Feeds:
Posts
Comments

Archive for the ‘சுவாமி விவேகானந்தர்’ Category

விவேகானந்தரிடம் பேச மறுத்த ராமகிருஷ்ணர்.

Sw

ஒரு நாள் நரேந்திரர் தட்சிணேசுவரத்துக்கு வந்த போது அவரைக் கண்டதாகவே காட்டிக் கொள்ளவில்லை பரமஹம்சர். நரேந்திரர் குரு நாதரை வணங்கினார். அப்போதும் அலட்சியமாகவே இருந்தார் குரு. அவருடைய பக்கத்தில் சீடர் அமர்ந்தார். அப்படி ஒருவர் அருகில் உட்கார்ந்திருப்பதைக் குரு மகராஜ் கவனித்ததாகவே தெரியவில்லை. அவர் ஏதோ தீர்க்கமாய்ச் சிந்தித்துக் கொண்டிருக்கிறார் போலும் என்றெண்ணிய நரேந்திரர் அறைக்கு வெளியே வந்தார்.

ஹாஸ்ராவுடன் பேசிக் கொண்டே புகைத்தார். அப்போது உள்ளே பரமஹம்சர் மற்றவர்களுடன் உரையாடிக் கொண்டிருப்பது கேட்டது. உடனே நரேந்திரர் ஆர்வத்துடன் அவரது திருமுன்னர் சென்றார். என்ன ஆச்சரியம்! இம் முறை ஸ்ரீராமகிருஷ்ணர் அலட்சியம் செய்தது மட்டுமில்லை ; நரேந்திரருக்கு எதிர்ப்புறமாக சுவரை நோக்கி முகத்தைத் | திருப்பிகொண்டு விட்டார். ஏமாறிய நரேந்திரர் அங்கிருந்து புறப்பட்டார். அப்போதும் பரம ஹம்சர் போக்கில் மாறுதலே இல்லை.

இரண்டாம், மூன்றாம் முறையாக தட்சிணேசுவரத்துக்கு வந்தார் நரேந்திரர். நாலாம் முறையும் வந்தார். |அவர் வராத இடைக் காலத்தில் ஸ்ரீராமகிருஷ்ணரும் நரேந்திரரின் சௌக்கியத்தைப் பற்றி கேட்டறிந்து தான் வந்தார். எனினும் அவர் வந்தபோது ஏனோ கல்லாகச் சமைந்திருந்தார் குருதேவர். இப்படியே ஒரு மாதம் ஆகி விட்டது. ஸ்ரீராமகிருஷ்ணர் அப்படியே தான் இருந்தார். நரேந்திரரும் முன் போலவே வந்து கொண்டு இருந்தார். குருநாதர் தம்மைப் புறக்கணிப்பது பற்றி அவர் யாரிடமும் குறை கூறக் கூட இல்லை . அதற்கு மேலும் பரமஹம்சரால் எப்படி, பொறுக்க முடியும்?

நரேன், உன்னோடு நான் ஒரு வார்த்தைக்கூடப் பேசாமலிருக்கிறேன்; அப்படியும் நீ வந்து கொண்டிருக்கிறாயே! இது எப்படி ?” என்று சிஷ்யனைக் கேட்டே விட்டார் ஆசான். “நீங்கள் பேசி நான் கேட்க வேண்டும் என்பதற்காக நான் இங்கே வருவதாகவா எண்ணுகிறீர்கள் ? நான் அதற்காக வர வில்லை . எனக்கு உங்களிடம் அன்பு இருக்கிறது. அந்த அன்பி னால் உங்களைக் காண விரும்பு கிறேன். அதற்காகவே நான் தட்சிணேசுவரத்துக்கு வருகிறேன்என்றார் நரேந்திரர்.

அன்பு தனக்குப் பிரதியாக எதையும் எதிர்பாராது என்பது உண்மை தான். நரேந்திரரின் அன்பு அதற்குப் பிரதியாக குருதேவரின் அன்பைக்கூட எதிர்பார்க்கவில்லை. எதையும் எதிர்பாராது எவரிடமும் அன்பு செலுத்துவதே நம் கடமையாகக் கொள்ளவேண்டும் என்று முழங்கியவர் சுவாமி விவேகானந்தர்.

Read Full Post »

மனிதர்களே மனிதர்களே நமக்கு வேண்டும் – சுவாமி விவேகானந்தர்.

