Feeds:
Posts
Comments

Archive for the ‘ஆன்மீகம்’ Category

விவேகானந்தரிடம் பேச மறுத்த ராமகிருஷ்ணர்.

Sw

ஒரு நாள் நரேந்திரர் தட்சிணேசுவரத்துக்கு வந்த போது அவரைக் கண்டதாகவே காட்டிக் கொள்ளவில்லை பரமஹம்சர். நரேந்திரர் குரு நாதரை வணங்கினார். அப்போதும் அலட்சியமாகவே இருந்தார் குரு. அவருடைய பக்கத்தில் சீடர் அமர்ந்தார். அப்படி ஒருவர் அருகில் உட்கார்ந்திருப்பதைக் குரு மகராஜ் கவனித்ததாகவே தெரியவில்லை. அவர் ஏதோ தீர்க்கமாய்ச் சிந்தித்துக் கொண்டிருக்கிறார் போலும் என்றெண்ணிய நரேந்திரர் அறைக்கு வெளியே வந்தார்.

ஹாஸ்ராவுடன் பேசிக் கொண்டே புகைத்தார். அப்போது உள்ளே பரமஹம்சர் மற்றவர்களுடன் உரையாடிக் கொண்டிருப்பது கேட்டது. உடனே நரேந்திரர் ஆர்வத்துடன் அவரது திருமுன்னர் சென்றார். என்ன ஆச்சரியம்! இம் முறை ஸ்ரீராமகிருஷ்ணர் அலட்சியம் செய்தது மட்டுமில்லை ; நரேந்திரருக்கு எதிர்ப்புறமாக சுவரை நோக்கி முகத்தைத் | திருப்பிகொண்டு விட்டார். ஏமாறிய நரேந்திரர் அங்கிருந்து புறப்பட்டார். அப்போதும் பரம ஹம்சர் போக்கில் மாறுதலே இல்லை.

இரண்டாம், மூன்றாம் முறையாக தட்சிணேசுவரத்துக்கு வந்தார் நரேந்திரர். நாலாம் முறையும் வந்தார். |அவர் வராத இடைக் காலத்தில் ஸ்ரீராமகிருஷ்ணரும் நரேந்திரரின் சௌக்கியத்தைப் பற்றி கேட்டறிந்து தான் வந்தார். எனினும் அவர் வந்தபோது ஏனோ கல்லாகச் சமைந்திருந்தார் குருதேவர். இப்படியே ஒரு மாதம் ஆகி விட்டது. ஸ்ரீராமகிருஷ்ணர் அப்படியே தான் இருந்தார். நரேந்திரரும் முன் போலவே வந்து கொண்டு இருந்தார். குருநாதர் தம்மைப் புறக்கணிப்பது பற்றி அவர் யாரிடமும் குறை கூறக் கூட இல்லை . அதற்கு மேலும் பரமஹம்சரால் எப்படி, பொறுக்க முடியும்?

நரேன், உன்னோடு நான் ஒரு வார்த்தைக்கூடப் பேசாமலிருக்கிறேன்; அப்படியும் நீ வந்து கொண்டிருக்கிறாயே! இது எப்படி ?” என்று சிஷ்யனைக் கேட்டே விட்டார் ஆசான். “நீங்கள் பேசி நான் கேட்க வேண்டும் என்பதற்காக நான் இங்கே வருவதாகவா எண்ணுகிறீர்கள் ? நான் அதற்காக வர வில்லை . எனக்கு உங்களிடம் அன்பு இருக்கிறது. அந்த அன்பி னால் உங்களைக் காண விரும்பு கிறேன். அதற்காகவே நான் தட்சிணேசுவரத்துக்கு வருகிறேன்என்றார் நரேந்திரர்.

அன்பு தனக்குப் பிரதியாக எதையும் எதிர்பாராது என்பது உண்மை தான். நரேந்திரரின் அன்பு அதற்குப் பிரதியாக குருதேவரின் அன்பைக்கூட எதிர்பார்க்கவில்லை. எதையும் எதிர்பாராது எவரிடமும் அன்பு செலுத்துவதே நம் கடமையாகக் கொள்ளவேண்டும் என்று முழங்கியவர் சுவாமி விவேகானந்தர்.

Read Full Post »

சுவாமி விவேகானந்தர்  யார் தெரியுமா?

 

Mail

* ஒரு பெண்ணை குருவாக ஏற்று, தன் மனைவியையே தெய்வமாக    பூஜித்து, பார்க்கும் ஒவ்வொரு பெண்ணிலும் ஆதிபராசக்தியை கண்டு வழிபட்ட ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரின் முதன்மைச் சீடர்.

