Feeds:
Posts
Comments

Posts Tagged ‘விவேகானந்தரின் பொன்மொழிகள்’

சுவாமி விவேகானந்தரின் மன உறுதி…

ஒரு சமயம் சுவாமி விவேகானந்தர் லண்டன் மாநகருக்குச் சென்றிருந்தார். அங்கு அவரது நண்பர் ஒருவரின் பண்ணை வீட்டில் தங்கியிருந்தார். அந்தப் பண்ணை வீடு மிகப் பெரிய நிலப்பரப்பில், இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் இருந்தது. அங்கே நிறைய மாடுகள் வளர்க்கப்பட்டன.

ஒரு நாள் மாலை, பண்ணை மைதானத்தில் விவேகானந்தர் வாக்கிங் சென்று கொண்டிருந்தார். அவருடன் நண்பரும், நண்பரின் மனைவியும் நடந்து சென்று கொண்டிருந்தனர்.

அப்போது—

சற்றும் எதிர்பாராதவிதமாக ஒரு மாடு அவர்களை நோக்கி சீறிப் பாய்ந்து வந்தது. அதன் மூர்க்கத்தனமான ஓட்டத்தைப் பார்த்து பயந்து போன நண்பரின் மனைவி, அப்படியே மயங்கி விழுந்து விட்டார்.

அதைக் கண்டதும் விவேகானந்தரும், அவரது நண்பரும் துணுக்குற்றனர்.

மனைவியைத் தூக்க நண்பர் முயன்றார். அப்போது மாடு அவர்களை நெருங்கி விட்டது. நண்பருக்குக் கையும் ஓடவில்லை; காலும் ஓடவில்லை.

இன்னும் சில நொடிகள் அங்கே இருந்தால் மாட்டின் கொம்புகளுக்கு இரையாக நேரிடும் என்பதை உணர்ந்த நண்பர், தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள எழுந்து வேறு திசையில் ஓடினார். ஆனால், விவேகானந்தர் அப்படி இப்படி அசையாமல் ஆணி அடித்தது போல் அந்த இடத்திலேயே நின்றுவிட்டார்.

பாய்ந்து வந்த மாடு, கீழே விழுந்து கிடந்த நண்பரின் மனைவியையும் விவேகானந்தரையும் விட்டு விட்டு, ஓடிக் கொண்டிருந்த நண்பரைத் துரத்தியது.

அதைக் கண்ட நண்பர் பின்னங்கால் பிடறியில் அடிக்க, உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓடினார். மாடும் விடாமல் அவரைத் துரத்தியது.

அதிர்ஷ்டவசமாக ஒரு கட்டடத்திற்குள் புகுந்து தப்பினார் நண்பர். அதன் பிறகே பண்ணை ஊழியர்கள் ஓடிவந்து மாட்டைப் பிடித்துக் கட்டிப் போட்டனர்.

விவேகானந்தர் அதன் பிறகே அந்த இடத்தை விட்டு அசைந்தார்.

அங்கு வந்த நண்பருக்கோ ஒரே ஆச்சரியம். அப்போது நண்பரின் மனைவியும் மயக்கம் தெளிந்து எழுந்தார்.

“”சிறிது கூட பயமே இல்லாமல் அந்த ஆபத்தான நேரத்திலும் ஒரே இடத்தில் உறுதியாக உங்களால் எப்படி நிற்க முடிந்தது?” என்று கேட்டார் நண்பர்.

அதைக் கேட்டு மெல்லப் புன்னகைத்த விவேகானந்தர், “”நான் வித்தியாசமாக எதையும் செய்து விடவில்லை. வருவது வரட்டும்; சமாளிப்போம் என்ற ஒருவித மன உறுதியுடன் நின்றுவிட்டேன். ஓடுபவரைக் கண்டால் துரத்திச் செல்வது மிருகங்களுக்கு உரிய குணம். அதனால்தான் மாடு என்னை விட்டு விட்டு, ஓடிக் கொண்டிருக்கும் உங்களைத் துரத்தியது,” என்று முடித்தார்.