12107953_1024411640949711_8074768904993930253_n

மனிதர்களே மனிதர்களே நமக்கு வேண்டும். மற்றவை அனைத்தும் தயாராக வந்து சேரும். ஆனால் வலிமை மிக்க, சுறுசுறுப்பான, சிரத்தை பொருந்திய, உண்மையில் பிடிப்புக்கு கொண்ட இளைஞர்களே தேவை. அத்தகைய ஒரு நுறு இளைஞர்களால் இந்த உலகமே புரட்சிகரமான நல்ல மறுதலைப்   பெற்றுவிடும்.  முதலில் அப்படிப்பட்ட இளைஞர்களின் வாழ்வை நாம் நல்ல முறையில உருவாக்க வேண்டும். அதன் பிறகுதான் எதாவது உண்மையான முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம்.

பாரதமாதாவின் நன்மைக்காக அவளுடைய மிகவும் சிறந்த, உத்தமமான புதல்வர்களின் தியாகம் தேவையாக இருக்கிறது என்பதை நான் திட்ட வட்டமாக அறிந்திருக்கிறேன். பலரின் நன்மைக்காக, அனைவரின் சுகத்திற்காக, உலகில் தைரியமும் சிறப்பும் பெருமளவில் பெற்றிருப்பவர்கள் தங்களைத் தியாகம் செய்து கொண்டுதான் ஆகவேண்டும். என்றென்றும் நிலைத்த மாறாத அன்பும் கருணையும் பொருந்திய பல நுறு புத்தபிரான்கள் இப்போது தேவைப்படுகிறார்கள்.

Read Full Post »

Sister-Nivedita-2சகோதரி நிவேதிதை

சகோதரி நிவேதிதை

(பிறப்பு: 1867, அக். 28 – மறைவு: 1911, அக். 13)

1907-ஆம்ஆண்டு நடைபெற்ற பனாரஸ் (காசி) காங்கிரஸ் மாநாடு, பாரதியார் வாழ்வில் பல திருப்பங்களை நிகழ்த்தியது.

அந்த மாநாட்டிற்குச் சென்றுவிட்டு சென்னை திரும்பும் வழியில் பாரதியாரும் அவரது நண்பர்களும் கல்கத்தாவில் சிறிதுகாலம் தங்கிச் செல்லலாம் என்று விரும்பினார்கள். கல்கத்தாவில் டம்டம் என்ற இடத்தில் பழைய காங்கிரஸ் தலைவர் ஸ்ரீ ஆனந்தமோகன் போஸ் என்பவரது இல்லத்தில் தங்கினார்கள்.

ஆனந்தமோகன் போஸின் வீடு பெரிய தோட்டத்தின் நடுவில் இயற்க்கை சூழ மிக ரம்மியமான சூழ்நிலையில் அமைந்திருந்தது. தோட்டத்தின் ஒருபகுதியில் பெரியதோர் ஆலமரம் இருந்தது. அந்த ஆலமரத்தின் அழகும் சூழ்நிலையும் பாரதியாரைப் பெரிதும் கவர்ந்தன.

காங்கரஸ் மாநாட்டிற்குச் சென்று வந்தபடியால் தேசிய உணர்ச்சி மேலிட்டிருந்தது. அந்த ஆலமரத்தின் அடியில் அமர்ந்து இரண்டு பாடல்களை எழுதினார்.  அந்த இடம் பாரதியாரை தீவிர சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடவைக்கப் போகிறது என்பதை அவர் அப்போது அறியவில்லை.

பாரதியாரும் அவரது நண்பர்களும் சென்னை புறப்படுவற்கு முன்தினம் ஆனந்தமோகன் போஸ் கல்கத்தாவில் உள்ள தேசபக்தர்களை அழைத்து ஒரு சிறிய கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார்.

அந்தச் சமயம் கல்கத்தாவில் சகோதரி நிவேதிதா தேவி , நிவேதிதா பெண்கள் உயர்நிலைப் பள்ளி நடத்தி தேசப்பணியில் ஈடுபட்டுவந்தார்.  ஆனந்த மோகன்போஸ் வீட்டில் அடிக்கடி நடத்தப்படும் ரகசியக் கூட்டங்களில் அவர் கலந்துகொள்வார். பாரதியாரும் அவரது நண்பருகாக ஏற்பாடு செய்த அக்கூட்டத்தில் கலந்துகொண்டார்.

கூட்டம் முடியும் தறுவாயில் பாரதி தன்னை நிவேதிதா தேவியிடம் அறிமுகப்படுத்திக் கொண்டது மட்டுமல்லாமல், தான் இயற்றிய சில பாடல்களையும் பாடிக் காட்டினார். பெரிதும் மகிழ்ந்தார் நிவேதிதா தேவி.

இனி அங்கு என்ன நடந்தது என்பதை பாரதியாரே கூறுகிறார்….

“திடீரென்று அவர் (நிவேதிதா தேவி)  மிக மகிழ்ச்சியுடன் வந்து, என் கையைப் பிடித்திழுத்து வீட்டிற்கு வெளியே தோட்டத்திற்கு அழைத்துச் சென்றார்.

