Feeds:
Posts
Comments

Archive for the ‘துதி பாடல்’ Category

கந்தர் சஷ்டி கவசம் படித்தால் கிடைக்கும் நன்மை என்ன?

சில வருடங்களுக்கு முன் ஒரு நிறுவனத்தில் நான் பணிபுரிந்து கொண்டிருந்த போது அங்கே தொழிலாளர்களை உற்சாகப்படுத்தும் சில வகுப்புகள் நடத்தப்படுவதுண்டு.

அது ஒரு பங்குச்சந்தை வியாபார நிறுவனமாக இருந்ததால் மார்க்கெட்டிங் வேலை மிக முக்கியமானதாக இருந்தது. பங்குச்சந்தை மார்க்கெட்டிங் என்றால் சாதாரனம் இல்லை. உங்களிடம் இருக்கும் பணத்தை நீங்கள் முழித்திருக்கும் போதே உங்கள் சட்டைப்பையிலிருந்து எடுத்து நிறுவனத்திற்கு கொடுத்துவிட வேண்டும்.

இது குளோப்ளைசேஷன் மூலமாக வந்த புதிய வியாபார உத்தி. அது ஒரு புறம் இருக்கட்டும்.

தொழிலாள‌ர்களுக்காக நடத்தப்படும் இந்த வகுப்பில் மனதை அமைதியாக வைத்துக் கொள்ளவும், உடலைப் பேணிப் பாதுகாக்கவும் சில விஷயங்களைச் சொல்லிக் கொடுப்பார்கள். அதில் ஒன்று அதி டென்ஷனாகவே வாழும் நாம் மனதை எப்படி அமைதிப்படுத்திக் கொள்வது என்பதற்க்கு ஒரு புதிய முறையைக் கற்றுக் கொடுத்தார்.

இதை அறிமுகப்படுத்தியவர் என்று சொல்லி ஒரு ஆங்கிலேயரின் பெயரைச் கூறினார். மனோவியல் ரீதியாக அவர் கொடுக்கும் இந்தப் பயிற்ச்சி நல்ல பலனைக் கொடுத்தது என்றும் கூறி அதை செய்யச் சொன்னார்.

அவர் சொன்னதாவது:

முதலில் கண்களை மெதுவாக மூடிக்கொள்ளுங்கள்.

உங்கள் வாயால் இப்பொழுது மெதுவாகச் சொல்லுங்கள்…ஆங்கிலத்தில் துவங்கினார்..

மை ஐஸ் ஆர் ரிலாக்ஸ்!

மை நோஸ் ஆர் ரிலாக்ஸ்!

மை மௌத் இஸ் ரெலாக்ஸ்!

மை ஹான்ட்ஸ் ஆர் ரிலாக்ஸ்!

என்று ஒவ்வொரு பாகத்தையும் வாயால் சொல்லி மனதால் ரிலாக்ஸ் படுத்தினார்.

இவற்றை சொல்லி முடித்து விட்டு இப்பொழுது கண்களை மெதுவாக திறங்கள். இப்பொழுது உங்கள் மனதும் உடலும் ரிலாக்ஸாக இருக்கிறதா? என்று எல்லோரிடமும் கேட்டு தெரிந்து கொண்டார்.

பிறகு நிகழ்ச்சி பற்றி எல்லோரிடைய கருதையும் கேட்டார்.

என் முறை வந்தது. நான் சொன்னேன்…”சார் இது என்ன பிரமாதம் இதை நான் குழந்தைப் பருவம் முதலே செய்து கொண்டிருக்கிறேனே!” என்றேன்.

ஆச்சரியத்துடன் பார்த்த அவர் “அது எப்படி? எனக்குத் தெரிந்த வரை இது புதிய மனோவியல் முறை! இதை எப்படி நீங்கள் குழந்தைப் பருவத்திலிருந்தே செய்ய முடியும்” என்று கேட்டார்.

நான் சொன்னேன் “சார் நீங்க என்னவெல்லாம் சொன்னீர்களோ அது அனைத்தும் நான் சிறு வயது முதலே சொல்லும் கந்தர் சஷ்டி கவசத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. உடலின் ஒரு அவயவம் விடாமல் தியானிக்கும் பயிற்ச்சியை அது ஆன்மீக ரீதியாக மிக அருமையாக கொடுக்கிறது” என்றேன்.

மிகவும் ஆர்வமாக இதைக் கேட்ட அவர் கந்தர் சஷ்டி கவசத்தைச் சொல்லுவதால் ஏற்படும் பயனைப் பற்றி விளக்கமாக சொல்லச் சொன்னார்.

நானும் சொல்லத் துவங்கினேன்.

கந்தர் சஷ்டி கவசம் சொல்லும் போது நம் உடலில் உள்ள ஒவ்வொரு பாகங்களையும் ஒவ்வோரு வேல் காக்குமாறு பிரார்த்திக்கிறோம்.

உதாரணமாக ஒரு சில வரிகளைப் பார்ப்போம்.

கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க‌!

விதிச்செவி இரண்டும் வேலவர் காக்க‌!

நாசிகளிரண்டும் நல்வேல் காக்க‌!