உயிருக்கு ஆபத்தான நேரத்தில் கூட, அதைக் கண்டு பயந்து ஓடாமல், வருவது வரட்டும் என்ற மன உறுதி பெற்றிருந்த சுவாமி விவேகானந்தரைப் பார்த்துப் பெரிதும் வியந்தார் நண்பர்.

உயிரே போகும் நிலை வந்தாலும் தைரியத்தை விடாதே ! நீ சாதிக்க பிறந்தவன் துணிந்து நில் , எதையும் வெல்.

–சுவாமி விவேகானந்தா ..

Read Full Post »

விவேகானந்தரின் வீர முரசு – மதம்

மனிதனின் ஏற்கனவே இருக்கின்ற தெய்வீகத்தை வெளிப்படுத்துவது மதம்.

 

மதம் என்பது ஆன்மா சம்பந்தப்பட்டது,சமூக விஷயங்களில் தலையிட அதற்கு எந்த உரிமையும் இல்லை குறிப்பாக நீங்கள் நினைவில் வைக்க வேண்டும். ஏற்கனவே விளைந்துள்ள தீமைகள் அனைத்தும் அப்படி தலையிட்டதன் காரணமாகவே என்பதையும் மறக்கக் கூடாது.

ஒருமதம் பயனுள்ளதாக இருக்க வேண்டுமானால் அது உத்வேகம் மிக்கதாக இருக்க வேண்டும். அதே வேளையில் அதில் உட்பிரிவுகள் பெருகிக் கொண்டே போகின்ற அபாயத்தை  தடுக்க வேண்டும். பிரிவினை வாதம் அற்ற பிரிவாக இருப்பதன் மூலம் இதை நாம் தடுக்க முடியும்; ஏனெனில் இதில் ஒரு பிரிவிற்கான அனுகூலங்கள் அனைத்தும் இருக்கும், உலகம் தழுவிய ஒரு மாதத்திற்கான பரந்த தன்மையும் இருக்கும். எப்போது ஆன்மா ‘அன்பான இறைவனின்’ தேவையை ஆசையை, ஏக்கத்தை உணருமோ அப்போதுதான் மத உணர்வே ஆரம்பிக்கிறது, அதற்கு முன்பு அல்ல.

மதத்தின் ரகசியம் கொள்கைகளில் இல்லை, செயல்முறையில் தான் உள்ளது. நல்லவனாக இருப்பது, நன்மை செய்வது —– இதுதான் மதத்தின் முழுப்பரிமாணம்.

புலன்களுக்கு அடிமையாவதைத் தடுக்கும் ஆசை தோன்றும்போதுதான் மனிதனின் இதயத்தில்மத உணர்வு உதயமாகிறது. ஆகவே மனிதன் புலன்களுக்கு அடிமையாகாமல் தடுப்பதும்,அவன் தன் சுதந்திரத்தை வலியுறுத்த உதவி செய்வதும் தான் மதத்தின் முழுநோக்கம்.

என்னென்ன தீமைகளுக்கு மதம் காரணம் என்று சொல்கிறார்களோ அவை எதற்கும் மதம் காரணம் அல்ல. எந்த மதமும் மனிதர்களைக் கொடுமைப்படுத்தவில்லை, எந்த மதமும் சுனியக்காரிகளைக் கொளுத்தவில்லை, எந்த மதமும் இத்தகைய செயல்களைச் செய்யவில்லை, அப்படியானால் இவற்றைச் செய்யும்படி மக்களைத் தூண்டியது எது? அரசியல், ஒருபோதும் மதம் அல்ல. மதத்தின் பெயரில் அரசியல் நிலவுமானால் அது யாருடைய தவறு?

மனிதன் இறையனுபூதி பெறவேண்டும், அவரை உணர வேண்டும், அவரை பார்க்க வேண்டும், அவருடன் பேசவேண்டும். அதுதான் மதம்.

