Feeds:
Posts
Comments

Archive for October, 2014

Sister-Nivedita-2சகோதரி நிவேதிதை

சகோதரி நிவேதிதை

(பிறப்பு: 1867, அக். 28 – மறைவு: 1911, அக். 13)

1907-ஆம்ஆண்டு நடைபெற்ற பனாரஸ் (காசி) காங்கிரஸ் மாநாடு, பாரதியார் வாழ்வில் பல திருப்பங்களை நிகழ்த்தியது.

அந்த மாநாட்டிற்குச் சென்றுவிட்டு சென்னை திரும்பும் வழியில் பாரதியாரும் அவரது நண்பர்களும் கல்கத்தாவில் சிறிதுகாலம் தங்கிச் செல்லலாம் என்று விரும்பினார்கள். கல்கத்தாவில் டம்டம் என்ற இடத்தில் பழைய காங்கிரஸ் தலைவர் ஸ்ரீ ஆனந்தமோகன் போஸ் என்பவரது இல்லத்தில் தங்கினார்கள்.

ஆனந்தமோகன் போஸின் வீடு பெரிய தோட்டத்தின் நடுவில் இயற்க்கை சூழ மிக ரம்மியமான சூழ்நிலையில் அமைந்திருந்தது. தோட்டத்தின் ஒருபகுதியில் பெரியதோர் ஆலமரம் இருந்தது. அந்த ஆலமரத்தின் அழகும் சூழ்நிலையும் பாரதியாரைப் பெரிதும் கவர்ந்தன.

காங்கரஸ் மாநாட்டிற்குச் சென்று வந்தபடியால் தேசிய உணர்ச்சி மேலிட்டிருந்தது. அந்த ஆலமரத்தின் அடியில் அமர்ந்து இரண்டு பாடல்களை எழுதினார்.  அந்த இடம் பாரதியாரை தீவிர சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடவைக்கப் போகிறது என்பதை அவர் அப்போது அறியவில்லை.

பாரதியாரும் அவரது நண்பர்களும் சென்னை புறப்படுவற்கு முன்தினம் ஆனந்தமோகன் போஸ் கல்கத்தாவில் உள்ள தேசபக்தர்களை அழைத்து ஒரு சிறிய கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார்.

அந்தச் சமயம் கல்கத்தாவில் சகோதரி நிவேதிதா தேவி , நிவேதிதா பெண்கள் உயர்நிலைப் பள்ளி நடத்தி தேசப்பணியில் ஈடுபட்டுவந்தார்.  ஆனந்த மோகன்போஸ் வீட்டில் அடிக்கடி நடத்தப்படும் ரகசியக் கூட்டங்களில் அவர் கலந்துகொள்வார். பாரதியாரும் அவரது நண்பருகாக ஏற்பாடு செய்த அக்கூட்டத்தில் கலந்துகொண்டார்.

கூட்டம் முடியும் தறுவாயில் பாரதி தன்னை நிவேதிதா தேவியிடம் அறிமுகப்படுத்திக் கொண்டது மட்டுமல்லாமல், தான் இயற்றிய சில பாடல்களையும் பாடிக் காட்டினார். பெரிதும் மகிழ்ந்தார் நிவேதிதா தேவி.

இனி அங்கு என்ன நடந்தது என்பதை பாரதியாரே கூறுகிறார்….

“திடீரென்று அவர் (நிவேதிதா தேவி)  மிக மகிழ்ச்சியுடன் வந்து, என் கையைப் பிடித்திழுத்து வீட்டிற்கு வெளியே தோட்டத்திற்கு அழைத்துச் சென்றார்.

நானும் என்னை அறியாமலேயே அவரைப் பின்தொடர,  இருவரும் என்னைக் கவர்ந்த அந்த ஆலமரத்தடிக்கே வந்து நின்றோம். உடனே அன்னை  “அதோபார் பாரதமாதா !” என்றார்.  நான் மிக வியப்புடன் அவர் காட்டிய திக்கை நோக்கி, இரு கண்களும் விரிய விழித்தேன்.