பேசிய வாய் தனைப் பெருவேல் காக்க‌!

கன்னமிரண்டும் கருனைவேல் காக்க‌!

என் இளங்கழுத்தை இனியவேல் காக்க‌! .

என்று இப்படியே உடலில் ஒரு அங்கம் விடாமல் வேல் காக்க என்று கூறுகிறோம்.

இப்படி தினசரி நாம் வாயால் ஒவ்வொரு அவயவங்களைப் பற்றி சொல்லும் போது நமது மனது அந்த அங்கத்தில் நிலை கொள்கிறது. மனது தியானிக்கும் அங்கத்தினை நமது மூளை தானாகவே ஒருசில வினாடிகள் கூர்ந்து கவனிக்கிறது.

இப்படி மூளையின் தனி கவனத்திற்க்கு வரும் போது அந்த பாகத்திற்குரிய மூளையின் செயல்பாடுகள் சிறப்படைகிறது. இப்படி தினசரி மிகவும் அமைதியான மனநிலையில் நாள் இருமுறை நம் உடல் பாகத்தினை மூளையின் கவனத்திற்க்கு கொண்டு வந்தால் உடலின் சிறு சிறு குறைபாடுகளை மூளை தாமாகவே சரி செய்து கொள்ள தூண்டுதலாக அமையும்.

மனோவைத்திய ரீதியாக உடல் நோய்களைப் போக்க முடியும் என்று தற்காலங்களில் நாம் ஆராய்ச்சியாளர்கள் சொல்லி கேட்பதில்லையா. இன்றைக்கு ஆராய்ச்சி என்று சொல்லி வெள்ளைக்காரன் கண்டுபிடித்ததாகச் சொல்லுவதை நம் முன்னோர்கள் ஏற்கனவே கண்டறிந்தது மட்டுமல்லாமல் அவற்றைப் பயன்பாட்டில் செயல்படுத்தியும் வந்திருக்கிறார்கள்.

இந்த மனோவைத்திய முறை நம் வாழ்க்கை முறையாகவும் இருக்கிறது.

கந்தர் சஷ்டியை தினசரி சொல்லும் போது நம் உடல் முழுவதும் மூளை செயல்பாடு அதிகரிப்பதால் இது ஒரு பாதுகாப்பு கவசமாக இருப்பதாலேயே இதை கந்தர் சஷ்டி கவசம் என்று கூறினார்கள்.

இந்த கவசத்தில் வரும் வரிகளில் நவகோள் மகிழ்ந்து நன்மை அளித்திடும் என்று ஒரு வரி உண்டு. வார்த்தைகளால் சொல்லும் மந்திரத்தினால் நவகோள்கள் எப்படி நன்மை செய்யும் என்றும் தோன்றலாம். நவ கிரகங்களின் மாறுதல்களால் பூமியின் மீதே பாதிப்பு ஏற்படும் போது மனித உடலில் பாதிப்பு ஏற்படாதா என்ன?

கிரகங்களின் மற்றத்தால் நமது உடலில் ரத்த ஓட்டம் மற்றும் வாத பித்த பாதிப்புகள் ஏற்படுகிறது. உடலில் ஏற்படும் எந்த ஒரு வியாதிக்கும் இவற்றில் ஏற்படும் மாற்றமே அடிப்படை. ஆனால் கவசம் படிப்பதன் மூலமாக தினசரி மூளை நமது உடலை உற்று நோக்கி தானே தன்னைச் ச‌ரிசெய்யும் வேலையை செய்து கொண்டே இருப்பதால் நவ கோள்களால் ஏற்ப்படும் உடல் மாறுபாடு கூட பாதிப்பை ஏற்படுத்தாது என்பதே இதன் சாரம். அதையே நவகோள்கள் கூட மகிழ்ந்து நன்மை அளிப்பதாக கூறினார்கள்.

இப்படி கந்தர் சஷ்டி கவசம் தொடர்ந்து படிப்பதில் மனோவியல் ரீதியான‌ நன்மைகள் உள்ளன.

ஆனால் ஆராயாமலே தற்க்காலத்தில் எல்லாவற்றையுமே மூடநம்பிக்கை என்று சொல்லும் பகுத்தறிவு மடையர்களுக்கு இது புரிவது சாத்தியமில்லை. ஏனென்றால் அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு அடிப்படை அறிவே கூட இருப்பதில்லை என்பதே உண்மை.

ஆகையால் இந்து தர்மத்தில் சொல்லப்படும் பல அறிவியல் மற்றும் மனோரீதியான சூட்சுமங்களை புரிந்து கொள்ளும் நீங்கள் தான் உண்மையான பகுத்தறிவாளர்கள். ஆகையால் சொல்கிறேன் இந்து தர்மம் என்பது மனோவியலும் அறிவியலும் ஆகும்”. இவ்வாறு சொன்னவுடன் பயிற்சியாளர் மிகவும் மகிழ்ந்து என்னைப் பாராட்டினார்.

அவரும் கந்தர் சஷ்டி கவசம் படிப்பதில் உள்ள நன்மைகளை ஏற்றுக் கொண்டார். நீங்களும் இதை ஏற்றுக் கொண்டால் தாமதிக்காமல் இன்றே படிக்கத் துவங்கலாமே!