 

மதம் என்பது அனுபூதி, வெறும் பேச்சோ, நம்ப முயற்சிப்பதோ, இருட்டில் தேடுவதோ,முன்னோர்களின் வார்த்தைகளைக் கிளிப்பிள்ளை போல் ஒப்பித்துவிட்டு அதுதான் மதம் என்று நினைப்பதோ,மத உண்மைகளை அரசியலாக்குவதோ மதம் அல்லவே அல்ல.

பொருளாதார மதிப்பு இருக்கின்ற மதமே வெற்றி பெரும். ஆயிரக்கணக்கான ஒரே  விதமதப் பிரிவுகள் ஆதிக்கத்திற்குப் பாடுபடலாம். ஆனால் பொருளாதாரப் பிரச்சினையைத் தீர்ப்பவைகளே ஆதிக்கத்தைப் பெறுகின்றன.

ஒரு லட்சிய மதத்தின் நோக்கம் இந்த வாழ்விற்கும் உதவ வேண்டும்,மறு உலகிற்கும் வழிகாட்ட வேண்டும் அதே வேளையில், மரணத்தை ஏற்க அது ஒருவனை ஆயத்தம் செய்யவும் வேண்டும்.

மதத்தைப் பற்றிக்கொண்டு சண்டையில் இறங்காதே. மதச்சண்டைகளும் வாதங்களும் அறிவிமையின் அறிகுறி. தூய்மையும் அறிவும் வெளியேறி, இதயம் வரலும்போதே சண்டைகள் தொடங்கும்; அதற்கு முன்னாள் அல்ல.

கொள்கைகளையோ, நம்பிக்கைகளையோ, மதப்பிரிவுகலையோ கோவில்களையோ பொருட்படுத்தாதே. ஒவ்வொரு மனிதனது வாழ்க்கையிலும் சாரமாக அமைகின்ற அறிவுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் அவை என்ன? ஒரு மனிதனிடம் இந்த அறிவு முதிரும் அளவிற்கே,நன்மை செய்யும் ஆற்றல் அவனிடம் அதிகரிக்கின்றது. முதலில் அந்த அறிவைத் தேடித் பெறு. யாரையும் குறைகூறாதே.ஏனெனில் எல்லா கொள்கைகளிலும் முடிவுகளிலும் சிறிதாவது நன்மையுள்ளது. மதம் என்பது கொள்கைகளோ கோட்பாடுகளோ அல்ல; அனுபூதியே மதம். அதை உனது வாழ்க்கையில் காட்டு.

Read Full Post »

விவேகானந்தரின் வீர முரசு – மனிதன்

மனிதனின் லட்சியம் என்ன? இன்ப நுகர்ச்சியா, ஞானமா? காட்டாயமாக இன்ப நுகர்ச்சி அல்ல. சுகத்தையோ துக்கத்தையோ அனுபவிப்பதற்காகப் பிறந்தவன் அல்ல மனிதன்.ஞானமே லட்சியம். நாம் பெற முடிந்த ஒரே இன்பம் ஞானம் தான்.

மனிதனுக்கு ஒழுக்கமும் தூய்மையும் ஏன் தேவை? ஏனெனில் அது அவனது சங்கல்பத்தைத் திடம்பெறச் செய்கிறது. உண்மையான இயல்பை உணர்த்துவதன்முலம் சங்கல்பத்திற்கு வலிமை தருகின்ற ஒவ்வொன்றும் ஒழுக்கம். இதற்கு மாறானதை விளைவிக்கும் ஒவ்வொன்றும் ஒழுக்கமின்மை.

மனிதன் அல்லவா பணத்தை உருவாக்கிறான்! பணம் மனிதனை உருவாக்கியது என்று எங்கே நீ கேள்விப்பட்டாய்? உன் எண்ணத்தையும் பேச்சையும் முழுமையாக ஒன்றுபடுத்தி விட்டால், உன் பேச்சும் செயலும் ஒன்றாக இருக்குமானால் பணம் தண்ணீரைப்போல் தானாக உன் காலடியில் வந்து கொட்டும் .