நானும் என்னை அறியாமலேயே அவரைப் பின்தொடர,  இருவரும் என்னைக் கவர்ந்த அந்த ஆலமரத்தடிக்கே வந்து நின்றோம். உடனே அன்னை  “அதோபார் பாரதமாதா !” என்றார்.  நான் மிக வியப்புடன் அவர் காட்டிய திக்கை நோக்கி, இரு கண்களும் விரிய விழித்தேன்.

என்னஆச்சரியம்!  என்னை பாரதமாதாவின் சொரூபம் ஆகாயத்தை அளாவி நிற்பதைக் கண்டேன் ! என்மெய்சிலிர்த்தது ! நாதழுதழுத்தது ! அப்படியே அந்தத் தோற்றத்தில் மெய்மறந்து நின்றுவிட்டேன்…

நிலைபெயராது சிலையாக நின்ற என்னை, அந்தச் சொல்லற்கரிய தேவியின் திவ்யசொருபம் அப்படியே கட்டிப்போட்டு விட்டது.  திரும்பவும் பரிவும் அன்பும் கூடிய நிவேதிதா தேவியின் இனியகுரல் என்னை சுயநிலைக்கு அழைத்தது.

அப்போது நிவேதிதா தேவி,  “பார்த்தாயா ! உன் கவித்திறமையை பாரதமாதா, சுதேசி சேவைக்கே உபயோகிக்க வேண்டுகிறாள். அன்னையின் விருப்பமும் கட்டளையும் அது தான். உடனே நீ [உன்னை] அர்ப்பணம் செய்து, கிடைப்பதற்கரிய மாதாவின் வரப்பிரசாதத்தைப் பெற்றுக்கொள்” என்று உத்தரவிட்டார்.

நான் மீண்டும் மீண்டும் பலமுறை பாரதமாதாவின் தோற்றம் இருந்த திசையை நோக்கி வணங்கி நிமிர்ந்தேன். அந்தத் தோற்றம் மறைந்தது.  குருமணி தேவி அதே அருளும் அன்பும் கலந்த பார்வையுடன் என்னைப் பார்த்து நின்றார்.

பாரதமாதாவின் தோற்றமும் தரிசனமும் கிடைத்த இடத்திற்கு அருகில் இருந்த ஆலமரக் கிளையிலிருந்து,  குருமணி நிவேதிதா தேவி ஒரு ஆலிலையைப் பறித்தார். அதை உடனே அவர், உடல் பொருள் ஆவி அனைத்தையும் அர்ப்பணித்துத் தொழுது நிற்கும் என்னிடம் ஆசி கூறிப் பிரசாதமாக அளித்தார்.

இந்த அருளும் அனுபூதியும் கிடைத்ததால் தான், என் நாவிலிருந்து பிரசண்டமாருதம் போல் தேசியகீதங்கள்,  தேசபக்தியை ஊட்டுவிக்கும் பாக்கள், தேசத்தைத் தட்டியெழுப்பும் கவிதைகள் வெளிவரலாயின”

-என்கிறார் பாரதி.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு நிவேதிதா தேவி பாரதியின் வழிகாட்டியாய்,  ஞானகுருவாய் விளங்கினார்.  பாரதியார் அவரை  ‘அன்னை’ என்றே அழைத்தார். குருவின் அருள்பெற்றதும் பாரதி குருஸ்தோத்திரமும் பாடினார்.

அந்த குரு ஸ்தோத்திரம் இது…

அருளுக்கு நிவேதனமாய், அன்பினுக்கோர்

       கோயிலாய், அடியேன் நெஞ்சில்

இருளுக்கு ஞாயிறாய் எமதுயர் நாடாம்

       பயிர்க்கு மழையாய், இங்கு

பொருளுக்கு வழியறியா வறிஞர்க்குப்

      பெரும்பொருளாய்ப் புன்மைத் தாதச்

சுருளுக்கு நெருப்பாகி விளங்கிய தாய்

      நிவேதிதையைத் தொழுது நிற்பேன்!

பாரதியார் உணர்ச்சி ததும்பும் பாடலைப் பாடுவதற்கும்,  தீவிரமாக சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடுவதற்கும் சகோதரி நிவேதிதா தேவியே காரணமாக இருந்தார்.

‘தேசியகீதங்கள்’ நூலின் சமர்ப்பணத்தில் தன் குருவாகிய நிவேதிதா தேவியே அந்தப் பாடல்களுக்குக் காரணமாவர்”  என்று புகழ்ந்து பெருமையுடன் பாரதியார் சமர்ப்பணம் செய்திருக்கிறார்.

Read Full Post »

ஸ்ரீராமகிருஷ்ணர் பற்றி சுவாமி விவேகானந்தர்….