* நம்நாட்டுப் பெண்கள் சங்ககாலப் பெண்களைப் போன்று கல்வியில் தேர்ச்சிமிக்கவர்களாகவும், சாதனையாளர்களாகவும் திகழவேண்டும் என்று தணியாத ஆவல் கொண்டு அதற்காகப் பாடுபட்டவர்.

* நமது பாரத நாட்டின் சுதந்திரப் போராட்டத்திற்கு ஆணிவேராய் நின்று வலிமை சேர்த்தவர்.

* திலகர், காந்திஜி, நேதாஜி, அரவிந்தர், பாரதி…. போன்ற கணக்கில்லா பல சுதந்திர போராட்ட வீரர்களை ஊக்குவித்தவர்.

* சிகாகோவில் சர்வமத மாநாட்டில் கலந்துகொண்டு இந்து தர்மத்தையும், பாரத நாட்டின் பெருமையையும் உலகோர் அனைவரும் அறியச் செய்தவர்.

* பாரதத்தை அடிமை நாடாகவும், காட்டுமிராண்டிகளின் நாடாகவும் எண்ணிய மேற்கத்திய நாட்டவரிடம் நமது நாட்டின் உயர்வையும் பெருமையையும் எடுத்துரைத்து உணர்த்தியவர்.

* இன்றும் நம்மிடையே அவரது படைப்புகள் மூலம் வாழ்ந்து, இளைஜர்களுக்கு தேசபக்தியையும், தன்னம்பிக்கையையும் அளித்து வருபவர்.

 

Read Full Post »

ஸ்ரீராமகிருஷ்ணர் பற்றி சுவாமி விவேகானந்தர்….

ஒருவரிடம் கூர்த்த அறிவு, மற்றவரிடம் பரந்த இதயம். இந்த அறிவும் இதயமும் ஒருங்கே கொண்ட ஒருவர் பிறப்பதற்கான காலம் கனிந்தது. சங்கரரின் கூர்த்த அறிவும், சைதன்யரின் எல்லையற்ற பரந்த இதயமும் கொண்ட, எல்லா மதப் பிரிவுகளிலும் ஒரே இறைவனைக் காணக்கூடிய, ஏழைகள், பலவீனர்கள், கிழ்ஜாதியினர், தாழ்த்தப்பட்டவர் என்று இந்தியாவிலும் இந்தியாவுக்கு வெளியிலும் இந்த உலகிலுள்ள ஒவ்வொருவருக்காகவும் உருகும் இதயம்கொண்ட, அதே வேளையில்  இந்தியாவில் மட்டுமல்லாமல் இந்தியாவிற்கு  வெளியிலும் ஒன்றோடொன்று போராடிக் கொண்டிருக்கும் மதப்பிரிவுகள் அனைத்தையும் சமரசபடுத்தி அறிவுக்கும் உணர்ச்சிக்கும் சம  இடம் கொடுக்கின்ற, உலகம் தழுவிய மதம் ஒன்றை உருவாக்குவதற்குரிய சிந்தனை வளம் மிக்க ஒருவர் பிறப்பதற்கு உரிய காலம் வந்தது.

thakur-singing

அத்தகைய மனிதர் பிறந்தார். அவரது திருவடிகளின் கீழ் பல ஆண்டுகள் அமர்வதற்கான பெரும்பேறு எனக்குக் கிடைத்தது. அத்தகைய ஒருவர் பிறப்பதற்கான தேவை ஏற்பட்டது. காலமும் கனிந்தது, அவர் பிறந்தார். ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், எந்த நகரம் மேலை நாட்டுச் சிந்தனைகளால் நிறைந்திருந்ததோ, எந்த நகரம் மேலை நாட்டுக் கருத்துக்களின் பின்னால் பைத்தியமாக ஓடிக் கொண்டிருந்ததோ, எந்த நகரம் இந்தியாவிலுள்ள மற்றெல்லா நகரங்களையும் விட ஐரோப்பியமயமாகி விட்டிருந்ததோ அந்த நகருக்கு அருகிலேயே ஓரிடத்தில் அவரது வாழ்க்கைப் பணியெல்லாம் நடைபெற்றது. அவருக்கு நூலறிவு எதுவும் இல்லை. இந்த மாபெரும் அறிஞருக்குத் தமது சொந்தப் பெயரைக்கூட எழுதத் தெரியாது. ஆனால் கல்வி மிக்க நமது பல்கலைக்கழகப் பட்டதாரிகள் அவரிடம் அறிவுக் களஞ்சியத்தையே கண்டனர். இந்த ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் ஒரு விசித்திரமான மனிதர்.