உறங்கும் ஆன்மாவை எழுப்புங்கள்,அது எவ்வாறு விழித்தெழுகிறது என்பதைப் பாருங்கள். உறங்குகின்ற ஆன்மா மட்டும் விழித்தெழுந்து தன்னுணர்வுடன் (self -conscious) செயலில் ஈடுபடுமானால் சக்தி வரும், பெருமைவரும், நன்மைவரும், துய்மைவரும், எவையெல்லாம் மேலானதோ அவை அத்தனையும் வரும்.

அனைத்து ஆற்றல்களும் நம் உள்ளே இருக்கின்றன. நமது முக்தியும் ஏற்கனவே நம்முள் இருக்கிறது. ஆன்மா சுருங்கியுள்ளது அல்லது மாயையாகிய திரையால் மறைக்கப்பட்டிருக்கிறது என்று எப்படி வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளுங்கள், கருத்து இதுதான் ——- மிகத் தாழ்ந்தவர் முதல் அனைவரிடமும் புத்தர் ஆவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

நாம்  துன்பப்படுவதற்கு நாம், நாமேதான் கரணம்; வேறு யாரும் அல்ல. நாமே வளைவுகள் நாமே காரணங்கள். எனவே நாம் சுதந்திரர்கள். நான் துன்பப்பட்டால் அது எனக்கு நானே உண்டாக்கிக் கொண்டது; நான் விரும்பினால் என்னால் மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்பதையும் இது காட்டுகிறது. நான் துய்மையர்ரவனாக இருந்தால் அதுவும் நான் செய்துக்கொண்டது தான். இதுவே நான் விரும்பினால் தூயவனாக இருக்க முடியும் என்பதையும் காட்டுகிறது. மனித சங்கல்பம் எல்லா சூழ்நிலைகளையும் கடந்து நிற்கிறது. அந்த வலிமையான, உறுதியான எல்லையற்ற சங்கல்பத்திற்கும் சுதந்திரத்திற்கும் முன்னால் எல்லா ஆற்றல்களும், இயற்கையின் ஆற்றல்கள் கூட, கட்டாயம் தலைவணங்கியே தீரவேண்டும், ஒடுங்கியாக வேண்டும். சேவகர்களாக வேண்டும்

நமது தகுதிக்கு ஏற்றதையே நாம் பெறுகிறோம். உலகம் கெட்டது, நாம் நல்லவர்கள் என்று சொன்னால் அது பொய். அப்படி ஒருபோதும் இருக்க முடியாது. அது நமக்கே நாம் சொல்லிக்கொள்ளும் ஒரு பெரும் பொய்.

கற்றுக்கொள்ள வேண்டிய முதற்பாடம் இதுவே. வெளியிலுள்ள எதையும் சபிக்காமலும் வெளியிலுள்ள ஒருவர்மீதும் பழி சுமத்தாமலும் இருக்கத் தீமானியுங்கள். மனிதனாக இருங்கள்.எழுந்து நில்லுங்கள். பழியை உங்கள் மீதே சுமத்திக்கொள்ளுங்கள். எப்போதும் அதுவே உண்மை என்பதை அப்போது காண்பீர்கள். உங்களையே வசப்படுத்திக் கொள்ளுங்கள்.

வழிபாட்டிற்குரிய ஒரே கடவுள் மனிதனே.எல்லா உயிர்களும் கோயில்கள் என்பது உண்மைதான். ஆனால் அனைத்திலும் உயர்ந்த கோயில் மனிதன், கோயில்களுக்குள் தாஜ்மஹால் அவன். அதில் வழிபட முடியாவிட்டால் வேறு எந்தக் கோயிலும் எந்தப் பயனும் தராது.