ஒருவரிடம் கூர்த்த அறிவு, மற்றவரிடம் பரந்த இதயம். இந்த அறிவும் இதயமும் ஒருங்கே கொண்ட ஒருவர் பிறப்பதற்கான காலம் கனிந்தது. சங்கரரின் கூர்த்த அறிவும், சைதன்யரின் எல்லையற்ற பரந்த இதயமும் கொண்ட, எல்லா மதப் பிரிவுகளிலும் ஒரே இறைவனைக் காணக்கூடிய, ஏழைகள், பலவீனர்கள், கிழ்ஜாதியினர், தாழ்த்தப்பட்டவர் என்று இந்தியாவிலும் இந்தியாவுக்கு வெளியிலும் இந்த உலகிலுள்ள ஒவ்வொருவருக்காகவும் உருகும் இதயம்கொண்ட, அதே வேளையில்  இந்தியாவில் மட்டுமல்லாமல் இந்தியாவிற்கு  வெளியிலும் ஒன்றோடொன்று போராடிக் கொண்டிருக்கும் மதப்பிரிவுகள் அனைத்தையும் சமரசபடுத்தி அறிவுக்கும் உணர்ச்சிக்கும் சம  இடம் கொடுக்கின்ற, உலகம் தழுவிய மதம் ஒன்றை உருவாக்குவதற்குரிய சிந்தனை வளம் மிக்க ஒருவர் பிறப்பதற்கு உரிய காலம் வந்தது.

thakur-singing

அத்தகைய மனிதர் பிறந்தார். அவரது திருவடிகளின் கீழ் பல ஆண்டுகள் அமர்வதற்கான பெரும்பேறு எனக்குக் கிடைத்தது. அத்தகைய ஒருவர் பிறப்பதற்கான தேவை ஏற்பட்டது. காலமும் கனிந்தது, அவர் பிறந்தார். ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், எந்த நகரம் மேலை நாட்டுச் சிந்தனைகளால் நிறைந்திருந்ததோ, எந்த நகரம் மேலை நாட்டுக் கருத்துக்களின் பின்னால் பைத்தியமாக ஓடிக் கொண்டிருந்ததோ, எந்த நகரம் இந்தியாவிலுள்ள மற்றெல்லா நகரங்களையும் விட ஐரோப்பியமயமாகி விட்டிருந்ததோ அந்த நகருக்கு அருகிலேயே ஓரிடத்தில் அவரது வாழ்க்கைப் பணியெல்லாம் நடைபெற்றது. அவருக்கு நூலறிவு எதுவும் இல்லை. இந்த மாபெரும் அறிஞருக்குத் தமது சொந்தப் பெயரைக்கூட எழுதத் தெரியாது. ஆனால் கல்வி மிக்க நமது பல்கலைக்கழகப் பட்டதாரிகள் அவரிடம் அறிவுக் களஞ்சியத்தையே கண்டனர். இந்த ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் ஒரு விசித்திரமான மனிதர்.

அவர் இந்திய ரிஷிகளின் நிறைவாகத் திகழ்ந்தார். தற்காலத்திற்குரிய ரிஷி அவர், அவரது உபதேசங்களே இந்தக் காலத்திற்கு மிகவும் பயன் தருபவை என்பதை மட்டும் இப்போது கூறிக்கொள்ள விரும்புகிறேன். அவருக்குப் பின்னணியில் செயல்பட்டது தெய்வீக ஆற்றல் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். யாருக்கு தெரியாத, யாரும் கேள்விப்படாத ஒரு குக்கிராமத்தில் ஏழை அர்ச்சகராக பிறந்த அவர் இன்று ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் ஆயிரக்கணக்கான மக்களால் வழிபடப்படுகிறார். நாளை பல்லாயிரக் கணக்கான நபர்களால் வழிபடபடுவார். நேரம் கிடைத்து வாய்ப்பும் கிடைக்குமானால் அவரைப் பற்றி மேலும் பேசுவேன். ஆனால் இப்போது ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன்: உங்களிடம் நான் உண்மையான எதாவது ஒரு வார்த்தை பேசி இருந்தேனானால், அது அவருடையது, அவருடையது மட்டுமே; உண்மையில்லாத, தவறான, மனித இனத்திற்கு நன்மையைத் தராத எதையாவது நான் பேசியிருந்தால், அவையெல்லாம் என்னுடையவை, அதற்கு பொறுப்பாளி நானே.

*************************************

Read Full Post »

தேச பக்தி

திருவனந்தபுரத்தில் சுவாமிஜி தங்கியிருந்தபோது பேராசிரியர் சுந்தராம ஐயரின் மகன் ராமசாமி சாஸ்திரியிடம் தேசபக்திக்கு விளக்கம் கொடுத்திருக்கிறார் சுவாமிஜி.

