Feeds:
Posts
Comments

Posts Tagged ‘education’

Sister-Nivedita-2சகோதரி நிவேதிதை

சகோதரி நிவேதிதை

(பிறப்பு: 1867, அக். 28 – மறைவு: 1911, அக். 13)

1907-ஆம்ஆண்டு நடைபெற்ற பனாரஸ் (காசி) காங்கிரஸ் மாநாடு, பாரதியார் வாழ்வில் பல திருப்பங்களை நிகழ்த்தியது.

அந்த மாநாட்டிற்குச் சென்றுவிட்டு சென்னை திரும்பும் வழியில் பாரதியாரும் அவரது நண்பர்களும் கல்கத்தாவில் சிறிதுகாலம் தங்கிச் செல்லலாம் என்று விரும்பினார்கள். கல்கத்தாவில் டம்டம் என்ற இடத்தில் பழைய காங்கிரஸ் தலைவர் ஸ்ரீ ஆனந்தமோகன் போஸ் என்பவரது இல்லத்தில் தங்கினார்கள்.

ஆனந்தமோகன் போஸின் வீடு பெரிய தோட்டத்தின் நடுவில் இயற்க்கை சூழ மிக ரம்மியமான சூழ்நிலையில் அமைந்திருந்தது. தோட்டத்தின் ஒருபகுதியில் பெரியதோர் ஆலமரம் இருந்தது. அந்த ஆலமரத்தின் அழகும் சூழ்நிலையும் பாரதியாரைப் பெரிதும் கவர்ந்தன.

காங்கரஸ் மாநாட்டிற்குச் சென்று வந்தபடியால் தேசிய உணர்ச்சி மேலிட்டிருந்தது. அந்த ஆலமரத்தின் அடியில் அமர்ந்து இரண்டு பாடல்களை எழுதினார்.  அந்த இடம் பாரதியாரை தீவிர சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடவைக்கப் போகிறது என்பதை அவர் அப்போது அறியவில்லை.

பாரதியாரும் அவரது நண்பர்களும் சென்னை புறப்படுவற்கு முன்தினம் ஆனந்தமோகன் போஸ் கல்கத்தாவில் உள்ள தேசபக்தர்களை அழைத்து ஒரு சிறிய கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார்.

அந்தச் சமயம் கல்கத்தாவில் சகோதரி நிவேதிதா தேவி , நிவேதிதா பெண்கள் உயர்நிலைப் பள்ளி நடத்தி தேசப்பணியில் ஈடுபட்டுவந்தார்.  ஆனந்த மோகன்போஸ் வீட்டில் அடிக்கடி நடத்தப்படும் ரகசியக் கூட்டங்களில் அவர் கலந்துகொள்வார். பாரதியாரும் அவரது நண்பருகாக ஏற்பாடு செய்த அக்கூட்டத்தில் கலந்துகொண்டார்.

கூட்டம் முடியும் தறுவாயில் பாரதி தன்னை நிவேதிதா தேவியிடம் அறிமுகப்படுத்திக் கொண்டது மட்டுமல்லாமல், தான் இயற்றிய சில பாடல்களையும் பாடிக் காட்டினார். பெரிதும் மகிழ்ந்தார் நிவேதிதா தேவி.

இனி அங்கு என்ன நடந்தது என்பதை பாரதியாரே கூறுகிறார்….

“திடீரென்று அவர் (நிவேதிதா தேவி)  மிக மகிழ்ச்சியுடன் வந்து, என் கையைப் பிடித்திழுத்து வீட்டிற்கு வெளியே தோட்டத்திற்கு அழைத்துச் சென்றார்.

நானும் என்னை அறியாமலேயே அவரைப் பின்தொடர,  இருவரும் என்னைக் கவர்ந்த அந்த ஆலமரத்தடிக்கே வந்து நின்றோம். உடனே அன்னை  “அதோபார் பாரதமாதா !” என்றார்.  நான் மிக வியப்புடன் அவர் காட்டிய திக்கை நோக்கி, இரு கண்களும் விரிய விழித்தேன்.

என்னஆச்சரியம்!  என்னை பாரதமாதாவின் சொரூபம் ஆகாயத்தை அளாவி நிற்பதைக் கண்டேன் ! என்மெய்சிலிர்த்தது ! நாதழுதழுத்தது ! அப்படியே அந்தத் தோற்றத்தில் மெய்மறந்து நின்றுவிட்டேன்…

நிலைபெயராது சிலையாக நின்ற என்னை, அந்தச் சொல்லற்கரிய தேவியின் திவ்யசொருபம் அப்படியே கட்டிப்போட்டு விட்டது.  திரும்பவும் பரிவும் அன்பும் கூடிய நிவேதிதா தேவியின் இனியகுரல் என்னை சுயநிலைக்கு அழைத்தது.

அப்போது நிவேதிதா தேவி,  “பார்த்தாயா ! உன் கவித்திறமையை பாரதமாதா, சுதேசி சேவைக்கே உபயோகிக்க வேண்டுகிறாள். அன்னையின் விருப்பமும் கட்டளையும் அது தான். உடனே நீ [உன்னை] அர்ப்பணம் செய்து, கிடைப்பதற்கரிய மாதாவின் வரப்பிரசாதத்தைப் பெற்றுக்கொள்” என்று உத்தரவிட்டார்.

நான் மீண்டும் மீண்டும் பலமுறை பாரதமாதாவின் தோற்றம் இருந்த திசையை நோக்கி வணங்கி நிமிர்ந்தேன். அந்தத் தோற்றம் மறைந்தது.  குருமணி தேவி அதே அருளும் அன்பும் கலந்த பார்வையுடன் என்னைப் பார்த்து நின்றார்.

பாரதமாதாவின் தோற்றமும் தரிசனமும் கிடைத்த இடத்திற்கு அருகில் இருந்த ஆலமரக் கிளையிலிருந்து,  குருமணி நிவேதிதா தேவி ஒரு ஆலிலையைப் பறித்தார். அதை உடனே அவர், உடல் பொருள் ஆவி அனைத்தையும் அர்ப்பணித்துத் தொழுது நிற்கும் என்னிடம் ஆசி கூறிப் பிரசாதமாக அளித்தார்.

இந்த அருளும் அனுபூதியும் கிடைத்ததால் தான், என் நாவிலிருந்து பிரசண்டமாருதம் போல் தேசியகீதங்கள்,  தேசபக்தியை ஊட்டுவிக்கும் பாக்கள், தேசத்தைத் தட்டியெழுப்பும் கவிதைகள் வெளிவரலாயின”

-என்கிறார் பாரதி.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு நிவேதிதா தேவி பாரதியின் வழிகாட்டியாய்,  ஞானகுருவாய் விளங்கினார்.  பாரதியார் அவரை  ‘அன்னை’ என்றே அழைத்தார். குருவின் அருள்பெற்றதும் பாரதி குருஸ்தோத்திரமும் பாடினார்.