காக்க காக்க கனகவேல் காக்க!

நோக்க நோக்க நொடியில் நோக்க!

இந்து தர்மம் என்பது மனோவியலும் அறிவியலும் ஆகும்

*******

Read Full Post »

நாட்டு பற்றினை ஊட்டி வளர்க்கும்
மந்திரம் வந்தே மாதரம்
நாடிது வென்றிட ஊக்கமளிக்கும்
தாரகம் வந்தே மாதரம்

இராம பிரானின் கானக வாசக் காவியம் வந்தே மாதரம்
சங்கரன் சிறுவயதில் சிரமேற்க துறவறம் வந்தேமாதரம்
நரேந்திரன் நடுக்கடலில் நாடிய நற்றவம் வந்தேமாதரம்

(நாடிது வென்றிட)

பாஞ்சாலங்குறிச்சி  பறைசாற்றும் பாசுரம் வந்தேமாதரம்     
வாஞ்சியும், பாரதியும் வ.உ.சி யும் வாழ்ந்தது வந்தேமாதரம்
வாழ்வினை ஈந்திடும் மைந்தரின் வீரகர்ஜனை வந்தேமாதரம்  

(நாடிது வென்றிட)  

நாட்டிற்கெனவே வாழ்ந்திடுவோம் சங்கல்பம் வந்தேமாதரம்
நாடுயர்த்தி புகழோங்கிடச் செய்யும் சபதம் வந்தேமாதரம்
கோடி மைந்தரும் ஒரு குரலாய் முழக்கிடுவோம் வந்தேமாதரம்

(நாடிது வென்றிட)

Read Full Post »

சாஸ்திர  சாரத்தை நீயும் தரணிக்கு தந்தாயே
யோகமும் தியாகமும்
திரண்ட உருவே விவேகானந்த

குகையிலும் வனத்திலும் மறைந்த வேதம்
நடைமுறை வாழ்க்கையில் விழித்து எழுந்திட  |
ஒவ்வொரு  மனிதனும் தன்னுள் உணர
ஆத்திக வானில் நம்பிக்கை உதித்திட ||

விழிகள் மூடிய வறட்டு தியானம்
கரிய இருளில் மனத்தை ஆழ்த்திட |
விழிகளை திறந்து வழியும் காட்டி
ஜீவ வடிவினில் சிவனை வழிப்பட ||

புதிய பாரதம் புலர்ந்தது இன்று
தேச லட்சியம் புரிந்தது நன்று |
வீறு கொண்ட பல இளைஞர்கள் கூட்டம் 
சேவை யோகத்தில் சாதனை செய்திட  ||

Read Full Post »

விவேகானந்தரை நினைத்திடுவோம் |
விவேக வழியில் வாழ்ந்திடுவோம் ||
தெய்வீகம் மனிதனின் இயல்பென்போம் 
தெய்வத்தொண்டில் சிறந்திடுவோம் |
விவேகானந்தரின் நெறியில் நின்றே 
ஆண்மையுடன் நாம் வாழ்ந்திடுவோம் ||
தொண்டும் துறவும் போற்றிடுவோம் 
இதயத்தைக்  கோயில் ஆக்கிடுவோம் | 
விவேகானந்தரின் குரலை முழங்கி 
சிங்கமென நாம் சிலிர்த்திடுவோம் ||
சுயநலம் களைந்தே வாழ்ந்திடுவோம் 
பொதுநலம் பேணி உழைத்திடுவோம்  |
விவேகானந்தரின் கொடியை ஏந்தி 
தியாகத்தின்  உருவாய் விளங்கிடுவோம் ||
முனிவர்கள் பரம்பரை நாம் என்போம் 
பக்தியும் முக்தியும் சேர்த்திடுவோம் |
விவேகானந்தரின் படையாய்   விளங்கி
மங்களம் எங்கும் பரப்பிடுவோம் ||

Read Full Post »

எழுந்திடு, விழித்திடு ஓ பாரதமே!
நம்பிக்கை கொண்டு துணிந்து செயல்படு

சுயநலம் களைந்தே பொதுநலம் பேணியே
ஏழை மாந்தரின் துயரம் போக்கிடு

மானுடம்  உருவாக்கும் வாழ்க்கை  வளமாக்கும்
கல்வி வேள்வியை கற்க வந்திடு

சகலம் தெய்வீகம் சாஸ்திர சாரம்
அகத்தினில் தேடிடு, அமைதியை நாடிடு

வலிமையே வாழ்வு, பயமே தாழ்வு
விவேகானந்தரின் பாதையில் நடந்திடு

Read Full Post »

வீர நரேந்திரா விவேகானந்தா
சரணம் சரணம் குரு நாதா
ஜீவ சேவையே சிவ சேவையென
பாதை காட்டி அருள் புரிந்தாய்

பரமஹம்சரின் அருளை பெற்று
பாருலகெங்கும் பவனி வந்தாய்
அன்னை சாரதையின் அன்பைபெற்று அகிலம்
முழுதும் அணைத்துக் கொண்டாய்!!