“….தேச பக்தி, தேச பக்தி என்கிறார்களே உண்மையில் அது என்ன? கண்மூடித் தனமான ஒரு நம்பிக்கையா? இல்லை.

நாட்டு மக்களுக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்பதில் உள்ள  பேரார்வம்  தான் உண்மையில் தேசபக்தி.

பாரதம் முழுவதும் பார்த்துவிட்டேன். அறியாமையும், துன்பமும், ஒழுக்க  சீர்குலைவுகளும் தான் நான் கண்டவை. என் உள்ளம் பற்றியெரிகிறது. இந்தத் தீமைகளை வேரோடு களைய வேண்டும் என்று துடிக்கிறேன்.

“அவர்களின் தீவினை அது. அதனால் கஷ்டபடுகிறார்கள்” என்று கர்மம் பற்றி பேசுகிறார்கள். தயவு செய்து அப்படிப் பேசாதீர்கள். கஷ்டபடுவது அவர்களின் கர்மம் என்றால் அதிலிருந்து அவர்களை விடுவிப்பது நமது தர்மம்.

கடவுளைக் காண வேண்டுமானால் மனிதனுக்கு தொண்டு செய்யுங்கள். நாராயணனை அடைய வேண்டுமானால் பட்டினியில் வாடுகின்ற ஏழை நாராயணர்களுக்குச் சேவை செய்யுங்கள். அதுதான் உண்மையான தேச பக்தி.

392616_348803058553487_191559038_n

சுவாமி அகண்டானந்தர் சுவாமிஜின் தேசபக்தியை வர்ணிக்கும்போது:-

” ….சுவாமிஜி பாரதத்தின் மீது கொண்ட அன்பு சாதாரண விஷயம் அல்ல. அது வெறும் தேசபக்தி (patriostism) அல்ல. அது தேசாத்மபோதம். சாதாரண மனிதர்களுக்கு இருப்பது “தேஹாத்மா போதம்”, அதாவது உடம்பைத் தானாக உணர்வது. சுவாமிஜிக்கு இருந்ததோ ‘தேசாத்மபோதம்’. அதாவது நாட்டையே தானாக உணர்வது.

நாட்டு மக்களின் சுகம், துக்கம், அவர்களின் கடந்த காலம், எதிர்காலம், நிகழ் காலம் என்பவை பற்றியே அவர் சிந்தித்தார்.

தேசாத்மா போதத்துடன் அவரது உணர்வு நின்று விடவில்லை. அது விச்வாத்ம போதமாக விரிந்தது. பாரத மக்களுக்காக மட்டுமல்ல. உலக உயிரினங்கள் அனைத்துடனும் தம்மை ஒன்று படுத்திக் கொண்டு அவர்களுக்காக கவலைப்பட்டார் அவர். அனைவருக்கும் முக்தி கிடைக்காமல் அவருக்கு முக்தியில்லை……”

*****************************

Read Full Post »

சுவாமிஜியின் திட்டம் உதயம் ….

சுவாமிஜி இந்தியாவின் பல பகுதிகளுக்குச் சென்று கொண்டிருந்த காலத்தில் இந்தியாவின் நிலைமை மிக மோசமாயிருந்தது. நம் நாடு அப்போது சுதந்திரம் பெறவில்லை. ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டிருந்தது. மக்கள் வறுமையில் வாடினர். பெரும்பாலான மக்களுக்குப் போதிய உணவு கூட கிடைக்கவில்லை. மிகச் சில சிறுவர் சிறுமியரே பள்ளி செல்ல முடிந்தது. மக்கள் தைரியத்தை இழந்து விட்டிருந்தனர். அவர்களிடம் தன்னம்பிக்கை இல்லை. அவர்கள் உதவியற்றோராக நசுக்கப்பட்டனர். இவற்றையெல்லாம் கண்ட சுவாமிஜி கண்கள் கலங்கின. பழங்காலத்தில் இந்தியா எத்தகையதொரு உன்னத நிலையில் இருந்தது என்பதை அவர் நினைத்து பார்த்தார். பழங்கால தவ முனிவர்களையும் ரிஷிகளையும் அவர் எண்ணிப் பார்த்தார். அத்தகைய பெருமை வாய்ந்த நாடு எவ்வளவு கீழ் நிலையை அடைந்துவிட்டது என்று நினைத்து அழுதார். மீண்டும் நம் நாட்டைப் பெருமையுடைய நாடாக மாற்றுவது எவ்வாறு என்பது ஒன்றே அவர் எண்ணமாயிருந்தது.