அவர் இந்திய ரிஷிகளின் நிறைவாகத் திகழ்ந்தார். தற்காலத்திற்குரிய ரிஷி அவர், அவரது உபதேசங்களே இந்தக் காலத்திற்கு மிகவும் பயன் தருபவை என்பதை மட்டும் இப்போது கூறிக்கொள்ள விரும்புகிறேன். அவருக்குப் பின்னணியில் செயல்பட்டது தெய்வீக ஆற்றல் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். யாருக்கு தெரியாத, யாரும் கேள்விப்படாத ஒரு குக்கிராமத்தில் ஏழை அர்ச்சகராக பிறந்த அவர் இன்று ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் ஆயிரக்கணக்கான மக்களால் வழிபடப்படுகிறார். நாளை பல்லாயிரக் கணக்கான நபர்களால் வழிபடபடுவார். நேரம் கிடைத்து வாய்ப்பும் கிடைக்குமானால் அவரைப் பற்றி மேலும் பேசுவேன். ஆனால் இப்போது ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன்: உங்களிடம் நான் உண்மையான எதாவது ஒரு வார்த்தை பேசி இருந்தேனானால், அது அவருடையது, அவருடையது மட்டுமே; உண்மையில்லாத, தவறான, மனித இனத்திற்கு நன்மையைத் தராத எதையாவது நான் பேசியிருந்தால், அவையெல்லாம் என்னுடையவை, அதற்கு பொறுப்பாளி நானே.

*************************************

Read Full Post »

பாரதத்தின் மைந்தர்கள்….

 

நமது பாரத அன்னை நல்ல பல புதல்வர்களை ஈன்று இந்த உலகம் உய்வதற்கு வழிகாட்டும் உத்தமி. அம் மதலைகள் நமக்கு மூதாதையர்களாக விளங்கித் தவம், ஒழுக்கம், திறமை, கலை, தியாகம் எனப் பல வகைகளில் முன்னோடிகளாக விளங்குகின்றனர். அவர்களைத் தெய்வமாக போற்ற வேண்டியது நமது கடமையாகும். அவர்களுள் சிலரை அறிந்து கொள்வோம்.

துருவம்: இறைவனிடம் அசையாத நம்பிக்கை வைத்து மிகப்பயங்கரமான காட்டில் அன்ன ஆகாரமின்றி ஒற்றைக் காலில் தவம் செய்து கடவுளைக் கண்ட ஏழு வயது சிறுவன். இப்போது வானில் வடதுருவத்தில் துருவ  நட்சத்திரமாக மின்னி நமக்கு வழிகாட்டிக் கொண்டுள்ளார்.

திருஞானசம்பந்தர்: மூன்று வயதிலேயே தேவாரம்பாடி சிவபெருமானை குளிர்வித்தவர். பக்திக் குழந்தைகளில் முதன்மையானவர்.

நம்மாழ்வார்: பிறந்த நாள் முதலே அன்னபானம் எதுவும் இன்றி, மெளனியாகவே வளர்ந்த திருமாலடியார் ஆவார். ஐந்து வயதிலிருந்தே இறைவன்மீது திருவாய்மொழி மலர்ந்து பாடல்கள் பாடியவர். வேதம் தமிழ் செய்த மாறன் என்ற பெருமை உடையவர். சடகோபர் என்ற திருநாமும் இவருக்கு உண்டு.

நசிகேதன்: தன் தந்தையின் சொற்படி யமதர்மனுக்குத் தானமாக தானே வலிய  சென்றவர். அவரைக் குருவாகக் கொண்டு கடோபநிஷதம் நமக்குத் தந்த தெய்வீக சிறுவன் இவர்.

சிரவணகுமார்: கண் பார்வையற்ற தனது பெற்றோரைத் தோளில் காவடியாக தூக்கி கொண்டு தீர்த்தயாத்திரை செய்வித்தவர்.

எத்தனை மகான்கள் இந்த ஞான பூமியிலே அவர்கள் அனைவருக்கும் நமது வணக்கம்.

Read Full Post »

தேச பக்தி

திருவனந்தபுரத்தில் சுவாமிஜி தங்கியிருந்தபோது பேராசிரியர் சுந்தராம ஐயரின் மகன் ராமசாமி சாஸ்திரியிடம் தேசபக்திக்கு விளக்கம் கொடுத்திருக்கிறார் சுவாமிஜி.

“….தேச பக்தி, தேச பக்தி என்கிறார்களே உண்மையில் அது என்ன? கண்மூடித் தனமான ஒரு நம்பிக்கையா? இல்லை.

நாட்டு மக்களுக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்பதில் உள்ள  பேரார்வம்  தான் உண்மையில் தேசபக்தி.

பாரதம் முழுவதும் பார்த்துவிட்டேன். அறியாமையும், துன்பமும், ஒழுக்க  சீர்குலைவுகளும் தான் நான் கண்டவை. என் உள்ளம் பற்றியெரிகிறது. இந்தத் தீமைகளை வேரோடு களைய வேண்டும் என்று துடிக்கிறேன்.

