Feeds:
Posts
Comments

Posts Tagged ‘நல்ல கதைகள்’

முதல் மனைவியை நேசியுங்கள்!

ஒரு பணக்கார வணிகனுக்கு நான்கு மனைவிகள் இருந்தனர்.

வணிகனின் முதல் மனைவி உண்மையான வாழ்க்கைத் துணையாகத் திகழ்ந்தாள். அவனுடைய வீட்டையும், சொத்தையும், வணிகத்தையும் கவனித்துக் கொண்டாள். அவள் அவனை அதிகமாக நேசித்த போதிலும், அவன் அவளை நேசிக்கவில்லை.

ஒருநாள் வணிகன் திடீரென்று நோய் வாய்ப்பட்டு படுக்கையிலிருந்தான். அவன் இறக்கப் போவதை அறிந்து கொண்டான். எனவே அவன், தான் அதிகமாக நேசித்த தன் நான்காவது மனைவியை அழைத்து, “நீ என் அருகில் இருந்து என்னைக் கவனித்துக் கொள்வாயா?” என்று கேட்டான். அவள் என்னல் முடியாது என்று கூறி விட்டுப் போய் விட்டாள். அவள் பதில் அவனை வருத்தியது

கவலையடைந்த அவன் தன் மூன்றாவது மனைவியை அழைத்தான். அதே கேள்வியைக் கேட்டான். அவள், “முடியாது. இவ்வுலக வாழ்க்கை எவ்வளவு இன்பமானது, நீங்கள் இறந்தவுடன் நான் மறுமணம் செய்து கொள்ளலாமென்று இருக்கிறேன்.” என்றாள். இந்த பதிலைக் கேட்ட அவன் இதயம் கல்லானது.

அதன் பிறகு, அவ்வப்போது பிரச்சனைகளுக்குத் தீர்வு சொல்லும் தன் இரண்டாம் மனைவியை அழைத்து அவளிடமும் அதே கேள்வியைக் கேட்டான். அவளோ, “நான் மிகவும் வருந்துகிறேன். இந்த முறை நான் உங்களுக்கு உதவி செய்ய முடியாது. வேண்டுமென்றால் நான் உங்களை நல்ல முறையில் அடக்கம் செய்து விடுகிறேன்” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டாள். அவளுடைய பதிலும் அவனுக்கு இடி தாக்கியது போலிருந்தது.

அவன் கண்களை மூடினான். அப்பொழுது “நான் உங்களுடனே வருவேன், நீங்கள் எங்கே சென்றாலும் நான் உங்களைப் பின்பற்றுவேன்” என்று ஒரு சத்தம் கேட்டது. அது யார் என்று பார்க்க விரும்பி, தன் கண்களைத் திறந்து பார்த்த போது, அவனுடைய முதல் மனைவி நின்று கொண்டிருந்தாள். அவள் உணவு குறைபாட்டால் மிகவும் மெலிந்து போயிருந்தாள். அவன் அவளிடம், நான் நன்றாக இருந்த சமயம், நான் உன்னைக் கவனித்திருக்க வேண்டும் என்றான்.

உண்மையில் இந்த வணிகனைப் போல் நம் எல்லோருக்கும் நான்கு மனைவிகள் இருக்கிறார்கள்.

1. நான்காவது மனைவி நம்முடைய உடல். அது நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக அதற்கு எவ்வளவு நேரம் செலவழித்தாலும், நாம் இறக்கும் போது அது நம்மோடு வராது. நம்மை விட்டுச் சென்று விடும்.

2. மூன்றாவது மனைவி நம்முடைய உடமைகள். சொத்து, பதவி போன்றவை நாம் இறந்த பின்பு வேறொருவருடையவராகி விடுகிறது.

3. இரண்டாவது மனைவி என்பது நம்முடைய குடும்பமும், நண்பர்களும். எவ்வளவுதான் அவர்கள் நம்முடன் நெருக்கமாக இருந்தாலும், அவர்கள் கல்லறை / எரியூட்டுமிடம் வரைதான் நம்முடன் வருவார்கள்.