தன் சுற்றுப் பயணத்தின் இறுதி இடமாக, இந்தியாவின் தென்முனையில் கன்னியாகுமரியை அடைந்தார். அங்கு ஆதிபராசக்தி தேவி ஒரு குமரி வடிவில் ‘கன்னியாகுமரி’ என்ற திருநாமத்தில் கோயில் கொண்டுள்ளாள். ஒவ்வொரு நாளும் அர்ச்சகர்கள் சந்தனத்தால் அலங்கரித்து அவளை வழிபடுவது வழக்கம். குமரிதேவி அதி அற்புதமான தோற்றத்துடனும் அழகான கண்களோடும், இனிய புன்முறுவலோடும் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறாள். இக்கோயில் கடற்கரையோரத்தில் இருக்கிறது. கடல் நோக்கிப்  பார்க்கும்போது தண்ணீர்க்குள்ளிருந்து சில பெரிய பாறைகள் நீட்டிக் கொண்டிருப்பதை நாம் கான முடியும். அந்தப் பாறைகளின் ஒன்றின்மீது அன்னை பகவதி ஒற்றைக் காலில் தவம் செய்த அடிசுவடு காணப்படுகிறது. அலைகள் அப்பாறைகளில் முட்டி மோதிச் செல்லும். அவற்றின் பின்னே, கண்ணுக்கெட்டிய தூரம், தண்ணீர்தான்!

Thittam

ஒருநாள், தேவியின் சுவடுடைய அப்பாறையின் மீது தியானம் செய்ய விரும்பி சுவாமிஜி கடலின் நடுவே நீந்திச் சென்று, அதனை அடைந்தார். அதன் மேலேறி பாறை முனையில் அமர்ந்தார். அங்கிருந்து தன் பேரன்புக்குரிய தாய்நாட்டை நோக்கிய அவருக்கு அந்நாட்டு மக்களின் மோசமான நிலை நிழலாடுகிறது . சுவாமிஜி மீண்டும் அழுதார். சுவாமிஜிக்கு இரண்டு நோக்கங்கள் இருந்தன. ஒன்று அவர் குரு ஸ்ரீராமகிருஷ்ணர் , மற்றொன்று அவர் பிறந்த இந்தியத் தாய்நாடு. அப்பாறையில் அமர்ந்து கொண்டிருந்தபோது சுவாமிஜி மூன்று நாட்களாக ஆழ்ந்த தியானத்தில் லயித்தார். இந்தியாவின் பெருமையை மீண்டும் நிலைநாட்ட,  தாம் செய்ய வேண்டியது என்ன என்பதை அப்போது அவர் உணர்ந்தார்.

‘கன்னியாகுமரியில், குமரி தாயின் கோயிலில், பாரத நாட்டின் தென்கோடியிலுள்ள அந்தப் பாறைமீது அமர்ந்து சிந்தித்தேன். என் மனத்தில் திட்டம் ஒன்று உதித்தது’ என்றார் சுவாமிஜி.

*********************

Read Full Post »

இமயமலையில்…..

ஒருமுறை சுவாமி விவேகானந்தர் இமயமலையில் நீண்ட மலைப்பாதை வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, மலைச்சரிவில், மேற்கொண்டு ஏறமுடியாமல் களைத்துப் போய் அமர்ந்திருந்தார் முதியவர் ஒருவர்.அவரைப் பார்த்ததும் அங்கே சென்றார் சுவாமி விவேகானந்தர். “நான் மிகவும் சோர்ந்து போய் விட்டேன். இந்த பாதையை இனி எப்படி கடக்கப் போகிறேன்? இனிமேல் என்னால் நடக்க இயலாது. என் நெஞ்சே வெடித்துவிடும் போலிருக்கிறது” என்று அவரிடம் புலம்பினார் அந்த முதியவர்.

Untitled-1அதற்கு விவேகானந்தர், “பெரியவரே! சற்று கீழே பாருங்கள். காலுக்கு கீழே நீண்டு தெரிகின்ற அந்த பாதை முழுவதும் உங்களால் கடக்கப்பட்டதுதான். இன்னும் கொஞ்சம் நடந்தால் போதும். முன்னால் தெரிகின்ற பாதையும் விரைவில் உங்கள் காலுக்கு கீழே வந்துவிடும்” என்றார்.

அவரது தெம்பூட்டுகின்ற இந்த வார்த்தைகளை கேட்டதும், சோர்ந்து போய் இருந்த பெரியவர் எழுந்து நடக்க ஆரம்பித்தார் மலையின் உச்சியை அடைந்தார்.