“அவர்களின் தீவினை அது. அதனால் கஷ்டபடுகிறார்கள்” என்று கர்மம் பற்றி பேசுகிறார்கள். தயவு செய்து அப்படிப் பேசாதீர்கள். கஷ்டபடுவது அவர்களின் கர்மம் என்றால் அதிலிருந்து அவர்களை விடுவிப்பது நமது தர்மம்.

கடவுளைக் காண வேண்டுமானால் மனிதனுக்கு தொண்டு செய்யுங்கள். நாராயணனை அடைய வேண்டுமானால் பட்டினியில் வாடுகின்ற ஏழை நாராயணர்களுக்குச் சேவை செய்யுங்கள். அதுதான் உண்மையான தேச பக்தி.

392616_348803058553487_191559038_n

சுவாமி அகண்டானந்தர் சுவாமிஜின் தேசபக்தியை வர்ணிக்கும்போது:-

” ….சுவாமிஜி பாரதத்தின் மீது கொண்ட அன்பு சாதாரண விஷயம் அல்ல. அது வெறும் தேசபக்தி (patriostism) அல்ல. அது தேசாத்மபோதம். சாதாரண மனிதர்களுக்கு இருப்பது “தேஹாத்மா போதம்”, அதாவது உடம்பைத் தானாக உணர்வது. சுவாமிஜிக்கு இருந்ததோ ‘தேசாத்மபோதம்’. அதாவது நாட்டையே தானாக உணர்வது.

நாட்டு மக்களின் சுகம், துக்கம், அவர்களின் கடந்த காலம், எதிர்காலம், நிகழ் காலம் என்பவை பற்றியே அவர் சிந்தித்தார்.

தேசாத்மா போதத்துடன் அவரது உணர்வு நின்று விடவில்லை. அது விச்வாத்ம போதமாக விரிந்தது. பாரத மக்களுக்காக மட்டுமல்ல. உலக உயிரினங்கள் அனைத்துடனும் தம்மை ஒன்று படுத்திக் கொண்டு அவர்களுக்காக கவலைப்பட்டார் அவர். அனைவருக்கும் முக்தி கிடைக்காமல் அவருக்கு முக்தியில்லை……”

*****************************

Read Full Post »

சுவாமிஜியின் திட்டம் உதயம் ….

சுவாமிஜி இந்தியாவின் பல பகுதிகளுக்குச் சென்று கொண்டிருந்த காலத்தில் இந்தியாவின் நிலைமை மிக மோசமாயிருந்தது. நம் நாடு அப்போது சுதந்திரம் பெறவில்லை. ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டிருந்தது. மக்கள் வறுமையில் வாடினர். பெரும்பாலான மக்களுக்குப் போதிய உணவு கூட கிடைக்கவில்லை. மிகச் சில சிறுவர் சிறுமியரே பள்ளி செல்ல முடிந்தது. மக்கள் தைரியத்தை இழந்து விட்டிருந்தனர். அவர்களிடம் தன்னம்பிக்கை இல்லை. அவர்கள் உதவியற்றோராக நசுக்கப்பட்டனர். இவற்றையெல்லாம் கண்ட சுவாமிஜி கண்கள் கலங்கின. பழங்காலத்தில் இந்தியா எத்தகையதொரு உன்னத நிலையில் இருந்தது என்பதை அவர் நினைத்து பார்த்தார். பழங்கால தவ முனிவர்களையும் ரிஷிகளையும் அவர் எண்ணிப் பார்த்தார். அத்தகைய பெருமை வாய்ந்த நாடு எவ்வளவு கீழ் நிலையை அடைந்துவிட்டது என்று நினைத்து அழுதார். மீண்டும் நம் நாட்டைப் பெருமையுடைய நாடாக மாற்றுவது எவ்வாறு என்பது ஒன்றே அவர் எண்ணமாயிருந்தது.

தன் சுற்றுப் பயணத்தின் இறுதி இடமாக, இந்தியாவின் தென்முனையில் கன்னியாகுமரியை அடைந்தார். அங்கு ஆதிபராசக்தி தேவி ஒரு குமரி வடிவில் ‘கன்னியாகுமரி’ என்ற திருநாமத்தில் கோயில் கொண்டுள்ளாள். ஒவ்வொரு நாளும் அர்ச்சகர்கள் சந்தனத்தால் அலங்கரித்து அவளை வழிபடுவது வழக்கம். குமரிதேவி அதி அற்புதமான தோற்றத்துடனும் அழகான கண்களோடும், இனிய புன்முறுவலோடும் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறாள். இக்கோயில் கடற்கரையோரத்தில் இருக்கிறது. கடல் நோக்கிப்  பார்க்கும்போது தண்ணீர்க்குள்ளிருந்து சில பெரிய பாறைகள் நீட்டிக் கொண்டிருப்பதை நாம் கான முடியும். அந்தப் பாறைகளின் ஒன்றின்மீது அன்னை பகவதி ஒற்றைக் காலில் தவம் செய்த அடிசுவடு காணப்படுகிறது. அலைகள் அப்பாறைகளில் முட்டி மோதிச் செல்லும். அவற்றின் பின்னே, கண்ணுக்கெட்டிய தூரம், தண்ணீர்தான்!