அந்த குரு ஸ்தோத்திரம் இது…

அருளுக்கு நிவேதனமாய், அன்பினுக்கோர்

       கோயிலாய், அடியேன் நெஞ்சில்

இருளுக்கு ஞாயிறாய் எமதுயர் நாடாம்

       பயிர்க்கு மழையாய், இங்கு

பொருளுக்கு வழியறியா வறிஞர்க்குப்

      பெரும்பொருளாய்ப் புன்மைத் தாதச்

சுருளுக்கு நெருப்பாகி விளங்கிய தாய்

      நிவேதிதையைத் தொழுது நிற்பேன்!

பாரதியார் உணர்ச்சி ததும்பும் பாடலைப் பாடுவதற்கும்,  தீவிரமாக சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடுவதற்கும் சகோதரி நிவேதிதா தேவியே காரணமாக இருந்தார்.

‘தேசியகீதங்கள்’ நூலின் சமர்ப்பணத்தில் தன் குருவாகிய நிவேதிதா தேவியே அந்தப் பாடல்களுக்குக் காரணமாவர்”  என்று புகழ்ந்து பெருமையுடன் பாரதியார் சமர்ப்பணம் செய்திருக்கிறார்.

Read Full Post »

கல்விமுறை

பண்டைய காலத்தில், ஏன் ஆங்கிலேய ஆக்கிரமிப்புக்கு முந்தைய அண்மைக்காலம் வரை, தற்போது முறைசாராக் கல்வி என்று அழைக்கப்படும் குருகுல வழிக்கல்வி முறையே இந்திய சமூகத்தில் நடைமுறையில் இருந்து வந்துள்ளது. கிட்டத்தட்ட முற்றிலுமாக ஒழிந்து போய்விட்ட இம்முறை பற்றியும் அதன் சிறப்புக்கள் பற்றியும் இன்று பலர் மறந்து போய் விட்டார்கள் என்பது மிகவும் கவலைக்குரிய விடயம்.

குருகுலம் என்றால் என்ன?

ஏதாவது ஒரு கலையை அல்லது கல்வியைப் பயில விரும்பும் மாணவன் ஒருவன், முதலில் ஒரு குருவைத் தேர்ந்தெடுத்து அவரை அணுகுவான். அவரும் அவன் உண்மையில் கற்பதற்கு ஆர்வமாக உள்ளானா, அக்கல்வியைக் கற்பதற்கு அவனுக்குத் தகுதி உள்ளதா என்பன போன்றவற்றை அறிவதற்கு சில சோதனைகளை வைத்து அதில் அவன் தேர்வு பெற்றுவிட்டால் அவனைத் தனது குருகுலத்தில் சேர்த்துக் கொள்வார். அவனும் குருவுடனேயே தங்கியிருந்து அக் கலையை/கல்வியை பயில்வது தான் குருகுலக் கல்விமுறை.

அதில் என்ன சிறப்பு?

அங்கே கடமை-கண்ணியம்-கட்டுப்பாடு போன்ற ஒழுங்கு முறைகள் மாணவன் பயிலும் கலைக்கு மேலதிகமாகக் கற்பிக்கப் பட்டது. காலை எழுந்து காலைக் கடன்கள் மற்றும் யோகப்பயிற்சி முடித்து விட்டு குளித்தலில் இருந்து குருவுக்குத் தேவையான தொண்டுகள் முதற்கொண்டு அவனுக்கு வழங்கப்பட்ட கடமைகளை நிறைவேற்றுதல் மூலம் அங்கே ‘கடமை’ என்றால் என்ன என்பது கற்பிக்கப்பட்டது.

குருகுலத்தில் வயதில் கூடிய பெரியோர்களை மதித்து நடத்தல்; சக மாணவர்களுடன் ஆரோக்கியமான போட்டிகளில் மட்டுமே ஈடுபடல்; எவ்வளவு திறமைசாலியாக இருந்தாலும் நாவடக்கம் பேணுதல் போன்றவற்றின் மூலம் அங்கே ‘கண்ணியம்’ என்றால் என்ன என்பது கற்பிக்கப்பட்டது

குருகுலத்தில் பல சட்டதிட்டங்கள் இருக்கும்; அது மாணவனுக்கு குருவால் அறிவுறுத்தப் பட்டிருக்கும்; உதாரணமாக சில குறிப்பிட்ட கட்டளைகளை குறிப்பிட்ட நேரத்தில் முடிக்க வேண்டியிருக்கும்; உதாரணமாக வாய்ப்பாட்டு, நடனப் பயிற்சிகள் இளவெய்யில் முடியுமுன் முடிந்துவிடும்; அப்போதுதான் குரல்வளம், உடல் வளம் சிறக்கும். இது போன்ற சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்பட்டு நடத்தல் மூலம் ‘கட்டுப்பாடு’ என்றால் என்ன என்பதும் கற்பிக்கப்பட்டது.

இந்த மூன்றையும் (கடமை-கண்ணியம்-கட்டுப்பாடு) தான் பயிலும் கலைக்கு மேலதிகமாக பயின்று குருகுலத்தில் இருந்து வெளிவரும் நல்ல நடத்தையுள்ள மாணவனே நாட்டிற்கு நல்லதொரு குடிமகனாகவும் வீட்டிற்குப் பயனுள்ளவனாகவும் இருந்தான் என்பது வரலாறு காட்டும் உண்மை.