4. நம்முடைய முதல் மனைவி என்பவள் நம்முடைய ஆன்மா. பொருள், சொத்து மற்றும் சுக போகத்தை நாடும் பொருட்டு அதைக் கவனிக்காமல் விட்டு விடுகிறோம். எனவே சாகும் நேரத்தில் புலம்புகிறோம்.

 எனவே வாழ்க்கையின் உண்மை அறிவோம்,

********************

Read Full Post »

சீதையின் பொறுமை

 

இலங்கை அசோகவனத்தில் ராவணனால் சிறைவைக்கப்பட்டிருந்த சீதையைக் கண்டு ராமன் அனுப்பிய செய்தியை அனுமன் சொன்னான். பின்னர், அங்கிருந்த அரக்கியர் கூட்டத்தைக் குறிப்பிட்டு, தேவி, உன்னைப் பயமுறுத்திய இவ்வரக்கியரை நான் கொல்ல நீ அனுமதிக்க வேண்டும். இவர்கள் கொடுமையே உருவானவர்கள். இராவணனுடைய ஆணையால் மட்டுமல்ல; இவர்களுக்கு இயற்கையாக உள்ள கொடுமைக்குணம் உன்னைத் துன்புறுத்த இவர்களைத் தூண்டியது. இவர்களைத் தண்டிக்க வேண்டும். காது, மூக்கை, அறுக்க கீழே வீழ்த்தி உதைக்க வேண்டும் எனக்கு அனுமதி தா! என்றான். அனுமனின் இந்தக் கோரிக்கையை சீதை சற்றும் எதிர்பார்க்கவில்லை அவள் திரிசடையின் தலையீட்டால் முன்பே அரக்கியருக்கு சரண் தந்துள்ளாள். இப்போது சீதை அபலைகளை நான் மன்னித்து விட்டேன். அவர்கள் தவறே புரிந்திருப்பினும், நீயும் நானும் ஏன் அவர்களுக்கு தீங்கு இழைக்க வேண்டும், என்று கூறிவிட்டு ஒரு கதையை அனுமனுக்குக் கூறினாள்.

ஒரு புலி வேடனைத் துரத்திக்கொண்டு போயிற்று. வேடன் அருகில் இருந்த மரத்தில் ஏறிக் கொண்டான். அதற்கு முன்பே, மரத்தின் மீது ஒரு கரடி இருந்தது.  புலி கரடியிடம் கூறிற்று: இவ்வேடன்: நமது மிருக குலத்துக்கே பகைவன்; இவனைக் கீழே தள்ளி விடு! இருக்கலாம் ஆனால், இவன் நான் இருந்த மரத்தை அண்டியதால் என்னிடம் சரண் புகுந்தவன் ஆகிறான். சரண் அடைந்தவனைக் கைவிட மாட்டேன் இவ்வாறு சொல்லிவிட்டு கரடி உறங்கிற்று. சற்று நேரம் கழித்து புலி வேடனிடம் கூறிற்று: எனக்கு பசியாக இருக்கிறது. நீ அந்தக் கரடியைக் கீழே தள்ளிவிட்டால், நான் அதை உண்டு பசியாறி உன்னை விட்டு விடுகிறேன்.