Thittam

ஒருநாள், தேவியின் சுவடுடைய அப்பாறையின் மீது தியானம் செய்ய விரும்பி சுவாமிஜி கடலின் நடுவே நீந்திச் சென்று, அதனை அடைந்தார். அதன் மேலேறி பாறை முனையில் அமர்ந்தார். அங்கிருந்து தன் பேரன்புக்குரிய தாய்நாட்டை நோக்கிய அவருக்கு அந்நாட்டு மக்களின் மோசமான நிலை நிழலாடுகிறது . சுவாமிஜி மீண்டும் அழுதார். சுவாமிஜிக்கு இரண்டு நோக்கங்கள் இருந்தன. ஒன்று அவர் குரு ஸ்ரீராமகிருஷ்ணர் , மற்றொன்று அவர் பிறந்த இந்தியத் தாய்நாடு. அப்பாறையில் அமர்ந்து கொண்டிருந்தபோது சுவாமிஜி மூன்று நாட்களாக ஆழ்ந்த தியானத்தில் லயித்தார். இந்தியாவின் பெருமையை மீண்டும் நிலைநாட்ட,  தாம் செய்ய வேண்டியது என்ன என்பதை அப்போது அவர் உணர்ந்தார்.

‘கன்னியாகுமரியில், குமரி தாயின் கோயிலில், பாரத நாட்டின் தென்கோடியிலுள்ள அந்தப் பாறைமீது அமர்ந்து சிந்தித்தேன். என் மனத்தில் திட்டம் ஒன்று உதித்தது’ என்றார் சுவாமிஜி.

*********************

Read Full Post »

வர்ணம்

ர்மம்தான் நான்கு வர்ண அமைப்புகளாக பிரித்து ஒழுங்குமுறைப்படுத்தப் பட்டுள்ளது. எல்லோரும்தான் ஆன்ம சிந்தனையில் ஈடுபடுகிறார்கள். ஆனால்,ஒரு சிலரே, உள்மூச்சு, வெளிமூச்சு ஆகியவற்றை கட்டுப்படுத்துவதில் வெற்றி பெறுகிறார்கள். மற்றவர்களோ, ஆரம்ப நிலையில் இரண்டு மணி நேரம் உட்கார்ந்தால் கூட பத்து நிமிடம் கூட அவர்களால் தாங்கள் நினைத்தபடி, மனதை ஒருமுகப்படுத்த முடிவதில்லை. அத்தகைய குறைந்த அளவு சாதனை அறிவுடைய சாதகர் சூத்திர சாதனைப் பிரிவைச் சேர்ந்தவர் ஆவார். அவர் தன்னுடைய சுபாவத்தில் இருந்து தோன்றிய கர்மத்திறனுக்கு ஏற்ப, சேவை புரிவதில் இருந்தே தன்னுடைய கர்மத்தைத் தொடங்க வேண்டும். படிப்படியாக வைசியர், சத்திரியர், மற்றும் பிராம்மணப் பிரிவுகளில் அடையப்படுகின்ற உயர் கர்மத் திறன் அவருடைய சுபாவத்தில் பெருகிக் கொண்டே செல்லும். அவர் தனது பாதையில் உயர்ந்து கொண்டே செல்வார். மிகவும் உயர்வானது என்று கருதப்படுகின்ற பிராம்மண சாதனைப் பிரிவும்கூட தன்னில் குறைவுடையதுதான். ஏனெனில், இந்த நிலையிலும் கூட அந்த பிரம்மம் என்னவோ இன்னும் அடையப்படாத நிலையில் தனித்தே இருக்கிறது. பிரம்மத்தில் நுழைவு பெற்றுவிட்டால், அந்த பிராம்மணப் பிரிவு என்பதும் கூட இல்லாமல் போய்விடுகிறது.

“வர்ணம்” என்றால் “தோற்றம்” என்று பொருள். இந்த உடல் உங்களுடைய உணமையான தோற்றம் அல்ல. உங்களுடைய அக எண்ணவோட்டம் எதுவோ, அதுவே உங்களுடைய உண்மையான தோற்றம் ஆகும். ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகிறார்: “அர்ஜுனா! மனிதன் நம்பிக்கைமயமானவன். எனவேதான் அவனுக்கு எதிலாவது நம்பிக்கை அவசியம் இருக்கவே செய்கிறது. அவனுடைய நம்பிக்கை எவ்விதமோ, அவ்விதமே அவனும் இருக்கிறான். எண்ணம் எவ்வாறோ, அவ்வாறே மனிதன்”.