என்னஆச்சரியம்!  என்னை பாரதமாதாவின் சொரூபம் ஆகாயத்தை அளாவி நிற்பதைக் கண்டேன் ! என்மெய்சிலிர்த்தது ! நாதழுதழுத்தது ! அப்படியே அந்தத் தோற்றத்தில் மெய்மறந்து நின்றுவிட்டேன்…

நிலைபெயராது சிலையாக நின்ற என்னை, அந்தச் சொல்லற்கரிய தேவியின் திவ்யசொருபம் அப்படியே கட்டிப்போட்டு விட்டது.  திரும்பவும் பரிவும் அன்பும் கூடிய நிவேதிதா தேவியின் இனியகுரல் என்னை சுயநிலைக்கு அழைத்தது.

அப்போது நிவேதிதா தேவி,  “பார்த்தாயா ! உன் கவித்திறமையை பாரதமாதா, சுதேசி சேவைக்கே உபயோகிக்க வேண்டுகிறாள். அன்னையின் விருப்பமும் கட்டளையும் அது தான். உடனே நீ [உன்னை] அர்ப்பணம் செய்து, கிடைப்பதற்கரிய மாதாவின் வரப்பிரசாதத்தைப் பெற்றுக்கொள்” என்று உத்தரவிட்டார்.

நான் மீண்டும் மீண்டும் பலமுறை பாரதமாதாவின் தோற்றம் இருந்த திசையை நோக்கி வணங்கி நிமிர்ந்தேன். அந்தத் தோற்றம் மறைந்தது.  குருமணி தேவி அதே அருளும் அன்பும் கலந்த பார்வையுடன் என்னைப் பார்த்து நின்றார்.

பாரதமாதாவின் தோற்றமும் தரிசனமும் கிடைத்த இடத்திற்கு அருகில் இருந்த ஆலமரக் கிளையிலிருந்து,  குருமணி நிவேதிதா தேவி ஒரு ஆலிலையைப் பறித்தார். அதை உடனே அவர், உடல் பொருள் ஆவி அனைத்தையும் அர்ப்பணித்துத் தொழுது நிற்கும் என்னிடம் ஆசி கூறிப் பிரசாதமாக அளித்தார்.

இந்த அருளும் அனுபூதியும் கிடைத்ததால் தான், என் நாவிலிருந்து பிரசண்டமாருதம் போல் தேசியகீதங்கள்,  தேசபக்தியை ஊட்டுவிக்கும் பாக்கள், தேசத்தைத் தட்டியெழுப்பும் கவிதைகள் வெளிவரலாயின”

-என்கிறார் பாரதி.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு நிவேதிதா தேவி பாரதியின் வழிகாட்டியாய்,  ஞானகுருவாய் விளங்கினார்.  பாரதியார் அவரை  ‘அன்னை’ என்றே அழைத்தார். குருவின் அருள்பெற்றதும் பாரதி குருஸ்தோத்திரமும் பாடினார்.

அந்த குரு ஸ்தோத்திரம் இது…

அருளுக்கு நிவேதனமாய், அன்பினுக்கோர்

       கோயிலாய், அடியேன் நெஞ்சில்

இருளுக்கு ஞாயிறாய் எமதுயர் நாடாம்

       பயிர்க்கு மழையாய், இங்கு

பொருளுக்கு வழியறியா வறிஞர்க்குப்

      பெரும்பொருளாய்ப் புன்மைத் தாதச்

சுருளுக்கு நெருப்பாகி விளங்கிய தாய்

      நிவேதிதையைத் தொழுது நிற்பேன்!

பாரதியார் உணர்ச்சி ததும்பும் பாடலைப் பாடுவதற்கும்,  தீவிரமாக சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடுவதற்கும் சகோதரி நிவேதிதா தேவியே காரணமாக இருந்தார்.

‘தேசியகீதங்கள்’ நூலின் சமர்ப்பணத்தில் தன் குருவாகிய நிவேதிதா தேவியே அந்தப் பாடல்களுக்குக் காரணமாவர்”  என்று புகழ்ந்து பெருமையுடன் பாரதியார் சமர்ப்பணம் செய்திருக்கிறார்.

Read Full Post »