வேடன் கரடியைத் தள்ளிவிட்டான் கரடியோ மரத்தின் கீழ்க் கிளை ஒன்றைப் பிடித்துக் கொண்டு, விழாமல் தப்பி, மேலே ஏறிக் கொண்டது. அப்போது புலி கரடியிடம் சொன்னது. இந்த மனிதன் நன்றிகெட்டவன். சரண் அடைந்தவனைக் காப்பாற்றுவேன் என்ற உன்னையே தள்ளிவிட்டான். அவனை தள்ளிவிடு! அதற்கு கரடி சொன்னது: எவனோ ஒருவன் தன் ஒழுக்கத்தினின்று வழுவினான் என்பதற்காக நான் என் தர்மத்தைக் கைவிடக் கூடாது. இன்னமும் அவன் சரண் புகுந்தவனே. அவனைத் தள்ளுவது அறத்தினின்று நான் தவறியது ஆகும் என்று கூறி. வேடனைக் கீழே தள்ள மறுத்து விட்டது. துன்பம் இழைத்தவருக்குப் பதிலுக்குத் துன்பம் இழைத்துப் பழி வாங்குவது சாதாரண மனிதர்களின் இயல்பு. சான்றோர்கள் அப்படிப் பழிவாங்க சந்தர்ப்பம் கிடைத்தாலும், துன்பம் இழைக்க மாட்டார்கள். சீதையின் சொல் கேட்டு, மேனிசிலிர்த்து, நெகிழ்ந்து அவளை மீண்டும் கரம் கூப்பி வணங்கினான் அனுமன்.

Read Full Post »

கீதை சொல்லும் பாதை!

         ஒரு ஊரில் வயதான முதியவர் ஒருவர் தன் பேரனுடன் வசித்து வந்தார். தினமும் அதிகாலையில் எழுந்து, சமையலறை மேஜை அருகில் அமர்ந்து, பகவத் கீதை படிப்பது அவர் வழக்கம். அனைத்து விஷயங்களிலும் அவரைப் பின்பற்ற நினைத்த பேரனும், கீதை படிக்க முற்பட்டான். ஒருநாள் தாத்தாவிடம், நானும் உங்களைப்போல் தினமும் பகவத் கீதை படிக்கிறேன். ஆனால், எனக்கு அதன் அர்த்தம் விளங்கவில்லை; புரிந்த கொஞ்சமும், புத்தகத்தை மூடி வைத்ததும் மறந்துவிடுகிறது. இப்படி அதைப் படிப்பதால், எனக்கு என்ன பிரயோஜனம்? என்று கேட்டான். அடுப்பில் கரியைப் போட்டுக்கொண்டிருந்த தாத்தா, அமைதியாக அந்தக் கரிக் கூடையைச் சிறுவனிடம் கொடுத்து, நதிக்குப் போய் இந்தக் கூடையில் நீர் கொண்டு வா என்றார். பேரனும் கூடையுடன் ஆற்றுக்கு ஓடினான். ஆனால், மூங்கில் கூடையில் தண்ணீர் தங்குமா என்ன? அவன் வீடு திரும்புவதற்குள் தண்ணீர் முழுவதும் ஒழுகிவிட்டது. தாத்தா சிரித்துக்கொண்டே, நீ இன்னும் வேகமாக வர வேண்டும் என்று சொல்லி, மறுபடியும் அவனைத் தண்ணீர் எடுத்து வர அனுப்பினார்.