இந்து மதத்தின் இணையற்ற பெருமையை
இவ்வுலகெங்கும் பரவச் செய்தாய்
இப்புவி மக்கள் நலமுடன் வாழ
இறை அருள் ஒன்றே வழி என்றாய்!!

மனதின் ஆற்றல் மலையினும் பெரிதென
மாந்தர்களை நீ உணரச் செய்தாய்
தூய்மையும் தொண்டும் இருகண்களேன
திக்கெட்டும் நீ முரசொலித்தாய்!!

வேதத்தின் உண்மை காலத்தில் ஈன்றாய்
வேதாந்த சிங்கமே விவேகானந்த
வேத ஸ்வரூப விவேகானந்தா
வீரேசுவர சிவ நமோ நமோ!!

Read Full Post »

ஓம்

ஓம் என்பது ப்ரணவம்
ப்ரணவம் என்பது எந்த ஒரு ஒலிக்கும் காரணமாக இருப்பது ப்ரணவம் எனப்படும். படைப்பு  அனைத்தும் ஓம் என்ற சொல்லில் அடங்கும் ஓம் படைப்பின் ரகசியம் ஆகும்
ஓம் என்பதை பிரித்தால்

அ + உ + ம் என்று பிரிக்கலாம்.

அ என்பது படைத்தல் / பிரம்மா / இறந்தகாலம்.
உ என்பது காத்தல் / விஷ்ணு / நிகழ்காலம்
ம் என்பது அழித்தல் / சிவன் / எதிர்காலம்

இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும்  மூன்று தொழிழுக்கு  உட்பட்டு இருக்கும். அதாவது உலகத்தில் தோன்றிய அனைத்தும் ஒருநாள் மறைந்தே ஆக வேண்டும் என்பது நியதி . அதனை விளக்குவதே ஓம் என்றும் ப்ரணவம்.

இந்த பிரபஞ்சமும் ஓம் என்பதில் அடங்கும் அ வில் தோன்றி உ வில் இருந்து ( வாழ்ந்து) ம் ல் முடியும் ( மறையும் ). அதனால் தான் நமது ரிஷிகள் ஓம் என்னும் பிரணவமே மொத்த பிரபஞ்சமாக இருக்கிறது என்று கண்டார்கள் .

நாம் சாதாரணமாக எந்த  ஒரு சத்தத்தை எடுத்துக் கொண்டாலும் அதில் இந்த மூன்று தொழில்கள் வருவதை அறியலாம் . மூன்று தொழில்கள் என்பது பிரணவமே. பிரம்மத்தின் நாதம் ப்ரணவம். பிரபஞ்சத்தின் இயக்கத்தை சப்தத்தில் குறிப்பது தான் ஓம்

ஓம்  என்கிற ப்ரணவ மந்திரம் இல்லாமல் எந்த ஒரு மந்திரமும் இல்லை ஓம்-ன் சிறப்பை நமது வேதங்களும் புராணங்களும் கூறியிருக்கின்றன.

கந்த புராணத்தில் பிரம்மன் ( படைப்பு கடவுள்) பிரணவ மந்திரத்தையும் அதன் பொருளையும் மறந்தான் அதனால் கந்தன் அவனை சிறையில் அடைத்தான். பிரம்மன் சிறைப்பட்டதால் படைப்பு தொழில் நடைபெறவில்லை. ஈஸ்வரன் பிரம்மனை விடுவிக்க கோரி கந்தனிடம் கேட்டான் கந்தன் ப்ரணவ மந்திரத்தின் பொருளைக்கேட்டான் ஈஸ்வரன் நீயே சொல் என்று கூற கந்தனே தந்தையாகிய ஈஸ்வரனுக்கு தகப்பன் சாமியை ப்ரனவமந்திரத்தின் பொருளை உபதேசித்தான். இது ஓம் என்னும் ப்ரணவ மந்திரத்தின் பொருளையும் அதன் சிறப்பையும் விளக்கும் ஒரு சிறு நிகழ்வு ஆகும்.

ஓம் 

Read Full Post »

திருநீற்றுப் பதிகம்

(1)
மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திர மாவது நீறு சமயத்தில் உள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திருவால வாயாந் திருநீறே

திருநீறானது, மந்திரச் சொல் போன்று அச்சம் நீக்கி, வேண்டிய நற்பயனைத் தருவது ஆகும். வானவர்கள் திருநீற்றைஅணிகின்றனர். மனிதர்களுக்கு இது, வானவர்களை விட மேலானதாகி விளங்குவது. அழகினைத் தந்து பொலியும்திருநீறு, துதிக்கப் படும் பொருளாக உள்ளது. உமையவளைப் பாகங் கொண்ட ஆலவாய் அண்ணலாகிய ஈசனின்திருநீறு இத்தகையது ஆகும்.
(2)
வேதத்தில் உள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு
போதந் தருவது நீறு புன்மை தவிர்ப்பது நீறு
ஓதத் தகுவது நீறு உண்மையில் உள்ளது நீறு
சீதப் புனல்வயல்சூழ்ந்த திரு ஆலவாயான் திருநீறே