Read Full Post »

சர்வ சமயப் பேரவையில்

சர்வ சமயப் பேரவையில்:

சுவாமிஜி பாஸ்டனிலிருந்து சிகாகோ சென்றடைந்த பின்னர் சர்வ சமயப் பேரவை குழுத்தலைவரின் முகவரியுடன் இருந்த அறிமுக கடிதத்தைத் தொலைத்துவிட்டார். சுவாமிஜிக்கு எங்கு போவது என்று தெரியவில்லை. அவர் மிகவும் சோர்வாக இருந்தார். எனவே சிகாகோ ரயில் நிலையத்தில் நின்றிருந்த ரயில் பெட்டி ஒன்றில் படுத்து உறங்கிவிட்டார். அடுத்த நாள் காலை இந்திய நாட்டின் சன்னியாசிகளைப் போல் வீடு வீடாக சென்று பிச்சை எடுத்தார். அவரை மக்கள் எகத்தாளமாக நடத்தினர். மேலை நாடுகளில் பிச்சை எடுப்பது குற்றம் எனக் கூறினார்கள். என்ன செய்வது என்றறியாமல் இறைவன் விட்ட வழி என ஒரு தெரு ஒரத்தில் அமர்ந்து விட்டார். இறைவன் அருளால் எதாவது நடக்கும் என எண்ணி அதுவரைக் காத்திருப்பதாக முடிவு செய்தார். அப்பொழுது எதிர் வீட்டின் கதவு திறக்கப்பட்ட்து. ஒரு பெண்மனி வெளியே வந்தாள். அவள் சுவாமிஜியை நோக்கி “ஐயா, தாங்கள் சர்வ சமயப் பேரவையில் கலந்து கொள்ள வந்திருக்கிறீர்களா? என வினாவினாள். மிஸஸ். ஜார்ஜ் ஹேல் என்ற அந்தப் பெண்மணியின் உதவியுடன் சர்வ சமயப் பேரவையில் கலந்துக் கொள்ள சுவாமிஜிக்கு வாய்ப்புக் கிடைத்தது.

1233560_590718274319052_45925771_n

சர்வ சமயப் பேரவை— செப்டம்பர் 1893:

1893ம் வருடம், செப்டம்பர் 11ம் நாள் திங்கள் கிழமை சர்வ சமயப் பேரவைக் கூடியது. அந்தக் குழுத்தலைவர் சுவாமிஜியைப் பேச பலமுறை அழைத்தார். ஆனால் சுவாமிஜி அங்கு கூடியிருந்த 7000 பேர்களைப் பார்த்தும் சிறிது அச்சமடைந்து பேச எழவில்லை. மதிய வேளையில் “அமெரிக்க சகோதரி சகோதரர்களே” எனக் கூறி தன் உரையைத் துவங்கினார். அவர் அன்போடு அழைத்ததும் இடி இடிப்பது போல் பார்வையாளர்களிடமிருந்து 2 நிமிடம் கைதட்டல் தொடர்ந்தது. சுவாமிஜி தன் காவி உடையில் 7000 பேர்கள் அமர்ந்திருந்த கூட்டத்தில் கம்பீரமாக மேடைமேல் நின்றிருந்தார். அரங்கத்தில் அமைதி எற்பட்டதும் தன் உரையைத் தொடர்ந்தார். இந்த பேரவையில் இந்து மதத்தர்மத்தின்படி அனைத்து மதங்களும் உண்மையே, அனைத்து மதங்களையும் நாம் எற்றுக் கொள்ள வேண்டும் என்று முழுங்கினார். சுவாமிஜின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் சக்தி வாய்ந்தவையாக இருந்தது. இறைவனின் வார்த்தைகளாக வெளி வந்தது. இதுவே அனைத்துப் பார்வையாளர்களின் இதயத்தைத் தொட்டது.

Read Full Post »

ஸ்ரீ ராமகிருஷ்ணரின் பதில்

ஒரு நாள் ஸ்ரீ ராமகிருஷ்ணரைக் காண நரேன் தட்சனேசுவரம் சென்றான். ஸ்ரீ ராமகிருஷ்ணருக்கு அவனைக் கண்டதில் கொள்ளை மகிழ்ச்சி. உடனேயே உள்ளே சென்று இனிப்புகளைக் கொண்டு வந்து, அவனை ஒரு சிறு குழந்தையாகக் கருதி அவனுக்கு ஊட்ட ஆரம்பித்துவிட்டார். அவன்மீது பேரன்பு கொண்ட அன்னையானார் அவர்.

பிறகு நரேன் தான் இதுவரைப் பல குருமார்களிடம் கேட்ட அந்தக் கேள்வியை அவரிடம் கேட்டான்:

‘ஐயா, தாங்கள் கடவுளைக் கண்டிருக்கிறீர்களா?’

‘ஆம், உண்மையில் தரிசித்திருக்கிறேன்’ என்று பதிலளித்தார் ஸ்ரீ ராமகிருஷனர். ‘உன்னைப் பார்பதைப் போலவே, அவரையும் தெளிவாகப் பார்க்கிறேன். உன்னைக் கண்டு பேசுவது போலவே, ஒருவரால் கடவுளைக் காணவும் பேசவும் முடியும்’ என்றும் கூறினார்.