இந்த முறை சிறுவன் வேகமாக ஓடி வந்தான்; ஆனாலும், வீடு சேர்வதற்குள் கூடை காலியாகிவிட்டது. கூடையில் தண்ணீர் கொண்டு வருவது சாத்தியம் இல்லை என்று புரிந்துகொண்ட சிறுவன், வாளி ஒன்றைக் கையில் எடுத்தான். ஆனால் தாத்தாவோ, எனக்கு வாளியில் நீர் வேண்டாம். கூடையில்தான் வேண்டும். நீ இன்னும் தீவிரமாக முயற்சி செய் என்று அவனை மறுபடியும் ஆற்றுக்கு அனுப்பினார். அந்த முறையும் அவனால் தண்ணீர் கொண்டுவர முடியவில்லை. போங்க தாத்தா, இது பயனற்ற வீண் வேலை! என்றான், மூச்சு வாங்கியபடி. அவனைப் பார்த்து புன்னகைத்த தாத்தா, நீ இதைப் பயனற்றது என்கிறாய். ஆனால், கூடையைப் பார், தெரியும் என்றார். பையன் கூடையைப் பார்த்தான். முதல் தடவையாக அது முற்றிலும் வேறாக மாறியிருப்பதைக் கண்டான். பழைய, கரி படிந்த கூடை, இப்போது உள்ளும் புறமும் சுத்தமாகிப் புத்தம் புதியது போல் காணப்பட்டது! தாத்தா சொன்னார்: குழந்தாய்! கீதை படிக்கும்போது இதுதான் நமக்கும் நேர்கிறது. உனக்கு அர்த்தம் புரியாமல் இருக்கலாம்; நினைவில் நிற்காமல் போகலாம். ஆனால், நீ உள்ளும் புறமும் தூய்மையடைந்து முற்றிலும் புதிய மனிதனாகிவிடுவாய்! இது கீதாச்சார்யனான கிருஷ்ண பரமாத்மா, நம் வாழ்வில் நிகழ்த்தும் அற்புதம்!

***********

 

 

 

Read Full Post »

மனதைத் தொட்ட உண்மைக் கதை

அது ஒரு விளையாட்டு மைதானம். 8 சிறுவர், சிறுமிகள், வரிசையாக நின்று கொண்டு இருந்தார்கள். அவர்கள் ஒரு ஓட்டப்பந்தயத்திற்காக தயாராகி கொண்டிருந்தனர்.

ரெடி, ஸ்டார்ட் , கோ

விளையாட்டு துப்பாக்கியின் சத்தம் கேட்டு குழந்தைகள் ஓட தொடங்கினர்.

ஒரு 15 அடி சென்று இருப்பார்கள். அவர்களில் ஒரு குழந்தை திடிரென்று கீழே விழுந்தது.

அடிபட்ட காரணத்தால் அந்த குழந்தை அழ ஆரம்பித்தது.

ஏதோ சத்தம் வரவே ஓடி கொண்டிருந்த அணைத்து குழந்தைகளும் திரும்பி பார்த்தனர். பின்னர் அந்த குழந்தையை நோக்கி ஓடி வந்தனர்.

அதில் ஒரு குழந்தை கீழே குனிந்து அவள் நெற்றியில் முத்தமிட்டு கேட்டது.

“இப்போ வலி போயிடிச்சா”

அதை பார்த்த மற்ற குழந்தைகளும் அவளை முத்தமிட்டனர்.

பின்னர் எல்லோரும் அந்த குழந்தையை தூக்கிணார்கள்.

பின்னர் அந்த குழந்தையை தூக்கியவாறே வெற்றி இலக்கை நோக்கி ஓடிணார்கள்.

அதை பார்த்த விழா குழுவினரும்,பார்வையளர்களும் அதிர்ச்சி அடைந்தனர். எல்லோர் கண்களிலும் கண்ணீர். அந்த பரவசத்தால் எழுந்து நின்று கை தட்டி பாரட்டிணார்கள்.கண்டிப்பாக அந்த ஒலி கடவுளுக்கும் கேட்டு இருக்கும்.

ஆமாம். இது உண்மை. இது நடந்தது வேறு எங்குமில்லை. நம் இந்தியாவில், அதுவும் ஹைதராபாத்தில் நடந்த உண்மை.

அந்த விழாவை நடத்தியது மனநலம் குன்றியவர்களுகான தேசிய நிறுவனம்.

அதில் கலந்து கொண்ட குழந்தைகள் மனநலம் குன்றியவர்கள்.

ஆம். அவர்கள் மனத்தால் குன்றியவர்கள்.

ஆணல் குணத்தால்?

இதிலிருந்து அவர்கள் உலகத்திற்க்கு சொல்வது என்ன?

மனித ஒற்றுமை

 மனித நேயம்

 மனித சமத்துவம்.