குடியேற்ற நாடுகளில் தங்கள் நிர்வாகம் செய்ய இங்கிலாந்தில் இருந்து அலுவலர்களைக் கொண்டு வந்தனர். அது சுரண்டிய பொருளாதாரத்தில் கணிசமான பகுதியை உறிஞ்சியது. ஆக, அடிநிலை, இடைநிலை நிர்வாகத்திற்குத் தேவையான அலுவலர்களை உள்ளூரில் உருவாக்கினர். கணிதம், ஆங்கிலத்தை உள்ளடக்கிய பாடத்திட்டத்தை மிசனரி பாடசாலைகளில் புகுத்தினர். கற்றுத் தேறியவர்களுக்குச் சான்றிதழ் கிடைத்தது. கூடவே வேலையும் கிடைத்தது. படிப்பு முடிய சான்றிதழ் கிடைக்கும் வகையிலான தமது கல்வி முறையில் படித்து முடித்தவர்களுக்கே வேலை என்பதை நடைமுறைப்படுத்தியதன் மூலம் குருகுலக் கல்விமுறை மெல்ல மெல்ல தளர்ந்து, நலிந்து, ஒழிந்தது. தமது கல்விக்கு, கல்விமுறைக்கு முற்றிலுமாக எம்மை அடிமைப் படுத்திக் கொண்டார்கள் புத்திசாலிகளான ஆங்கிலேயர்கள். இப்படித்தான் இந்தியர்கள், ஆங்கிலக் கல்விமுறைக்கு அடிமையாகி அவர்களின் நடை-உடை-பாவனைகளுக்கு அடிமையாகி இறுதியில் ஆங்கிலேயர்களுக்கே அடிமையான கதை. அந்த அடிமைத்தனம் இன்றும் தொடர்வதுதான் வேதனையான சோதனை. ஆம் ஆங்கிலேயர் உட்பட்ட பல்வேறு வேற்றுமொழி ஆக்கிரமிப்பாளர்களால் பல்வேறு காலகட்டங்களில் இந்தியர்கள் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி அவர்களிடம் அடங்கி அடங்கி ஒரு அடிமைத்தனம் தமிழர்களுக்கு நிரந்தரமாகவே வந்துவிட்டது!

இன்றைய கல்வி :

ஆங்கிலேயரின் கல்வியில் கடமை-கண்ணியம்-கட்டுப்பாடு என்பனவற்றிற்கு தற்போது பார்க்கப் போனால் துளியளவும் இடம் இல்லையென்று சொன்னாலும் பொருந்தும். வேண்டுமானால் இங்கு பல்கலையில் பயிற்றுவிக்கும் பேராசிரியர்களையோ பாடசாலையில் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களையோ மாணவர்களின் நடத்தையைப் பற்றிக் கேட்டுப் பாருங்கள்; நாம் சொல்லும் உண்மை புரியும்! கற்பிக்கப்படும் நேரத்தில் சகமாணவனுடன் பேசுதல்; உணவு உண்ணல்; எழுந்து வெளியே செல்லுதல்; ஆசிரியரை மதித்து நடக்காமை; குற்றச் செயல்களில் ஈடுபடுதல் போன்றன இதற்கு சில உதாரணங்களாகும். இதற்கு மேலதிக உதாரணமாக மேற்கத்தியக் கல்விமுறையில் பயின்று வெளிவந்த எமது தமிழ்ப் பிள்ளைகளைப் பாருங்கள்; அவர்களில் எத்தனை பேருக்கு கடமை-கண்ணியம் கட்டுப்பாடு என்பன இருக்கிறது? இருந்தால் எவ்வளவு வீதம் இருக்கிறது என்று சோதித்துப் பாருங்கள்; மேற்கத்தியக் கல்விமுறையின் வண்டவாளங்கள் தெரியும். மாணவன் எவ்வளவு திறமைசாலியாக இருந்தாலும் பெரியோர்களை கனம் பண்ணுதல், நாவடக்கம், ஆரோக்கியமான போட்டி, பண்பாக நடந்து கொள்ளுதல் போன்ற நன்நடத்தை இல்லாவிட்டால் அம்மாணவனால் நாட்டிற்கும் வீட்டிற்கும் அவன் சார்ந்த சமூகத்திற்கும் ஏன் உலகிற்கும் என்ன பயன்?

தவிர இன்றைய கல்விமுறையில் படித்து வெளிவந்த மாணவர்கள் வேலைக்கு முயற்சி செய்யும்போது, அவர்களிடம் என்ன KASH (K-Knowledge, A-Attitude, S-Skill, H-Habit) இருக்கிறது என்பதை வைத்துத்தான், அவர்களுக்கு வேலை கொடுக்கலாமா? வேண்டாமா? என்று வேலைவாய்ப்பு நிறுவனங்களால் தீர்மானிக்கப் படுகிறது. இது தெரிந்துதானே எமது குருகுல முறையில் கலைக்கு/கல்விக்கு மேலதிகமாக கடமை-கண்ணியம்-கட்டுப்பாடு மற்றும் மேலும் பல விடயங்களைச் சொல்லிக் கொடுத்தார்கள். இப்போதைய கல்வி முறையில் இவை சொல்லிக் கொடுக்கப் படுவதில்லை. மாணவன் வேறு விதமாகக் கற்றுக் கொண்டால் ஒழிய அம்மாணவனிடம் இவை இருக்கக் காரணமில்லை.

 ஆக, தற்போது கல்வி என்பதே வியாபாரமாக ஆகிப் போய் விட்ட நிலையில், மீண்டும் குருகுலக் கல்விமுறை நடைமுறைப்படுத்தப் பட்டால் தான், குறைந்தது இந்தியர்களான எமது பிள்ளைகள் நன்நடத்தை பயின்று நாட்டுக்கும் வீட்டுக்கும் அவர்கள் சார்ந்த சமூகத்திற்கும் பயனுள்ளவர்களாக இருப்பார்கள். இவற்றை எமது தாய்நாட்டு அரசாங்கங்கள் உணர்ந்து செயற்படுவது அவசியம். ஆனால் அரசியலால் சீரழிந்து போயுள்ள எமது நாடுகளின் அரசாங்கங்கள் தமது மற்றைய கடமைகளையே சிறப்பாகச் செய்து முடிக்க முடியாமல் இருக்கும் போது அவர்கள் இதை நடைமுறைப்படுத்த முயற்சிப்பார்கள் என்று எதிர்பார்ப்பது வீண். ஆனாலும் எமது நாடுகளில் இன்றும் பணபலம் கொண்ட தனிப்பட்ட சிலர் இம்முறையை நடைமுறைப்படுத்த முயற்சி மேற்கொண்டுதான் இருக்கிறார்கள்.

வெளிநாடுகளில் குருகுல வாசக்கல்வி முறை நடைமுறைப் படுத்த முடியாது என்றாலும் அது போன்ற ஒன்றை விடுமுறைக்காலங்களில் மட்டுமாவது எமது சிறார்களுக்கு நடைமுறைப் படுத்தலாமே! உதாரணமாக வெளிநாடுகளில் உள்ள பல்வேறு தமிழ் அமைப்புக்கள், ‘தமிழ்ப்பாடசாலை’ என்ற, தமிழ்ப்பிள்ளைகளுக்குத் தமிழ் கற்பிக்கும் வகுப்புக்களை நடத்திக் கொண்டு இருக்கின்றன. இவை பொதுவாக சனி-ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில் மட்டுமே நடத்தப்பட்டு வருகிறது. இவற்றை விட மாதம் ஒருமுறை மற்றும் முடிந்தால் பாடசாலை விடுமுறைகளிலும், பெரியவர்களின் வழிநடத்தலின் கீழ், குருகுலம் போன்றதொரு கல்வி முறையை நடத்தி, அங்கே தமிழ் மற்றும் இந்த்திய கலாச்சார கற்பித்தலும் மேலதிகமாக கடமை-கண்ணியம்-கட்டுப்பாடு போன்ற நன்நடத்தைக்கு உதவும் பல்வேறு விடயங்களையும் கற்பிக்கலாமே!