Ramakrishnarin Pathil

இந்த பதிலைக் கேட்டு நரேன் ஆச்சரியமடைந்தான். அவன் உள்ளம் ஆனந்தத்தால் நிறைந்தது. ஸ்ரீ ராமகிருஷ்ணர் கூறிய அனைத்தையும் அவன் கவனமாகக் கேட்டான்.

‘நான் தேடிக் கொண்டிருந்த குரு இவரே!’ என்று நரேனின் மனம் கூறியது. நரேன் அவருடைய சீடன் ஆனான்.

ஸ்ரீ ராமகிருஷனர் கடவுளைக் கண்டவர் என்று நரேன் அறிந்திருந்தான். இருப்பினும், கேள்விகள் கேட்காமல் எதையும் அவன் ஒப்புக் கொள்வதில்லை. இதையே ஸ்ரீ ராமகிருஷ்ணரும் விரும்பினார். தன்னிடம் வந்த இளைஜர்கள் சுயமாக சிந்திப்பதையும், கேள்விகள் கேட்பதையும் அவர் வரவேற்றார்.

தொடரும் …….

Read Full Post »

நரேனின்(சுவாமி விவேகானந்தரின்) கேள்வி…..

‘காசியைக் கண்ட ஒருவரே, காசியைப் பற்றிக் கூறி உங்களை அங்கு அழைத்துச் செல்ல முடியும்’ என்பது பழமொழி. தான் போதிப்பதை உணர்ந்த ஆசிரியரே தேவை என்பதே இதன் பொருள். நாம் எதையாவது கற்க விரும்பினால், அதைப் பற்றி அனைத்தும் அறிந்த ஆசிரியர், குரு நமக்குத்த் தேவை. ஆகவே கடவுளை யாரேனும் அறிய விரும்பினால், கடவுளை பற்றி தெரிந்த ஒருவரை அணுக வேண்டும். அத்தகைய ஒருவரை நரேன்(விவேகானந்தர்) தேட ஆரம்பித்தான். தான் சந்தித்த அத்தனை மத குருமார்களிடமும் அவன் கேட்ட கேள்வி இது ஒன்றே. ‘ஐயா, தாங்கள் கடவுளைக் கண்டிருக்கிறீர்களா?’ ஆனால் ஒருவர் கூட அவனுக்குத் தான் கடவுளைக் கண்டதாகக் கண்டிருப்பதாகக் கூறமுடியவில்லை.

Narenin Kelvi

ஒரு நாள் நரேனின் அண்டை வீட்டினர் ஒருவர் அவனைத் தன் வீட்டில்  பாடுவதற்காக அழைத்திருந்தார். அந்த வீட்டினர் அன்று பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணரை தம் கௌரவ விருந்தாளியாக அழைத்திருந்தனர். நரேன் மிக இனிமையாகப் பாடக் கூடியவனாதலால், ஸ்ரீ ராமகிருஷ்ணரை முன்பு பாடுவதற்காக அவனையும் அழைத்திருந்தனர்.

நரேனின் பாடல்களைக் கேட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணர் மிகவும் ஆனந்தமடைந்தார். நரேனை அவருக்கு மிகவும் பிடித்து விட்டது. தான் வசிக்கும் தட்சினேசுவரத்திற்கு  அவனை வரும்படியும், அங்கு வந்து தனக்காகப் பாடும்படியும் வேண்டினார்.

இதுவே ஸ்ரீ ராமகிருஷ்ணருக்கும் நரேனுக்கும் இடையே நடந்த முதல் சந்திப்பு என்றாலும் அது நரேனிடத்தில் பெரியத் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

இதன்பிறகு நரேனுக்குத் திருமணம் செய்ய பெற்றோர் முயற்சிக்க ஆரம்பித்தனர். ஆன்மிக லட்சியம் கொண்ட நரேன் அதற்கு உறுதியாக மறுத்துவிட்டார். ஸ்ரீ ராமகிருஷ்ணரின் பக்தர்களில் ஒருவரான ராமசந்திர தத்தர் நரேனிடத்தில் இருந்த ஆன்மிக நாட்டத்தைக் கவனித்தார். எனவே அவர் நரேனை தட்சனேசுவரம் சென்று ஸ்ரீ ராமகிருஷ்ணரைச் சந்திக்கும்படி அறிவுறுத்தினார். அதன்படி தட்சனேசுவரம் சென்று அவரைச் சந்திக்க முடிவு செய்தார் நரேன்(விவேகானந்தர்).

தொடரும் …..

Read Full Post »

Older Posts »