வேதத்தால் போற்றப் படுகின்ற பெருமையுடையது திருநீறு. உலக வாழ்க்கையில், ஏற்படும் பிணிகளையும், மனதால் ஏற்படும் துயரங்களையும், தீர்ப்பது திருநீறு ஆகும். நல்லறிவு தருவதும், அறியாமை மற்றும் பழி முதலியவற்றால் நேரும் புன்மைகளை அகற்றுவதும் திருநீறு ஆகும். திருநீற்றின் செம்மை, ஓதத் தகுந்த பெருமையுடையதும், உண்மைப் பொருளாய் எக்காலத்திலும் விளங்குவதாகும். இது திருவாலவாய் அண்ணலாக விளங்கும் ஈசனுக்கு உரிய திருநீறு.

(3)
முத்தி தருவது நீறு முனிவர் அணிவது நீறு
சத்திய மாவது நீறு தக்கோர் புகழ்வது நீறு
பத்தி தருவது நீறு பரவ இனியது நீறு
சித்தி தருவது நீறு திருவால வாயான் திருநீறே

திருநீறு, முக்தி இன்பத்தை தருவது. முனிவர் பெருமக்கள் அணியும் பெருமை உடையது. எக்காலத்திலும்மேலானதாக விளங்கி நலம் தருவது. இத்தகைய திருநீற்றின் மகிமை அறிந்து, சிவனடியார்கள் போற்றுகின்றனர்.திருநீறானது மன்னுயிர்களுக்கு, சிவபக்தியைத் தருவதாகும். அதனைப் போற்றி வாழ்த்த இனிமை நல்கும். எட்டு வகையான சித்திகளைத் தரவல்லது. அது ஆலவாய் அண்ணலாகிய ஈசனுக்கு உரிய திருநீறு ஆகும்.

(4)
காணஇனியது நீறு கவினைத் தருவது நீறு
பேணிஅணிபவர்க்கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு
மாணந் தகைவது நீறு மதியைத் தருவது நீறு
சேணந் தருவது நீறு திருஆல வாயான் திருநீறே

திருநீறு அணிந்தவர்களைக் காணும் அன்பர்கள் இனிமைக் கொள்வார்கள். அத்தகைய திருநீற்றை விரும்பி அணிபவர்களுக்கு பெருமை கொடுக்கும். வல்லமை தரும். இறப்பினைத் தடுக்கும். நல்லறிவைத் தரவல்லது திருநீறு. மன்னுயிர்களுக்கு உயர்வைத் தரும் ஆற்றல் உடையது இத்திருநீறு. இது ஆலவாய் அண்ணலாகிய ஈசனுக்கு உரிய திருநீறு ஆகும்.

(5)
பூச இனியது நீறு புண்ணிய மாவது நீறு
பேச இனியது நீறு பெருந்தவத் தோர்களுக் கெல்லாம்
ஆசை கெடுப்பது நீறு அந்தம தாவது நீறு
தேசம் புகழ்வது நீறு திருஆல வாயான் திருநீறே

திருநீறு மெய்யில் பூசி அணிய, இனிமை சேர்க்கும். புண்ணியம் சேர்க்கும். திருநீற்றின் பெருமை பேச இனியது. உலக பந்தத்தால் உண்டாகும் ஆசைகளை நீக்கி, உயர்ந்த நிலைக்கு செல்ல வழி வகுக்கும். எல்லாவற்றிர்க்கும் அந்தமாகத் திகழ்வது திருநீறு. தேசமெல்லாம் புகழ்ந்து போற்றும் சிறப்புடைய இத்திருநீறு, இது ஆலவாய் அண்ணலாகிய ஈசனுக்கு உரிய திருநீறு ஆகும்.
(6)
அருத்தம தாவது நீறு அவலம் அறுப்பது நீறு
வருத்தம் தணிப்பது நீறு வானம் அளிப்பது நீறு
பொருத்தம தாவது நீறு புண்ணியர் பூசும் வெண்ணீறு
திருத்தகு மாளிகை சூழ்ந்த திருவால வாயான் திருநீறே

பொன்போன்ற பெரிய செல்வமாக விளங்குவது திருநீறு, அவலமாகும் துன்பத்தைப் போக்குவதும், மனத்தில் வருத்திக் கொண்டிருந்து துன்புறுத்தும் நெஞ்சக் கனலைத் தணித்து விளக்குவதும், சிறப்பினை அளிப்பதும், எல்லாநிலைகளிலும் பொருந்தி விளங்கிச் சிறப்பு தருவதும் திருநீறு. புண்ணியத் தன்மை கொண்டதுடன், புண்ணியம் செய்த பெருமக்கள் விரும்பி பூசி, மேலும் பொலிவு கொள்வதற்கும் காரணமாவது திருநீறு. செல்வம் மிக்க மாளிகைகள் சூழ்ந்த திரு ஆலவாயில் வீற்றிருக்கும் ஈசனார்க்கு உரிய திருநீறு, இத்தகைய சிறப்பினை உடையதாகும்.