Read Full Post »

       மக்களுக்கு நமது கடமை

          இந்தியாவில் உள்ள தீமைகள் அனைத்திருக்கும் வேறாக இருக்கின்ற ஒரே விஷயம் ஏழைகளின் நிலைமை. மேலை நாட்டின் ஏழைகள் பேய் பிசாசுகள்; அவர்களுடன் ஒப்பிட்டால் நமது ஏழைகள் தேவதைகள். எனவே நமது ஏழைகளின் நிலைமையை உயர்த்துவது மிக எளிது. நமது நாட்டின் தாழ்ந்த வகுப்பினர்க்குச் செய்ய வேண்டிய ஒரே சேவை கல்வி அளிப்பது. அவர்கள் இழந்த தனித்துவத்தை மீண்டும் பெறச் செய்வது. நமது நாட்டின் மக்களும் மன்னர்களும் செய்ய வேண்டிய பெரும் பணி இதுவே. இதுவரையில் இந்த துறையில் ஒன்றுமே செய்ய பட வில்லை. புரோகித ஆதிக்கம் , அன்னியரின் ஆக்கிரமிப்பும் நூற்று ஆண்டுகளாக அவர்களைக் கீழே தள்ளி மிதித்து வந்துள்ளன. இறுதியில் இந்தியாவின் ஏழைகள் தாங்கள் மனித பிறவிகள் என்பதையே மறந்து விட்டனர். அவர்களுக்கு கருத்துகளை அளிக்க வேண்டும். தாங்களை சுற்றி உலகில் என்ன நடக்கிறது என்பதை அறியுமாறு அவர்களின் கண்கள் திறக்க பட வேண்டும். பிறகு அவர்கள் தங்கள் உயர்வை தாங்களே தேடிக் கொள்வார்கள். ஒவ்வொரு நாடும், ஒவ்வொரு ஆணும் , ஒவ்வொரு பெண்ணும் தங்கள் உயர்வை தாங்களே தேடிக்கொள்ள  வேண்டும். கருத்துக்களை  அவர்களுக்கு கொடுங்கள் – வேண்டிய உதவி அது ஒன்றே. மற்றவையெல்லாம் அதன் விளைவாக தொடர்ந்து  வந்தே தீரும். ரசாயனப் பொருட்களை சேர்த்து வைப்பது நமது வேலை, இயற்கை நியதிக்கு ஏற்ப படிகமாதல் தானாகவே நிகழும். அவர்களின் மூளையில் கருத்துகளை புகுத்துவது நமது கடமை, பிறவற்றை அவர்கள் செய்து கொள்வார்கள், இந்தியாவில் செய்ய வேண்டியது இதுதான்.

           ஏழைகளுக்கு கல்வி அளிப்பதிலுள்ள பெருங் கஷ்டம் இதுதான் . நீங்களே கிராமந் தோறும் இலவச பள்ளி ஒன்றை ஏற்படுத்துகீரிகள் என்று வைத்து கொள்வோம். அதனால் எந்த நன்மையும் வராது. ஏழை சிறுவர்கள் பள்ளிக்கு வருவதை விட வயல்களுக்கு சென்று தங்கள் தந்தைக்கு உதவுவார்கள், அல்லது வேறு வழியில் பிழைப்புக்கு வழி தேட முயல்வார்கள். இந்தியாவில் வறுமை அவ்வளவு கடுமையானது. எனவே மலை முகமதுவை  நாடி வாரவிட்டால் , முகமது மலையை நாடி செல்ல வேண்டும். ஏழை சிறுவன் கல்வியை நாடி வர முடியாவிட்டால், கல்வி அவனிடம் செல்ல வேண்டும். நமது நாட்டில் திட சித்தமுள்ள சுயநலமற்ற துறவிகள் உள்ளனர். அவர்கள் கிராமம் கிராமமாக சென்று மதத்தை போதிக்கவே செய்கின்றனர். அவர்களுள் சிலரை உலக விஷியங்களையும் போதிக்கின்ற ஆசிரியர்களாக்க முடியுமானால், அவர்கள் பல்வேறு இடங்களுக்கும் சென்று , வீடு வீடாக மத போதனை செய்வதுடன் உலகக் கல்வியும்  அளிப்பார்கள். இவர்களுள் இருவர் மாலை வேளைகளில் ஒரு கிராமத்திற்கு போகலாம்; காமார, பூகோளம் , தேசப் படங்கள் இவற்றில்  உதவியுடன் பாமர மக்களுக்கு வான இயல் , புவியியல் என்று எவ்வளவோ சொல்லித்தரலாம். பல்வேறு நாடுகளை பற்றிச் சொல்லலாம். ஆயுள் முழுவதும் நூல்களைப் படித்து அறிவதை விட நூறு மடங்கு அதிகமானவற்றை அவர்கள் இவ்வாறு செவி வழியாகக் கற்க முடியும்.

மறுபடியும் கல்வி கற்பதாக இருந்தால் வெறும் புள்ளி விவரங்கள் அடங்கிய கல்வி விபரங்களை நான் படிக்க மாட்டேன். முதலில் மனதை ஒருமுகப்படுத்தும் ஆற்றலையும், நல்ல பண்பாட்டினையும் வளர்த்துக் கொள்வேன். அதன்பிறகு, மனம் பண்பட்டு விடும். மனம் என்னும் பண்பட்ட கருவி கொண்டு நினைத்த நேரத்தில் உண்மைகளை அறிந்து கொள்வேன்.கல்வி என்பது மூளைக்குள் பல விஷயங்களைப் போட்டு திணித்து வைப்பதன்று. அப்படி திணிக்கப்படும் அந்த விஷயங்கள் வாழ்நாள் முழுவதும் அஜீரணத்தால் உனக்குத் தொந்தரவு கொடுத்துக் கொண்டே இருக்கும்.

–சுவாமி விவேகானந்தா

Read Full Post »

              இந்தியாவில் மாற்றம் வருமா? 