Varnam

வர்ணம் என்பது கர்மத்திறனை மதிப்பிடுகின்ற அக அளவியல் குறீயிடு ஆகும். ஆனால், மக்கள் அனைவரும் இந்த நிச்சியக்கப்பட்டுள்ள கர்மத்தை விட்டுவிட்டு, வெளியில் உள்ள சமுதாயத்தில் பிறப்பை அடிப்படையாக கொண்டு, சாதிகளை உருவாகிக் கொண்டு, அவற்றையே ‘வர்ண அமைப்பு’ அல்லது ‘சாதி அமைப்பு’ என்று ஏற்றுக் கொள்வதுடன் நிற்காமல் அவற்றிற்கான சட்டதிட்டங்கள். ஒழுங்குமுறைகள் என்று எதை எல்லாமோ உண்டாக்கிக் கொண்டுள்ளனர். அவை அனைத்தும் வெறும் சமுதாய அமைப்புகளே தவிர, வேறொன்றுமில்லை. அவர்கள் கர்மத்தின் உள்ளது உள்ளபடியான யதார்த்த உருவத்தைத் தங்கள் இஷ்டப்படியெல்லாம் வளைத்தும் முறுக்கியும் மாற்றி மாற்றி அமைத்தும் கொள்கின்றனர். அதன்மூலம், அவர்களுக்குக் கிடைக்கின்ற போலித்தனமான சமுதாய மரியாதை மற்றும் சலுகைகளுக்கு எந்தத் தடங்கலும் ஏற்படாமல் தற்காத்து கொள்கின்றனர். காலப்போக்கில் வர்ணத்தை நிச்சியம் செய்வது பிறப்பை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு அமைந்துவிட்டது. ஆனால், உண்மையில் அப்படி எல்லாம் ஒன்றுமே கிடையாது. ஸ்ரீ கிருஷ்ணர், “நான்கு வர்ணங்களையும் நானே உருவாக்கினேன்” என்கிறார். அப்படியென்றால் இந்த பாரத தேசத்திற்கு வெளியில் படைப்பு என்ற பெயரில் ஒன்றுமே இல்லையா என்ன? ஆனால் அங்கெல்லாம் இந்த தேசத்தில் காணபடுவதைப் போன்று, “சாதிகள்” என்ற பெயரில் எந்த அமைப்புமுறையும் இல்லையே ஏன்? இந்த பாரத தேசத்தில் மட்டும் லட்சக்கணக்கான சாதிகள் மற்றும் அதற்குள் அடங்கிய கிளை சாதிகள் என்றொரு நிலை இருக்கிறதே! ஸ்ரீ கிருஷ்ணர் சாதியின் பெயரால் மனிதர்களை எல்லாம் பிரித்தாளும் வேளையில் ஈடுபட்டிருந்தாரா? இல்லை இல்லவே இல்லை. “குணகர்ம விபாகச”:– குணத்தை அடிப்படையாக கொண்டு, இந்த நிச்சியக்கப்பட்டுள்ள கர்மத்தையே நான்கு சாதனை பிரிவுகளில் ஒழுங்குமுறைப்படுத்தியுள்ளேன்” என்கிறார் அவர்.

“கர்மாணி ப்ரவி பக்தானி”:- “கர்மமே பிரிக்கப்பட்டு உள்ளது.” கர்மம் என்றால் என்ன? என்பது புரிந்துவிட்டால், “வர்ணம் என்றால் என்ன?” என்பது புரிந்துவிடும். “வர்ணம் புரிந்துவிட்டால், வர்ணக் கலப்பு எனபதையும் உள்ளது உள்ளவாரே புரிந்து கொண்டு விடுவீர்கள்.

வர்ணக் கலப்பு பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம் …….

Read Full Post »

நரேனின் பிரார்த்தனை

ஸ்ரீ ராமகிருஷ்ணர் நரேனிடம் பேரன்பு செலுத்தினார். நரேனும் ஸ்ரீ ராமகிருஷ்ணரை உயிருக்குயிராக நேசித்தான். குருவுக்கும் சீடனுக்குமிடையே இத்தகையதொரு தூய்மையான பேரன்பு நிலவினால் மட்டுமே கடவுளைப் பற்றிய ஞானத்தை சீடன் பெற முடியும்.

ஸ்ரீ ராமகிருஷ்ணருடைய சீடனாகிய நரேன் மிகுந்த ஆனந்தத்தில் திளைத்தான். தட்சனேசுவரதிற்கு அடிக்கடி சென்று கடவுளைப் பற்றிக் கேட்பான். இச்சமயம் துக்ககரமான ஒரு சம்பவம் நிகழ்ந்தது. நரேனின் தந்தை காலமானார். குடும்பம் வறுமையில் வாடியது. சில சமயம் சாப்பிட எதுவுமிருக்காது. மிகவும் வருந்திய நரேன் ஒரு வேலை தேடிக் கொள்ள முடிவு செய்தான்.