(7)
எயிலது அட்டது நீறு இருமைக்கும் உள்ளது நீறு
பயிலப் படுவது நீறு பாக்கியமாவது நீறு
துயிலைத் தடுப்பது நீறு சுத்தமதாவது நீறு
அயிலைப் பொலிதரு சூலத்து ஆலவாயான் திருநீறே

முப்புரத்தை எரித்துச் சாம்பலாக்கியது திருநீறு. இம்மை, மறுமை, ஆகிய இரண்டினுக்கும் உயிர்களுக்குத் துணையாக இருப்பது திருநீறு. நித்தியமாயும், உயர்ந்த பொருளாயும் பயின்று , நுகரும் பொருளாக உடையது நீறு. அது பாக்கியமாக இருந்து விளங்கும் சிறப்புடையது. மாயையின் வயப்பட்டும் சோர்வுற்றும் தடைப்படுத்தும் உறக்க உணர்வினைத் தடுத்து புத்துணர்ச்சி தந்து தூய்மைப்படுத்தும் இயல்புடையது. அத்தகைய திருநீறு, கூர்மையான சூலப் படையுடைய திரு ஆலவாய் அண்ணலாகிய ஈசனுக்கு உரிய திருநீறு ஆகும்.

(8)
இராவணன் மேலது நீறு எண்ணத் தகுவது நீறு
பராவண மாவதுநீறு பாவம் அறுப்பது நீறு
தராவணம் ஆவது நீறு தத்துவ மாவது நீறு
அராவணங் கும்திரு மேனி ஆலவா யான்திருநீறே

இராவணன் திருநீறு அணியப் பெருமையுறச் செய்தது. எண்ணத்தால் தகுதியாக்கிப் போற்றி வழி படுவதற்கு உரியது திருநீறு. பராபரனைப் போன்று துதிக்கப் படும் பொருளாக விளங்குவதும், பாவத்தைப் போக்குவதும் திருநீறு.தராவனமாக இருப்பது திருநீறு. அது தத்துவமாகவும் விளங்கி நிற்பது. அத்தகையது, அரவம் அணைந்து விளங்கும்திருமேனியராகிய திரு ஆலவாய் அண்ணலுக்கு உரியதாகிய திருநீறு ஆகும்.

(9)
மாலொடு அயனறி யாத வண்ணமும் உள்ளது நீறு
மேலுறை தேவர்கள் தங்கள் மெய்யது வெண்பொடி நீறு
ஏல உடம்பிடர் தீர்க்கும் இன்பந் தருவது நீறு
ஆலம துண்ட மிடற்றெம் ஆலவாயான் திருநீறே

திருமாலும், பிரம்மனும் அறிவதற்கு அரியதாகிய வண்ணத்தை உடையது திருநீறு. தேவர்கள் தமது மெய்யில் பூசிமகிழ்வது திருநீறு. பிணிகளை நீக்கி இன்பத்தை தரவல்லது திருநீறு. அத்தகைய சிறப்புடையது, நஞ்சினை உண்டமிடற்றுடைய ஆலவாய் அண்ணலாகிய ஈசனுக்கு உரிய திருநீறு ஆகும்.

(10)
குண்டிகைக் கையர்க ளோடு சாக்கியர் கூட்டமும் கூடக்
கண்திகைப் பிப்பது நீறு கருத இனியது நீறு
எண்திசைப் பட்ட பொருளார் ஏத்தும் தகையது நீறு
அண்டத் தவர்பணிந் தேத்தும் ஆலவாயன் திருநீறே

சமணர்களும், சாக்கியர்களும் திகைக்கும் தகைமையில் காட்சி தருவது திருநீறு. திருநீற்றை நெஞ்சில் பதித்த போதும் இனிமையைத் தரவல்ல அத்தகைய தெய்வீகம் உடையது. எண் திசையில் உள்ள சிவமாகிய மெய்ப் பொருளைச் சரணடைந்த பெருமக்களும் ஏத்தும் சிறப்புடையது திருநீறு. அத்தகையது, தேவர்கள் பணிந்து ஏத்தும் திரு ஆலவாய் அண்ணலாகிய ஈசனுக்கு உரிய திருநீறு ஆகும்.

(11)
ஆற்றல் அடல்விடையேறும் ஆலவாயான் திருநீற்றைப்
போற்றிப் புகலி நிலாவும் பூசுரன் ஞானசம் பந்தன்
தேற்றித் தென்னன் உடலுற்ற தீப்பிணி யாயின தீரச்
சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே

வலிமை மிக்க இடப வாகனத்தில் விளங்குகின்ற ஆலவாய் அண்ணலாரின் திருநீற்றைப் போற்றித் துதித்தஞானசம்பந்தர், மன்னவனாகிய கூன் பாண்டியனுடைய தீமையான பிணி யாவும் தீரும் வகையில் தேற்றிச் சாற்றிய இத் திருப் பதிகத்தை ஓத வல்லவர்கள் நல்லவர்களாய்த் திகழ்வார்கள்.

திருச்சிற்றம்பலம்.