             இந்தியா ஒரு காலத்தில் கலை, கல்வி, பண்பாடு, ஒழுக்கம், அறிவியல், உழைப்பு, கற்பு, எந்த நிலையிலும் நீதியை நாட்டுவது என அனைத்திலும் உயர்ந்த நிலையில் இருந்தது. மக்களின் வாழ்க்கை நிலையும் உயர்ந்த நிலையில் தான் இருந்தது. பசி, பட்டினி என்பதும் மிக மிக குறைவு.

அதேபோல் இதே இந்தியா தான் நீதியை நிலை நாட்ட மகனை தேரின் சக்ரத்தால் ஏற்றி கொன்ற மனு நீதி சோழன், மயில் குளிரால் வாடிய போது தன் போர்வையை போர்த்திய பேகன் போன்ற உயர்ந்த குணம் கொண்ட மன்னர்களையும், 2000 ஆண்டுகளுக்கு முன்பே மூளையில் இருந்த கட்டியை அறுவை சிகிச்சை மூலம் சரி செய்த சுஸ்ருதர் போன்ற மருத்துவ அறுவை சிகிச்சை விஞ்ஞானியையும், எந்த நோயையும் குணப்படுதும் வல்லமை கொண்ட பல சித்த மருத்துவர்களையும், வான்வெளியை பற்றி நன்கு அறிந்த ஆரியபட்டர் என்ற வானியல் விஞ்ஞானியையும், கணித மேதை பாஸ்கராச்சாரியர் போன்றோரையும் பெற்றிருந்தது. ஆகாய விமானம் தயாரிப்பது பற்றிய குறிப்புகளும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம்மிடம் இருந்துள்ளது.

மேலும் 1500ஆண்டுகளுக்கு முன்பே தரமான கட்டடம் கட்டும் தொழில்நுட்பம், பெரிய கப்பல் கட்டும் தொழில்நுட்பம், கலைநயம் மிக்க ஆடைகளை தயாரிக்கும் தொழில்நுட்பம் போன்ற பலவகை தொழில்நுட்பத்தையும் பெற்று இருந்தோம்.

அதேபோல் 1500 ஆண்டுகளுக்கு முன்பே 10,000 மாணவர்கள் படித்த நாளந்தா பல்கலைக்கழகம், 4000 ஆண்டுக்களுக்கு முற்பட்ட சிந்து சமவெளி நாகரீகமும், சமஸ்கிருதம், தமிழ் போன்று உலகின் பழமையான செம்மொழிகளையும் பெற்றிருந்த நாடு இது. இதில் சிறப்பு என்னவென்றால் 2000 ஆண்டுகளுக்கு முன்பே ஒரு மொழிக்கு இலக்கணம் எழுதப்பட்டது அநேகமாக நம் தமிழ் மொழிக்கு மட்டுமே. ஆனால் உலகின் பல மொழிகளுக்கு அப்போது எழுத்து வடிவமே கிடையாது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் மொழிக்கு இலக்கணம் எழுதிய தொல்காப்பியன், இரண்டே அடியில் மனிதன் வாழ்க்கையின் அனைத்து நிலைகளுக்கும் பொருந்தும் நெறிகளையும் சொன்ன வள்ளுவன், “வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன்” என்று சொன்ன வள்ளலார் போன்ற உலகின் தலை சிறந்த மாமனிதர்கள் வாழ்ந்த நாடு இது.

1835  இல் மெக்காலே பிரபு பிரிட்டன் அரசுக்கு கடிதம் எழுதும் போது, “இந்தியாவில் பிச்சைக்காரர்கள், திருடர்களை காண்பது அரிதாக உள்ளது. மேலும் நிறைய செல்வங்களும், வளங்களும் உள்ளது” என எழுதி உள்ளார். அதன் பின் தான் பிரிட்டிஷ்காரர்கள் இந்தியாவை அடிமையாக்கி வளங்களை கொள்ளையடித்தார்கள். ஆக 200 ஆண்டுகளுக்கு முன்னர் கூட நமது இந்தியாவில் செல்வங்கள், வளங்கள் அதிகமாகவும், பிச்சைக்காரர்களும், திருடர்களும் குறைவாகவே இருந்திருக்கிறார்கள்.

ஆனால் தற்போதைய இந்தியாவின் நிலை என்ன?

பல உத்தமர்களும், நீதிமான்களும் வாழ்ந்த இந்த நாட்டில் தான் இப்போது ஊழல் என்பது மிக சாதாரண விஷயமாகவும், கொலை, கொள்ளை, லஞ்சம் என்பது அதை விட மிக சாதாரண விஷயமாகவும் எடுத்துக்கொல்லபடுகிறது. தவறு செய்தவர்கள் சுதந்திரமாக வெளியில் நடமாட முடியும். ஆனால் இன்று நேர்மையாக ஒருவர் இருந்தால் அவரால் நிம்மதியாக வாழ முடியுமா?

அக்காலத்தில் 64 ஆயக்கலைகளையும் நன்கு கற்றறிந்தவர்கள் பலபேர் இருந்தார்கள். ஆனால் இன்று 64 ஆயக்கலைகளின் பெயர்களையாவது தெரிந்தவர்கள் எதனை பேர்? உயர்ந்த நமது பண்பாடு மேற்கத்திய கலாச்சாரத்தால் அழிந்து வருகிறது. உலக மக்கள் பலர் நமது பண்பாட்டை உயர்ந்தது என்று கூறும் போது நாம் நம் கலாச்சாரத்தை ஏன் மதிப்பது இல்லை?

பெண்களை தெய்வமாக வணங்கிய இந்த நாட்டில் இப்போது கற்பழிப்புகளின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் போய்விட்டது. பெற்ற தந்தையே தன் மகளிடம் தவறாக நடந்து கொள்ள முயலும் கொடுமையும் நடக்கிறது. ஒருவனுக்கு ஒருத்தி என்ற நீதியை மறந்து இன்று கள்ளக்காதல் பெருகி விட்டது. கள்ளக்காதலை காத்துக்கொள்ள பெற்ற தாய் தன் குழந்தையை கூட கொள்ளும் கொடுமை அதிகமாகி வருகிறது.

இன்றைய குழைந்தைகளுக்கு பெற்றோர்கள் நமது முன்னோர்களின் வீரம், ஒழுக்கம், பெருமைகள் பற்றி எதுவும் சொல்வதில்லை. ஏன் என்றால் அவர்களுக்கே அது தெரியாது, அப்படியே தெரிந்தாலும் சொல்வதும் மிக குறைவு. அதேபோல் கல்விக்கூடங்களும், பெற்றோர்களும் மாணவர்களுக்கு ஒழுக்கத்தை கற்றுத்தர முக்கியத்துவம் கொடுப்பதில்லை.