இயற்கைக்கு அப்பால் செல்லப் போராடிக் கொண்டிருக்கின்ற அளவிற்கு மனிதன் மனிதனாகிறான். இந்த இயற்கை அகம் புறம் இரண்டும் ஆகும். புற இயற்கையை வெல்வது நன்மைதான்; மிகுந்த பெருமைதான். அக இயற்கையை வெல்வது  அதைவிடச் சிறப்பு வாய்ந்தது. நட்சத்திரங்களையும் கிரகங்களையும் அடக்கியாளும் விதிகளை அறிவது பெருமையும் நன்மையும் தான். ஆனால் ஆசைகளையும் உணர்ச்சிகளையும் மனவலிமையும் அடக்கியாளும் விதிகளை அறிவது அளவற்ற சிறப்பு உடையது.

அரசியல் வாழ்க்கையிலும் சமூக வாழ்க்கையிலும் ஒருவன் சுதந்திரம் பெறலாம். ஆனால் ஆசைகளுக்கும் கோபத்திற்கும் அவன் அடிமையாக இருந்தால் உண்மையான சுதந்திரத்தின் தூய இன்பத்தை அவனால் உணர முடியாது.

Read Full Post »

விவேகானந்தரின் வீர முரசு – வீர இளைஞருக்கு

வீரர்களுக்கே முக்தி எளிதாகக் கிடைக்கிறது ,பேடிகளுக்கு அல்ல. வீரர்களே, கச்சையை வரிந்துகட்டுங்கள். மகாமோக மாகிய எதிரிகள் உங்கள் முன் உள்ளார்கள்.பெருஞ் செயல்களுக்குத் தடைகள் பல என்பது உண்மைதான், என்றாலும் இறுதி வரை விடாமல் முயலுங்கள். மோகமாகிய முதலையிடம் சிக்கிய மனிதர்களைப் பாருங்கள். அந்தோ,இதயத்தைப் பிளக்கவல்ல அவர்களின் சோகக்  கூக்குரலைக் கேளுங்கள். வீரர்களே!

கட்டுண்டவர்களின் தலைகளை வெட்டி எறியவும், எளியவர்களின் துயரச் சுமையைக் குறைக்கவும், பாமரர்களின் இருண்ட உள்ளங்களை ஒளிபெறச் செய்யவும் முன்னேறிச் செல்லுங்கள். ‘அஞ்சாதே அஞ்சாதே ‘ என்று முழங்குகிறது வேதாந்த முரசு. பூமியில் வசிக்கின்ற மனிதர்கள் அனைவருடைய இதய முடிச்சுக்களையும் அது அவிழ்த்து எறியட்டும்!

எழுந்திருங்கள், எழுந்திருங்கள், நீண்ட இரவு கழிந்து கொண்டிருக்கிறது, பகற்பொழுது நெருங்கிக் கொண்டிருக்கிறது, அலை எழுந்துவிட்டது, அதன் பெருவேகத்தை எதிர்த்து நிற்க எதனாலும் முடியாது. என் இளைஞர்களே,வேண்டுவதெல்லாம் உற்சாகமே !

நம்புங்கள், நம்புங்கள், ஆணை பிறந்துவிட்டது, இறைவனின் கட்டளை பிறந்துவிட்டது— பாரதம் முன்னேறியே ஆக வேண்டும், பாமரர்களும் ஏழைகளும் நலம் பெற வேண்டும். இறைவனின் கையில் கருவிகளாக இருப்பதற்காக மகிழ்ச்சி கொள்ளுங்கள், ஆன்மீகக் கருவிகளாக இருப்பதற்காக மகிழ்ச்சி  கொள்ளுங்கள்.

உன்னிடம் நேர்மை உள்ளதா? உயிரே போனாலும் நீ சுயநலமில்லாதவனாக இருக்கிறாயா? உன்னிடம் அன்பு உள்ளதா? அப்படியானால் பயப்படாதே, மரணத்திற்கும் அஞ்ச வேண்டாம். என் பிள்ளைகளே, முன்னோக்கிச் செல்லுங்கள். உலகம் முழுவதும் ஒளியை எதிர்பார்த்து நிற்கிறது, ஆவலுடன் காத்து நிற்கிறது. அந்த ஒளி இந்தியாவிடம் மட்டுமே உள்ளது.