பி.ஏ. பட்டம் பெற்ற புத்திசாலி மாணவன் நரேன். இருப்பினும் அவனுக்கு ஒரு வேலையும் கிடைக்கவில்லை. ஒவ்வொரு அலுவலகமாக ஏறி இறங்கிய போதிலும், வேலை கிடைக்கவில்லை. ‘நான் சிறிதேனும் சம்பாதிக்காவிட்டால் என் தாயும் சகோதர சகோதரிகளும் என்ன செய்வார்கள்? அவர்கள் கதி என்ன? என்ற சோகம் அவனை வாட்டியது.

Narenin Pirathanani

ஒருநாள் அனைத்தையும் ஸ்ரீ ராமகிருஷ்ணரிடம் கூறினான் நரேன். ‘நரேன், இன்று செவ்வாய்க் கிழமை. அன்னையிடம் எது வேண்டினாலும் அவள் அள்ளித் தருவாள். நீயே சென்று அவளிடம் கேள்’ என்றார் ஸ்ரீ ராமகிருஷ்ணர். அன்று மாலை நரேன் காளிகோயில் சென்று அன்னையிடம் பிரார்த்தித்தான். திரும்பி வந்த நரேனிடம் ‘அன்னை என்ன சொன்னாள்?’ என்று கேட்டார் ஸ்ரீ ராமகிருஷ்ணர்.

‘ஓ நான் அவளிடம் கேட்க மறந்துவிட்டேன்’ என்றான் நரேன்.

மறந்தாயா? செல், உடனே செல், சீக்கிரம்’ என்று அவனைத் திருப்பி அனுப்பினார் ஸ்ரீ ராமகிருஷ்ணர்.

இம்முறையும் நரேன் மறந்தான்.

மூன்றாம் முறை நரேன் மிகவும் அமைதியான முகத்துடன் திரும்பி வந்து கொண்டிருந்தான். ஸ்ரீ ராமகிருஷ்ணரிடம் ‘நான் எவ்வாறு அன்னையிடம் பணத்தை வேண்டுவேன்? அது மிகப் பெரிய பேரரசன் ஒருவனிடம் சென்று பூசணிக்காயை யாசிப்பது போலல்லவா ஆகிவிடும். பக்தி, சுயநலமற்ற அன்பு, அவளைப் புரிந்துகொள்ளும் ஆற்றல் ஆகியவற்றையே என்னால் அவளிடம் பிரார்த்திக்க முடிந்தது’ என்று கூறினான்.

பின்னர் நரேனின் குடும்பம் அடிப்படைத் தேவைகளுக்காக ஒருபோதும் வாடாது என்று ஸ்ரீ ராமகிருஷ்ணர் உறுதியளித்தார். அதன் பின்னரே வேலை தேடும் முயற்சியை கைவிடுவது சரியானது என்று நரேன் எண்ணினான்.

அன்று இரவு நரேனுக்கு ஸ்ரீ ராமகிருஷ்ணர் அன்னையைப் பற்றிய அற்புதமான பாடலொன்றைக் கற்பித்தார். அன்றிரவு முழுவதும் நரேன் அப்பாடலைப் பாடிக்கொண்டிருக்க, ஸ்ரீ ராமகிருஷ்ணர் ஆழ்ந்த பரவசத்திலிருந்தார்.

தொடரும் …..

Read Full Post »

ஸ்ரீ ராமகிருஷ்ணரின் பதில்

ஒரு நாள் ஸ்ரீ ராமகிருஷ்ணரைக் காண நரேன் தட்சனேசுவரம் சென்றான். ஸ்ரீ ராமகிருஷ்ணருக்கு அவனைக் கண்டதில் கொள்ளை மகிழ்ச்சி. உடனேயே உள்ளே சென்று இனிப்புகளைக் கொண்டு வந்து, அவனை ஒரு சிறு குழந்தையாகக் கருதி அவனுக்கு ஊட்ட ஆரம்பித்துவிட்டார். அவன்மீது பேரன்பு கொண்ட அன்னையானார் அவர்.

பிறகு நரேன் தான் இதுவரைப் பல குருமார்களிடம் கேட்ட அந்தக் கேள்வியை அவரிடம் கேட்டான்:

‘ஐயா, தாங்கள் கடவுளைக் கண்டிருக்கிறீர்களா?’