உலகின் பிற நாடுகளில் நிறைய புதிய கண்டுபிடிப்புகள் கண்டுபிடிக்கப்படுகிறது. அந்நாடுகளின் அரசும் அதை ஊக்குவிக்க நிறைய நிதி உதவி செய்யப்படுகிறது. ஆனால் நமது நாட்டில் அதை பற்றி யாரும் கவலை கொள்வதே கிடையாது. இந்தியாவில் அமையும் அரசுகள் புதிய கண்டுபிடிப்புகள் கண்டுபிடிக்க அதிக நிதி ஒதுக்குவதும் இல்லை, அப்படியே ஒன்று கண்டுபிடித்தாலும் அதை ஊக்குவிப்பதும் இல்லை. ஒவ்வொரு அரசியல்வாதியும் எவ்வளவு கொள்ளை அடிக்க முடியும், கொள்ளை அடித்துவிட்டு அதில் இருந்து தப்பிப்பது எப்படி? என்று மட்டுமே தான் சிந்திக்கிறார்கள்.

நமது கல்வி முறையும் மனப்பாடம் செய்து எழுதுவதையே ஊக்குவிக்கிறது. பிற நாட்டில் உள்ளது போல் செயல்முறை கல்வி இங்கு இல்லாததும் ஒரு காரணம். மாணவர்கள் சிந்தனையை துண்டும் விதமாகவும் , புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பாதாகவும் கல்விமுறையை மாற்றியமைக்க வேண்டும்.

சினிமாவும், கிரிக்கெட்டும் நமது நாட்டின் இரண்டு கண்களை போல் ஆகிவிட்டது. கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் இவர்களில் ஏழைகளின் வாழ்க்கை முன்னேற உதவி செய்பவர்கள் எத்தனை பேர்? இவ்வளவு சம்பாதிக்கும் இவர்களுக்கு வரி கட்டுவதில் இருந்து கூட விலக்கு அளிக்கப்படுகிறது. மக்கள் உயிரை காப்பாற்ற தன் உயிரைவிட்ட இராணுவ வீரர்களுக்கு கிடைக்கின்ற மதிப்பை விட இவர்களுக்கே புகழும், மதிப்பும், பெருமையும் அதிகம்.

 சினிமா ஒரு பொழுதுப்போக்கு என்று கூறிக்கொண்டு அதிக ஆபாசம் காட்டப்படுகிறது. இன்றைய படங்களில் பெரும்பாலும் காதல் மட்டுமே சொல்லப்படுகிறது. அதிலும் “இளம் பருவத்தில் உள்ள ஒரு ஆண், பெண்ணின் மீது கொண்டுள்ள காதல் எப்படி கல்யாணத்தில் முடிகிறது”, “காதலை எப்படி வித விதமாக செய்வது” என்ற கதையை கொண்ட சினிமாபடங்களே அதிகம். இந்த மாதிரியான கதை கொண்ட சினிமா படங்கள் நாட்டிற்கும், நாட்டில் உள்ள மக்களின் வாழ்க்கை நிலை உயர வழி வகுக்குமா?.

இளம்பருவத்தில் ஏற்படும் காதல் மட்டும் தான் ஒரு மனிதனின் வாழ்க்கையில் முக்கியமா? சினிமாவில் காட்டப்படும் இது போன்ற கதைகளால் நம்ம இளைஞர்களும் அவர்களின் அதிஉன்னதமான இளமை பருவத்தை பாழ்படுத்திக் கொள்வதோடு,  நாட்டின் கலாச்சாரத்தையும் சீரழிக்கிறார்கள்.

அதேபோல் பெண்களுக்கு சம உரிமை என்பதும் இன்னும் ஒரு சொல்லாக மட்டுமே உள்ளது. இன்றைய பெண்களில் பெரும்பாலானோர் தங்களின் தோற்றத்தின் அழகை எப்படி கூட்டுவது? அழகாக எப்படி ஆடை அணிவது? என்பதை பற்றி சிந்திப்பதே அதிகம்.

இன்றைய பெண்களில் நாட்டு நடப்பை தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுபவர்கள் எத்தனை பேர்? தங்களின் திறமையையும், அறிவையும் நிரூபித்தவர்கள் மிக குறைவு. தினசரி பத்திரிக்கைகளை படிக்கும் பெண்களும், தொலைக்காட்சியில் வரும் செய்திகளையும் பார்ப்பவர்களும் எத்தனை பேர்? ஆனால் தொலைக்காட்சியில் வரும் தொடர் நாடகங்களை பார்க்கும் பெண்களின் எண்ணிக்கை எவ்வளவு என்று நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரிய வேண்டுமென்பதில்லை.

அரசியல் பற்றி நான் சொல்லித்தான் தெரிய வேண்டுமென்பதில்லை. ஜாதி, மதங்களை ஒழிக்கின்றோம் என்று கூறிக் கொன்று நாட்டில் மத கலவரங்களை தூண்டி விடுகிறார்கள். இன்றைக்கு தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெரும் பாலும் அதிக பணம் கொண்டவர்களாகவும், அதிக குற்ற வழக்குகள் கொண்டவர்களாகவும் உள்ளார்கள். இவர்கள் அரசியல் வாதியாக வரும்போது ஏழைகள் பற்றியும்,நாட்டில் குற்றங்கள் குறைய புதிய வழிமுறைகள் பற்றியும் எப்படி சிந்திப்பார்கள்.

சுவாமி விவேகானந்தர் கூறியது:

புதிய இந்தியா ஒரு புறம் சொல்கிறது ; “மேலை நாட்டுக் கருத்துக்கள் ,மொழி ,உணவு ,உடை ,நடைமுறைகள் ஆகியவற்றை நாம் பின்பற்றினால்தான் ,மேலை நாட்டினரை போன்று நாமும் உறுதியும் ஆற்றலும் உடையவர்கள் ஆவோம் .”

 மறுபுறம் பழைய இந்தியா சொல்கிறது ;”முட்டாள்கள் ! மற்றவர்களுடைய கருத்துக்களை குருட்டுத்தனமாகப் பின்பற்றுவதனால் ஒருநாளும் அவை ஒருவனுக்கு சொந்தோம் ஆகிவிடா. உழைத்துப் பெற்றாலன்றி எதுவும் உனக்குக்ச் சொந்தோம் ஆகி விட முடியாது . புலியின் தோளைப் போர்த்திகொண்ட பசு , புலியாகிவிடுமா?”

 புதிய இந்தியா சொல்கிறது :”மேலை நாடுகள் செய்வது நிச்சியம் சரியாகத்தான் இருக்கும் .இல்லாவிட்டால் அவை எப்படி இவ்வளவு பெருமை உடையவையாக ஆகியிருக்க முடியும் ?”