என் மகனே, உறுதியாகப் பற்றி நில்.உனக்கு உதவுவதற்காக யாரையும் லட்சியம் செய்ய வேண்டாம். மனித உதவிகள் அனைத்தையும்விட இறைவன் எல்லையற்ற மடங்கு பெரியவர் அல்லவா? புனிதனாக இரு. இறைவனிடம் நம்பிக்கைவைத்திரு, அவரையே எப்போதும் சார்ந்திரு—- நீ சரியான பாதையில் போகிறாய்; உன்னை எதுவும் எதிர்த்து நிற்க முடியாது.

நீங்கள் உண்மையிலேயே என் குழந்தைகளானால் எதற்குமே அஞ்ச மாட்டீர்கள் எதற்காகவும் நிற்க மாட்டீர்கள். சிங்கங்களெனத் திகழ்வீர்கள். நாம் இந்தியாவையும், ஏன், உலகம் முழுவதையுமே விழித்தெழச் செய்தாக வேண்டும் கோழைத் தனம் உதவாது. முடியாது என்பதை நான் ஏற்றுக்   கொள்வதில்லை. புரிகிறதா? உயிரே போவதானாலும் உண்மையைப் பற்றி நில்லுங்கள்.

‘ஓளி மிக்கவனே, எழுந்திரு. எப்போதும் தூயவனே எழுந்திரு. பிறப்பு இறப்பு அற்றவனே எழுந்திரு. எல்லாம் வல்லவனே, எழுந்து உனது உண்மை இயல்பை வெளிப்படுத்து. இந்த அற்ப நிலைகள் உனக்குத் தகுந்தவை அல்ல’ என்று சொல்லுங்கள்.

ஒழுக்க நெறியில் நில். வீரனாக இரு. முழுமனத்துடன் வேலை செய். பிறழாத ஒழுக்கம் உடையவனாக இரு. எல்லையற்ற துணிவு உடையவனாக இரு. மதத்தின் கொள்கைகளைப் பற்றி உன் மூலையைக் குழப்பிக் கொள்ளாதே. ஒவ்வொருவரையும் நேசிக்க முயற்சி செய்.

வஞ்சனையால் பெரும் பணி எதையும் செய்ய இயலாது. அன்பாலும் உண்மையை நாடுவதாலும் பேராற்றலாலும் தான் பெரும் செயல்கள் நிறை வேற்றப் படுகின்றன. எனவே உனது ஆண்மையை வெளிப்படுத்து.

எனது துணிவுடைய இளைஞர்களே, நீங்கள் பெரும் பணிகளைச் செய்ய பிறந்தவர்கள் என்பதில் நம்பிக்கை கொள்ளுங்கள். குட்டி நாய்களின் குறிப்பைக் கண்டு நடுங்க்காதீர்கள்; வானத்தில் முழங்கும் இடியோசைக்கும் அஞ்ச வேண்டாம்; நிமிர்ந்து நின்று வேலை செய்யுங்கள்.

நண்பா, ஏன் அழுகிறாய்? உனக்குள் எல்லா சக்தியும் உள்ளது. பலசாலியே,உனது எல்லாம் வல்ல இயல்பை வரவழை. மூவுலகும் உனது காலடியில் அமரும். வெல்வது ஆன்மா ஒன்றே, ஜடமல்ல. தங்களை உடம்பாகக் கருதுகின்ற முடர்கள் தான், ‘நாங்கள் பலவீனர்கள்’ என்று கதறுவார்கள். நாடு வேண்டுவது துணிச்சலும் விஞ்ஞான அறிவும் தீரமும் பேராற்றலும் அளவில்லா ஊக்கமுமே. பேடித்தனம் உதவாது. சிங்கத்தின் தீரமுள்ள செயல் வீரனையே திருமகள் நாடுவாள். பின்னால் பார்க்க வேண்டியதே இல்லை. முன்னே செல்லுங்கள்! எல்லையில்லாத வலிமையையும் எல்லையில்லாத ஊக்கமும் எல்லையில்லாத தீரமும் எல்லையில்லாத பொறுமையும் நமக்கு வேண்டும். அப்போது தான் பெரும் பணிகளை ஆற்ற இயலும்.