 வெற்றி பெற்ற மக்கள், தன்னை விட தாழ்ந்தவர்களுக்கு உதவிட வேண்டும். அப்போதுதான் அவர்கள் தாழ்வு மனபான்மைக்கு ஆளாக மட்டார்கள்.

அன்பு மட்டுமே இந்த உலகை நிற்காமல் ஓட வைக்கும். 
தூய்மை , பொறுமை , விடா முயற்சி இவை முன்றும் வெற்றிக்கு இன்றியமையாதவையாகும் . அத்துடன் இவை அனைத்துக்கும் மேலாக அன்பு இருந்தாக வேண்டும் .

–சுவாமி விவேகானந்தா …

Read Full Post »

ஆசை அழித்து விடும்!

முனிவர் ஒருவரின் தவத்தை மெச்சி கடவுள் அவருக்கு காட்சி கொடுத்து, “என்ன வரம் வேண்டும்?” என்று கேட்டார்.

 “தங்கள் தரிசனமே எனது தவத்தின் நோக்கம்; வேறெதுவும் வேண்டாம்” என்றார் அந்த முனிவர்.

கடவுள், “நான் உனக்கு ஒரு விருஷத்தை வரமாக தருகிறேன். கற்பக விருஷம் மாதிரி. இதனிடம் கேட்கக் கூட வேண்டாம். அதனடியில் நின்று கொண்டு யார் என்ன நினத்தாலும் அது உடனே நடக்கும்” என்று அருளினார் .

இந்த மரத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது? இது நமக்கு ஆசையை வளர்த்து நம்மை பாவம் செய்ய வைக்கும் என்று சிந்தித்த முனிவர் அங்கிருந்து ஓடி விட்டார்.

 ஒரு நாள் அந்த வழியே ஆடு மேய்த்துக் கொண்டு வந்த ஒரு இளைஞன் வந்தான். அந்த மரத்து நிழலில் கொஞ்சம் படுத்து ஓய்வெடுக்க நினத்தான்.

 அந்த மரத்தடியில் வந்து படுத்துக் கொண்டே யோசித்தான், “இது என்ன பொழைப்பு; தினம் தினம் ஆட்டை மேய்ச்சிட்டு, ஒரு நல்ல சாப்பாடு கூட சாப்பிட்ட முடிவதில்லை. அரண்மனையில் சாப்பிடற விருந்து மாதிரி சாப்பாடு கிடைச்சா தேவலை”

 அந்த மரத்தினடியிலிருப்பவர் எதை நினைத்தாலும் மரம் தரக்கூடியது என்பதால் அவன் கண் முன்னே அவனுக்கு ராஜோபசார விருந்து படைக்கப்பட்டிருந்தது. அவன் பயந்து போய் விட்டான். இது ஏதாவது பிசாசு அல்லது பூதத்தின் வேலையாக இருக்குமோ என்று அந்த மரத்தை சுற்றி சுற்றி வந்தான். ஒன்றுமில்லாததால், பயம் தெளிந்து அந்த விருந்தை ஆவலுடன் சாப்பிட்டா ன்.

 அவன் மீண்டும் யோசித்தான், “சாப்பிட்டதுக்குப் பின்னால் வசதியாகப் படுக்க வேண்டும்”

 அந்த மரம் அவன் நினைத்தபடி அவனை நல்ல கட்டில் மெத்தையில் படுக்க வைத்தது.

தூக்கத்திலிருந்து விழித்த அவன், “நான் நடுக்காட்டில இப்படி மரத்துக்கடியில் படுத்திருக்கிறேனே திடீரென்று புலி வந்து நம்மை அடிச்சுக் கொன்று விட்டால் ….”.

அவன் எண்ணப்படியே புலி வந்து அவனை அடித்துக் கொன்றது.

ஆசை மட்டும் ஒன்றைத் தொடர்ந்து ஒன்றாய் வந்து நம்மை அழித்துவிடுகிறது.

– ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர் சொன்ன கதை

Read Full Post »