Read Full Post »

பட்டினத்தடிகள் துறவியாக ஊர் ஊராகத் திரிந்து கொண்டிருந்த காலத்தில் அவருடைய அன்னையார் மரணமடைந்தார். அவருடைய ஈமச்சடங்கை எங்கிருந்தாலும் வந்து செய்து தருவேன் என்று வாக்களித்திருந்த பட்டினத்தடிகள் சரியான நேரத்தில் சுடுகாட்டினை அடைந்தார். அவருடைய தாயின் சிதைக்காக உறவினர்கள் அடுக்கியிருந்த காய்ந்த விறகுகளை அகற்றிவிட்டு பச்சை வாழைமட்டைகளையும் இலைகளையும் கொண்டு சிதை அடுக்கி பத்துபாடல்கள் பாடி சிதையைப் பற்றச் செய்தார். அந்தப் பாடல்கள் மிகப் புகழ்பெற்றவை.

ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்து பெற்றுப்
பையலென்ற போதே பரிந்தெடுத்துச் செய்ய இரு
கைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை தந்தாளை
எப்பிறப்பில் காண்பேன் இனி
முந்தித் தவம் கிடந்து முன்னூறு நாள்சுமந்தே
அந்திபகலாய்ச் சிவனை ஆதரித்துத் தொந்தி
சரியச் சுமந்து பெற்ற தாயார் தமக்கோ
எரியத் தழல் மூட்டுவேன்
வட்டிலிலும் தொட்டிலிலும் மார்மேலும் தோள்மேலும்
கட்டிலிலும் வைத்தென்னைக் காதலித்து முட்டச்
சிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டிய தாய்க்கோ
விறகிலிட்டுத் தீமூட்டு வேன்
நொந்து சுமந்து பெற்று நோவாமல் ஏந்திமுலை
தந்து வளர்த்தெடுத்துத் தாழாமே அந்திபகல்
கையிலே கொண்டென்னைக் காப்பாற்றிய தாய்தனக்கோ
மெய்யிலே தீமூட்டு வேன்
அரிசியோ நானிடுவேன் ஆத்தாள் தனக்கு
வரிசையிட்டுப் பார்த்து மகிழாமல் உருசியுள்ள
தேனே திரவியமே செல்வத் திரவியப்பூ
மானே எனஅழைத்த வாய்க்கு
அள்ளி இடுவது அரிசியோ தாய்தலைமேல்
கொள்ளிதனை வைப்பேனோ கூசாமல் மெள்ள
முகமேல் முகம்வைத்து முத்தாடி என்றன்
மகனே எனஅழைத்த வாய்க்கு
முன்னை இட்ட தீ முப்புறத்திலே
பின்னை இட்ட தீ தென்இலங்கையில்
அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே
யானும் இட்ட தீ மூள்கமூள்கவே
வேகுதே தீயதனில் வெந்து பொடிசாம்பல்
ஆகுதே பாவியேன் ஐயகோ மாகக்
குருவி பறவாமல் கோதாட்டி என்னைக்
கருதி வளர்த்தெடுத்த கை
வெந்தாளோ சோணகிரி வித்தகா நின்பதத்தில்
வந்தாளோ என்னை மறந்தாளோ சந்ததமும்
உன்னையே நோக்கி உகந்து வரம் கிடந்து என்
தன்னையே ஈன்றெடுத்த தாய்
வீட்டிருந்தாள் அன்னை வீதிதனில் இருந்தாள்
நேற்றிருந்தாள் இன்றுவெந்து நீறானாள் பால்தெளிக்க
எல்லோரும் வாருங்கள் ஏதென்று இரங்காமல்
எல்லாம் சிவமயமே யாம்

-பட்டினத்தார்

Read Full Post »

பாரத மாதா

ஜன கன மன அதிநாயக, ஜய ஹே
பாரத பாக்ய விதாதா
பஞ்சாப சிந்து குஜராத் மராத்தா
திராவிட உத்கல பங்கா
விந்தியா ஹிமாச்சல யமுனா கங்கா
உச்சல ஜலதிதரங்கா
தவ சுப நாமே ஜாகே
தவ சுப ஆஷிஸ மாகே
காஹே தவ ஜய காதா
ஜன கன மங்கள தாயக ஜய ஹே
பாரத பாக்ய விதாதா
ஜய ஹே, ஜய ஹே, ஜய ஹே,
ஜய ஜய ஜய, ஜய ஹே!

DOWNLOAD AUDIO MP3

ஜன கன மன அதிநாயக ஜய ஹே – மக்கள் பெருங்கூட்டத்தின் மனத்தில் ஆட்சி செய்பவள் நீ தான். வெற்றி உனக்கே !

பாரத பாக்ய விதாதா – இந்தியத் திருநாட்டுக்கு பெருமையும், மங்கலமும், செல்வங்களும் அருளுபவள் நீயே.

பஞ்சாப சிந்து குஜராத் மராத்தா
திராவிட உத்கல பங்கா

ஐந்து பெரிய நதிகள் ஓடும் நிலம், பெரும் வீரர்கள் தோன்றிய இடம், சமய ஒற்றுமையை வலியுறுத்தும் சீக்கியத்தின் பிறப்பிடம் – பஞ்சாப் மாகாணம் உன்னுடையது.