வலிமையின்மையே துயரத்திற்கு ஒரே காரணம். நாம் பலவீனர்களாக இருப்பதால் கெட்டவர்களாகிறோம். நம்மிடம் பொய்யும் திருட்டும் கொலையும் வேறு பாவச் செயல்களும் இருப்பதற்குக் காரணம் நமது பலவீனமே. நாம் துன்பமடைவது நமது பலவீனத்தாலேயே. நாம் இறப்பதும் நமது பலவீனத்தால்தான்.நம்மைப் பலவீனர்களாக்க ஒன்றும் இல்லாதபோது மரணமும் இல்லை, துயரமும் இல்லை.

நமது நாட்டிற்கு இப்போது வேண்டியது இரும்பை ஒத்த தசைகளும் எக்கைப்போன்ற நரம்புகளுமே. எதனாலும் தடைபடாத,உலகின்   விந்தைகளையும் மறை பொருள்களையும் ஊடுருவிப் பார்க்கவல்ல, கடலின் அடியாழம்வரை செல்ல நேரிட்டாலும் கருதியதை முடிப்பதற்கான ஆற்றல் பெற்ற, ஆன்மீக பலம் கொண்ட மனங்களே இப்போதைய தேவை.

லட்சியம் உடையவன் ஆயிரம் தவறுகள் செய்தால் அது இல்லாதவன் ஐயாயிரம் தவறுகள் செய்வான் என்பது உறுதி. ஆதலால் லட்சியம் மிகவும் தேவை.

ஆம்! உங்கள் இயல்பை மட்டும் உணர்ந்துவிட்டால் நீங்கள் தெய்வங்களே. உங்களை இழிவு படுத்துவதாக எப்போதாவது எனக்குத் தோன்றுமானால், அது உங்களை மனிதர் என்னும் போதுதான்.

முதலில் நாம் தெய்வங்களாவோம். பிறகு பிறரும் தெய்வங்கலாபாத் துணை செய்வோம். ‘ஆகுக, ஆக்குக’—- இதுவே நமது தாரக மந்திரம் ஆகட்டும்.

எழுந்திருங்கள், உழையுங்கள். இந்த வாழ்வு எத்தனை நாளைக்கு? உலகில் வந்துவிட்டீர்கள். அதற்கு அறிகுறியாக ஏதேனும் விட்டுச்செல்லுங்கள்.இல்லாவிட்டால், உங்களுக்கும் மரங்கள் மற்றும் கற்களுக்கும் என்ன வேறுபாடு? அவையும் தோன்றுகின்றன, கெடுகின்றன, மறைகின்றன.

உனக்குள் இருக்கும் தெய்வீகத்தை வெளிப்படுத்து. அதைச் சுற்றி ஒவ்வொன்றும் அதற்கு இசைவாக ஒழுங்கு படுத்தப்படும்.இறக்கும் வரை பணிசெய். நான் உன்னுடன் உள்ளேன்; நான் போனபின், எனது ஆன்மா உன்னுடன் உழைக்கும். இந்த வாழ்வு வரும், போகும். செல்வமும் புகழும் போகமும் சிலநாட்களுக்கே. உலக ஆசையில் மூழ்கிய ஒரு புழுவாக இறந்தாலும், உண்மையைப் போதித்துக்கொண்டே செயல்களத்தில் உயிரை விடுவது நல்லது.மிக நல்லது.

Read Full Post »