 மறுபுறம் பழைய இந்தியா சொல்கிறது ;”மின்னலின் ஒளி மிகவும் நன்றாகத்தான் பிரகாசிக்கும் . ஆனால் அது ஒரு கணம்தான் .குழந்தைகளே ! உங்கள் கண்களை அது கூசச் செய்வதை கவனியுங்கள் . எச்சரிக்கையாக இருங்கள் !”..

Read Full Post »

ஆண்டவா, என்னை ஆச்சாரியனாக்கு!

  •  கல்வி புத்தாண்டைத் தொடங்கும் புத்திளம் புஷ்பங்களே! உங்கள் பள்ளி வாழ்வை வளமாக்க, மங்களப் பொருள்களுடன் உங்களை வரவேற்கிறேன், வாருங்கள்!
  •   படிப்பும், மார்க்கும் வரவில்லை என்று சென்ற ஆண்டில் வாழ்வை முடித்துக் கொண்ட மாணவர்களுக்காக இன்று நாம் அனைவரும் பிராத்திப்போம்.

இந்த மோசமான நிலை எங்கும், என்றும் தொடராதிருக்க, சிலவற்றைச் சிந்தித்து வைத்திருகிறேன். என்னோடு சேர்ந்து சிந்திக்க வாருங்கள்.

  •   என் தோளுக்கு மேல் வளர்ந்துள்ள மாணவர்களே! மேற்கூறிய பிரச்னைகளைத் தீர்த்திட, பொறுப்பை உங்கள் தோள் மீது ஏற்றிக் கொள்ள உங்களை வரவேற்கிறேன்.
  •   இனி நீ பாடசுமையை உணராதபடி சுவையுடன் பாடம் நடத்துவதாகச் சங்கல்பம் எடுத்துக் கொண்டுள்ளேன்.
  • இனி உனது மதிப்பெண்ணை மட்டுமே வைத்து உன்னை மதிப்பதைவிட, உன் தனித்திறன் என்னவென்று கண்டுபிடிப்பதில்தான் என் திறமையே உள்ளது.
  •   ஜுரத்தில் சில தினங்கள் படுத்த பிறகு, நீ பள்ளிக்கு வந்ததும் இனி உன்னிடம் ‘லீவ் லெட்டர் எங்கே?’ என கேட்காமல், ‘இப்போது நீ நலமா?’ என்று கேட்ட பின்பே லீவ் லெட்டரை நினைவுபடுத்துவேன்.

வகுப்பு நிர்வாகம் என்பது முக்கியம்தான். ஆனால் உன் மனநலனும் நட்பும் எனக்கு மிக மிக முக்கியம்.

  •  மாணவ மாணவியே, நீ பள்ளியில் பிறர் அறியாமல் அலைபேசியில் அட்டகாசம் செய்யும்போதும்….,

கிரிக்கெட், இணையதளம், திரைப்படங்கள் என்று பவர்ரிலும் உன் கவனம் ஈர்க்கப்படும்  போதும்….,நான் ஒன்றைக் கற்றேன். அதனால்…., நான் நடத்தும் பாடம் உன் காதுக்கு மட்டுமே போய்ச் சேர்வதாக இனி இருக்காது.

மாறாக, உன் எல்லாப் புலன் அறிவுகளையும் ஈர்க்கும் வகையில் அன்பைக் கூறியோ, செய்து காண்பித்தோ, வேறு வகையில் புரிய வைத்தோ பாடங்களை நடத்தலாம் என்று திட்டமிடுகிறேன்.

  •  இனி வகுப்பில் நான் மட்டுமே பாடம் நடத்துபவராக இல்லாமல், கற்பதையும் கற்பிப்பதையும் நீயும் நானும் சேர்ந்து ஓர் இனிய செயலாக மாற்றிவிடுவோம், வா!

எப்படி ? உனக்கு கிரிக்கெட் பிடிக்குமென்பதால் உன் பாணியிலேயே ஒன்று கூறுகிறேன்.

நீ பந்தை விலாச நிற்கும் ,ஸ்ட்ரைக்கர்’ என்றால் நான் உன் எதிரில் காத்திருக்கும் ‘நான் – ஸ்ட்ரைக்கர்!’

உன் எதிரிலுள்ள நான், வகுப்ப எப்படி வளப்படுத்தலாம் என்று உறுதி கொண்டுள்ளேன்!.

  •   பாடங்களை நடத்தும் போது நீ கேட்பவனாக மட்டுமே இருப்பதால் தான் போரடிக்கிறது. நாம் இருவரும் கலந்து கற்றால் பாடத் திட்டத்தைச் செயல்திட்டமாக மாற்றிவிடலாமே!
  •   என் வகுப்பில் நீ துங்கி விட்டால் நீ என்னை மதிக்க வில்லை என்று கருதி வந்தேன். ஒரு மாற்றுச் சிந்தனையாக உன் கவனைத்தை ஈர்க்க என்ன வெள்ளம் செய்யலாம் என இனி நினைத்துப் பார்ப்பேன்.
  •   வாலிப வயதில் உன் விளையாட்டுப் புத்தியை மேம்படுத்த, உன்னை மன இறுக்கத்தில் வருந்தவிடாமல், விளையாட விடுவேன்.
  •  உனக்கு தெரியுமா, நீ உன் வீட்டில் கண்டிப்பாக ‘ஹோம் ஒர்க்’ செய்ய வேண்டும் என்பதற்காக, நானும் உனக்காக ‘ஹோம் ஒர்க்’ செய்து வருகிறேன் என்று?
  •   நீ என்னிடம் இயல்பாகப் பேசாமல்,என்னிடம் சரளமாகப் பழகப் பயந்தால் எனக்கு வருத்தம் ஏற்படும்.

நீ என்னிடமிருந்து தள்ளி நின்றாலோ, என்னிடம் என் கற்பிக்கும் முறையிலும் என்ன குறை என யோசிப்பேன்.

  •   மாணவர்களே, உங்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இருக்க வேண்டிய உறவுமுறை – பாலுக்கும் நெருப்பிற்கும் உள்ளது போன்றது.

அக்னி சுதேர்ருவதோ பாத்திரத்தை!

பால் இருப்பதோ சூடான பாத்திரத்தில்!

ஆசிரியர் – மாணவர் இருவரது கவனமும் பாத்திரத்தில்தான் ! ஓட்டை  யற்ற பாத்திரத்தில் நான் ஆர்வமெனும் அக்னியைச் செலுத்துகிறேனா  என்பதில் என் கவனம்.