புராதன பாரதத்தின் தலை வாசல், நான்கு வேதங்களின் பிறப்பிடம் , பழம்பெரும் சிந்து சமவெளிக் கலாச்சாரம் தழைத்தோங்கிய இடம் – சிந்து நதிப்பிரதேசம் உன்னுடையது.

பகவான் கிருஷ்ணனின் ராஜ்ஜியம், தேசத்தந்தை மகாத்மா காந்தியின் பிறப்பிடம் – குஜராத் மாநிலம் உன்னுடையது .

வீர சிவாஜியின் பிறப்பிடம், தற்கால இந்தியாவின் தலைவாசல் – மராட்டிய மாநிலம் உன்னுடையது .

பழம்பெரும் திராவிடக் கலாச்சாரத்தின் தொட்டில், செம்மொழியாம் தமிழ்மொழியின் பிறப்பிடம், இந்தியக் கலாச்சாரத்தின் மிக முக்கிய பாகங்களை அளித்த பெருநிலம் – திராவிட பீடபூமி உன்னுடையது.

பூரி ஜெகன்னாதம், கொனாரக் போன்ற சிறந்த கலைச்செல்வங்களாகிய கோவில்கள் இருக்கும் இடம், பழங்காலத்து கலிங்க தேசம் – உத்கலமாகிய ஒரிஸ்ஸா மாநிலம் உன்னுடையது.

இந்திய விடுதலையின் பிறப்பிடம், நூதன இந்தியாவின் மூளை, பெரும் ஞானிகள் பிறந்த தேசம் – பழம்பெருமை மிக்க வங்காள (பங்கா) தேசம் உன்னுடையது .

இந்த பெரும் மாநிலங்களும் அதில் வாழும் மக்களும் உன் பெருமைகளை எல்லாத் திசைகளிலும் பாடிப் பரவிக் கொண்டிருக்கின்றனர்.

விந்தியா ஹிமாச்சல யமுனா கங்கா

வடநாட்டிற்கும் தென்னாட்டிற்கும் நடுவே அமைந்த இயற்கை எல்லை, மிகப் பெரியது என்றும் கடக்க முடியாதது என்றும் ஒரு காலத்தில் எண்ணப்பட்ட மலை, பல புராணக் கதைகளின் இருப்பிடம் – விந்திய மலை உன்னுடையது.

மாபெரும் மலைத்தொடர், அசலம் (அசையாதது) என்னும் சொல்லுக்கு ஒரு மாபெரும் உதாரணம், இந்தியத் தேசத்தின் இயற்கை எல்லை, மகரிஷிகளும் சாதுக்களும் வாழும் இறையாலயம், புராணக்கதைகளின் நாயகன், உலகின் மிகப் பெரிய சிகரத்தைக் கொண்ட மலைத்தொடர் – இமய மலை உன்னுடையது.

இந்தியத் திருநாட்டின் மாபெரும் சமவெளியை தழைத்தோங்கச் செய்யும் இரு நதிகள், இந்தியர்களின் ஆன்மத் தாயார்கள் – கங்கையும் யமுனையும் உன்னுடையவை.

இந்த இயற்கை அற்புதங்கள் உன் புகழை எல்லாத் திசைகளிலும் பாடிப் பரவிக் கொண்டிருக்கின்றன.

உச்சல ஜலதி தரங்கா – மூன்று திசைகளிலும் உன்னைச் சூழ்ந்திருக்கும் மாக்கடல்கள் உன் புகழை தங்கள் அலைக் கரங்களால் எப்போதும் பாடிக் கொண்டிருக்கின்றன.

தவ சுப நாமே ஜாகே – உனது மங்கலகரமான திருநாமத்தை எப்போதும் நாங்கள் பாடிப் போற்றிக் கொண்டிருக்கிறோம்.

தவ சுப ஆஷிஸ மாகே – உனது மங்கலகரமான ஆசிகளை வேண்டி நிற்கின்றோம்.

காஹே தவ ஜய காதா – உன்னுடைய மாபெரும் வெற்றியை வேண்டியே நாங்கள் பாடிக்கொண்டிருக்கிறோம்.

ஜன கன மங்கல தாயக ஜய ஹே – இந்திய மக்களின் மங்கலங்களை அள்ளித் தருபவள் நீ. வெற்றி உனக்கே!

பாரத பாக்ய விதாதா – இந்தியத் திருநாட்டின் பாக்கியங்களைத் தருபவள் நீ.

ஜய ஹே! ஜய ஹே! ஜய ஹே! ஜய ஜய ஜய ஜய ஹே! – வெற்றி உனக்கே! வெற்றி உனது நல்வழி செல்லும் மக்களுக்கே! வெற்றி உன் மங்கலகரமான கொள்கைகளுக்கே! வெற்றி உன் ஈடு இணையற்ற தத்துவச் செல்வங்களுக்கே! வெற்றி உன் பன்மைத் தன்மைக்கே! வெற்றி உன் அமைதியை விரும்பும் குணத்திற்கே! வெற்றி! வெற்றி!! வெற்றி!!!

Read Full Post »

Older Posts »