அறிவெனும் வாளைக் கூர் தீட்டி வைத்திருந்தால்தான் அது சாத்தியமாகிறது என்பதையும் காண்கிறேன்.
  •   மாணவ – மாணவிகளே! உங்களுள் ஒருவர் மட்டும் ‘டாப்பர்’ ஆகி – அது ‘பேப்பரில்’ வந்துவிட்டால் அதில் எனக்குப் பெருமையிருப்பதாக நான் நினைக்கவில்லை.
  •   இனி, பாட அறிவு என்ற பலம், அது தரும் தைரியம், அதை புகட்டக் கூடிய பண்பு ஆகியவற்றுடன் உன் வகுப்பில் நிமிர்ந்து நிற்பேன். பாடம் கற்க நீ அமைதியாக அமர மாட்டாயா என்ன?
  •   உன் ஆர்வத்தைத் தட்டிவிடாமல், பாடத்தைப் பகட்டுவது துங்கும் குழந்தையின் வாயில் தேனை ஊட்டுவது போல! அதனால் பயனுண்டா என்ன?
  •   உனக்கு ஒரு பிரச்சனை வந்தால், அதை நீக்க நீ யார் யாரையோ, எதை எதையோ தேடி ஓடுகிறாய். உன் நன்மைக்காக நான் உள்ளேன் என்பது உனக்கு அப்போது ஞாபகம் வராவிட்டால் – உன் நம்பிக்கையை நான் பெறவில்லையே என வருந்துவேன்.
  •   மறதி மாணவன் – சிந்திக்கக் கற்காதவன் – தாழ்வு மனப்பான்மை கொண்டவன் – படிப்பே போரிங் என்பவன் – டென்ஷன் பேர்வழி – பரீட்சை பயந்தாங்கொள்ளி – இவர்களுக்குக் கற்பது களிப்பானது என்று காட்டித் தருவதில்தான் இனி என் கரிசனம் எல்லாம்.
  •   வகுப்பில் சில மாணவரை மட்டும் outstanding  என்று துக்கி வைப்பதும், மற்றவரை stand  outside என்றுதள்ளி வைப்பதும் தான் இன்றைய கல்வியின் அவலநிலை. இதன் தாக்கத்தை நான் என் வகுப்பிற்குள் அண்டவிட மாட்டேன்.
  •   வாருங்கள்! உங்களது, கவனம் Mark -கிலும் என் போன்ற ஆசிரியர்களது கவனம் Remark  – கிலும் இருந்தது போதும்.

இனி,  You Are Remarkable என்ற நிலைக்கு வருவதில்தான் உனது கவனமும் எனது முயற்சியும் இருக்க வேண்டும். ஆசிரயரான நான் உன்னை அந்த நிலைக்கு உயர்த்துவேன்.

  •   இந்த மாபெரும் அறப்பணியான  ஆசிரியப் பணியில் மேற் கூரிய வற்றைக்  கடைபிடிக்க நானும் என்னைப் போன்ற ஆர்வமுள்ள ஆசிரியர்களும் ஆண்டு முழுவதும் முயற்சி செய்வோம்.

எங்கள் இஷ்டதெய்வங்களிடம் வேண்டுவோம்.

மாணவர்களே! எங்களது இந்த முயற்சிகள் வெற்றி பெற உங்களது ஒத்துழைப்பும் மிகமிக அவசியம்!

அதன் மூலம் நாங்கள் ஆசிரியர்களாக மட்டும் இருந்து விடாமல், மேலான பொறுப்புணர்வு மிக்க குரு நிலையில்நின்று உங்களை வழிநடத்தும் ஆச்சாரியர்களாக மாறுவோம்!

அதற்கு ஆண்டவா, எங்களுக்கு அருள்புரிவாய்!

–  நன்றி ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம்.

Read Full Post »