சத் பாத்திரத்தில் உள்ள பாலைப்போல, மாணவ – மாணவியாக நீ இருக்க வேண்டும் என்பதில் உன் கவனமும் இருக்கட்டும்.

  •   நீ வகுப்பக் கவனிக்க வேண்டுமென்றால், விளையாட்டு மைதானத்தில் குதூகலமாகக் குதித்தாடு. அங்கு நீ உடலால் குதிக்க வில்லை என்றால், வகுப்பில் உன் மனம் அங்குமிங்கும் அலைகிறது என்பதை நான் உணர்வேன்.
  •   நீ படிக்க வேண்டிய பாடங்கள் பலப் பல. எனக்கு நேரமில்ல என்றுதான் நானும் பலர் கூறுவது போல் நம்பியிருந்தேன்.ஆனால் ‘நீ என்னை நம்பிக் கற்க வந்தவன்’ என்ற ஓர் எண்ணமே எனக்குப் புதுச் சக்திகளை வழங்குகிறது.
  •   தம்பியே! நீ நுலகத்தை நன்கு பயன்படுத்து வதைப் பார்த்தால், நான் பெரும் ஆனந்தம் கூற முடியுமா?
  •  உங்களைக் கோவிலில் பார்த்தால், ‘இறைவா,என் மாணவர்களைச் சிறந்தவர்களாக்கு’ என் உங்களுக்காக என் மனம் வேண்டிக் கொள்ளும்.
  •  நீ வாலிபன் / யுவதி என்பதை மறந்து, நான் சில சமயத்தில் சற்றுக் கடுமையாக உன்னிடம் பேசி விட்டாலும், நீ அதைப் பெரிதுபடுத்தாதபோது…, எனக்கு எப்படிப்பட்ட  பெருமை   தெரியுமா?
  •   மாணவனே, நீ நினைக்கலாம் உன் விஷயத்தில் நான் மிகவும் விட்டுக் கொடுக்கிறேன் என்று! மற்ற ஆசிரியர்களும் மாணவர்கள் விஷயத்தில் நான் பணிவதாக நினைக்கலாம்.

ஆனால் மாணவனே, ஆசிரியர் எனும் நிலத்தில் வளர வேண்டிய வீரியமுள்ள விதை நீ. விதை வேரூன்றும்போது எந்த நிலமாவது விதை தன்னை மிதிக்கிறது என்று நினைக்குமா, சொல்!

  •   எனக்கே தெரிகிறது, நடத்தும் பாடத்தில் நான் தெளிவாக இருக்கும்போது மாணவர்களே, நீங்கள் மிக மரியாதையுடன் என்னிடம் நடந்து கொள்வது!
  •   தன்னம்பிக்கையுடன் நான் இருந்தால்தான், உங்களுள் சிலர் வாலாட்டாமல் இருக்கிறீர்கள். அந்த வாழை அடக்க, என் அறிவெனும் வாளைக் கூர் தீட்டி வைத்திருந்தால்தான் அது சாத்தியமாகிறது என்பதையும் காண்கிறேன்.
  •   மாணவ – மாணவிகளே! உங்களுள் ஒருவர் மட்டும் ‘டாப்பர்’ ஆகி – அது ‘பேப்பரில்’ வந்துவிட்டால் அதில் எனக்குப் பெருமையிருப்பதாக நான் நினைக்கவில்லை.
  •   இனி, பாட அறிவு என்ற பலம், அது தரும் தைரியம், அதை புகட்டக் கூடிய பண்பு ஆகியவற்றுடன் உன் வகுப்பில் நிமிர்ந்து நிற்பேன். பாடம் கற்க நீ அமைதியாக அமர மாட்டாயா என்ன?
  •   உன் ஆர்வத்தைத் தட்டிவிடாமல், பாடத்தைப் பகட்டுவது துங்கும் குழந்தையின் வாயில் தேனை ஊட்டுவது போல! அதனால் பயனுண்டா என்ன?
  •   உனக்கு ஒரு பிரச்சனை வந்தால், அதை நீக்க நீ யார் யாரையோ, எதை எதையோ தேடி ஓடுகிறாய். உன் நன்மைக்காக நான் உள்ளேன் என்பது உனக்கு அப்போது ஞாபகம் வராவிட்டால் – உன் நம்பிக்கையை நான் பெறவில்லையே என வருந்துவேன்.
  •   மறதி மாணவன் – சிந்திக்கக் கற்காதவன் – தாழ்வு மனப்பான்மை கொண்டவன் – படிப்பே போரிங் என்பவன் – டென்ஷன் பேர்வழி – பரீட்சை பயந்தாங்கொள்ளி – இவர்களுக்குக் கற்பது களிப்பானது என்று காட்டித் தருவதில்தான் இனி என் கரிசனம் எல்லாம்.
  •   வகுப்பில் சில மாணவரை மட்டும் outstanding  என்று துக்கி வைப்பதும், மற்றவரை stand  outside என்றுதள்ளி வைப்பதும் தான் இன்றைய கல்வியின் அவலநிலை. இதன் தாக்கத்தை நான் என் வகுப்பிற்குள் அண்டவிட மாட்டேன்.
  •   வாருங்கள்! உங்களது, கவனம் Mark -கிலும் என் போன்ற ஆசிரியர்களது கவனம் Remark  – கிலும் இருந்தது போதும்.

இனி,  You Are Remarkable என்ற நிலைக்கு வருவதில்தான் உனது கவனமும் எனது முயற்சியும் இருக்க வேண்டும். ஆசிரயரான நான் உன்னை அந்த நிலைக்கு உயர்த்துவேன்.

  •   இந்த மாபெரும் அறப்பணியான  ஆசிரியப் பணியில் மேற் கூரிய வற்றைக்  கடைபிடிக்க நானும் என்னைப் போன்ற ஆர்வமுள்ள ஆசிரியர்களும் ஆண்டு முழுவதும் முயற்சி செய்வோம்.

எங்கள் இஷ்டதெய்வங்களிடம் வேண்டுவோம்.

மாணவர்களே! எங்களது இந்த முயற்சிகள் வெற்றி பெற உங்களது ஒத்துழைப்பும் மிகமிக அவசியம்!

அதன் மூலம் நாங்கள் ஆசிரியர்களாக மட்டும் இருந்து விடாமல், மேலான பொறுப்புணர்வு மிக்க குரு நிலையில்நின்று உங்களை வழிநடத்தும் ஆச்சாரியர்களாக மாறுவோம்!

அதற்கு ஆண்டவா, எங்களுக்கு அருள்புரிவாய்!

–  நன்றி ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம்.

Read Full Post »