‘ஆம், உண்மையில் தரிசித்திருக்கிறேன்’ என்று பதிலளித்தார் ஸ்ரீ ராமகிருஷனர். ‘உன்னைப் பார்பதைப் போலவே, அவரையும் தெளிவாகப் பார்க்கிறேன். உன்னைக் கண்டு பேசுவது போலவே, ஒருவரால் கடவுளைக் காணவும் பேசவும் முடியும்’ என்றும் கூறினார்.

Ramakrishnarin Pathil

இந்த பதிலைக் கேட்டு நரேன் ஆச்சரியமடைந்தான். அவன் உள்ளம் ஆனந்தத்தால் நிறைந்தது. ஸ்ரீ ராமகிருஷ்ணர் கூறிய அனைத்தையும் அவன் கவனமாகக் கேட்டான்.

‘நான் தேடிக் கொண்டிருந்த குரு இவரே!’ என்று நரேனின் மனம் கூறியது. நரேன் அவருடைய சீடன் ஆனான்.

ஸ்ரீ ராமகிருஷனர் கடவுளைக் கண்டவர் என்று நரேன் அறிந்திருந்தான். இருப்பினும், கேள்விகள் கேட்காமல் எதையும் அவன் ஒப்புக் கொள்வதில்லை. இதையே ஸ்ரீ ராமகிருஷ்ணரும் விரும்பினார். தன்னிடம் வந்த இளைஜர்கள் சுயமாக சிந்திப்பதையும், கேள்விகள் கேட்பதையும் அவர் வரவேற்றார்.

தொடரும் …….

Read Full Post »

நரேனின்(சுவாமி விவேகானந்தரின்) கேள்வி…..

‘காசியைக் கண்ட ஒருவரே, காசியைப் பற்றிக் கூறி உங்களை அங்கு அழைத்துச் செல்ல முடியும்’ என்பது பழமொழி. தான் போதிப்பதை உணர்ந்த ஆசிரியரே தேவை என்பதே இதன் பொருள். நாம் எதையாவது கற்க விரும்பினால், அதைப் பற்றி அனைத்தும் அறிந்த ஆசிரியர், குரு நமக்குத்த் தேவை. ஆகவே கடவுளை யாரேனும் அறிய விரும்பினால், கடவுளை பற்றி தெரிந்த ஒருவரை அணுக வேண்டும். அத்தகைய ஒருவரை நரேன்(விவேகானந்தர்) தேட ஆரம்பித்தான். தான் சந்தித்த அத்தனை மத குருமார்களிடமும் அவன் கேட்ட கேள்வி இது ஒன்றே. ‘ஐயா, தாங்கள் கடவுளைக் கண்டிருக்கிறீர்களா?’ ஆனால் ஒருவர் கூட அவனுக்குத் தான் கடவுளைக் கண்டதாகக் கண்டிருப்பதாகக் கூறமுடியவில்லை.

Narenin Kelvi

ஒரு நாள் நரேனின் அண்டை வீட்டினர் ஒருவர் அவனைத் தன் வீட்டில்  பாடுவதற்காக அழைத்திருந்தார். அந்த வீட்டினர் அன்று பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணரை தம் கௌரவ விருந்தாளியாக அழைத்திருந்தனர். நரேன் மிக இனிமையாகப் பாடக் கூடியவனாதலால், ஸ்ரீ ராமகிருஷ்ணரை முன்பு பாடுவதற்காக அவனையும் அழைத்திருந்தனர்.

நரேனின் பாடல்களைக் கேட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணர் மிகவும் ஆனந்தமடைந்தார். நரேனை அவருக்கு மிகவும் பிடித்து விட்டது. தான் வசிக்கும் தட்சினேசுவரத்திற்கு  அவனை வரும்படியும், அங்கு வந்து தனக்காகப் பாடும்படியும் வேண்டினார்.

இதுவே ஸ்ரீ ராமகிருஷ்ணருக்கும் நரேனுக்கும் இடையே நடந்த முதல் சந்திப்பு என்றாலும் அது நரேனிடத்தில் பெரியத் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

இதன்பிறகு நரேனுக்குத் திருமணம் செய்ய பெற்றோர் முயற்சிக்க ஆரம்பித்தனர். ஆன்மிக லட்சியம் கொண்ட நரேன் அதற்கு உறுதியாக மறுத்துவிட்டார். ஸ்ரீ ராமகிருஷ்ணரின் பக்தர்களில் ஒருவரான ராமசந்திர தத்தர் நரேனிடத்தில் இருந்த ஆன்மிக நாட்டத்தைக் கவனித்தார். எனவே அவர் நரேனை தட்சனேசுவரம் சென்று ஸ்ரீ ராமகிருஷ்ணரைச் சந்திக்கும்படி அறிவுறுத்தினார். அதன்படி தட்சனேசுவரம் சென்று அவரைச் சந்திக்க முடிவு செய்தார் நரேன்(விவேகானந்தர்).

தொடரும் …..

Read Full Post »

Older Posts »