Feeds:
Posts
Comments

Archive for November, 2013

தேச பக்தி

திருவனந்தபுரத்தில் சுவாமிஜி தங்கியிருந்தபோது பேராசிரியர் சுந்தராம ஐயரின் மகன் ராமசாமி சாஸ்திரியிடம் தேசபக்திக்கு விளக்கம் கொடுத்திருக்கிறார் சுவாமிஜி.

“….தேச பக்தி, தேச பக்தி என்கிறார்களே உண்மையில் அது என்ன? கண்மூடித் தனமான ஒரு நம்பிக்கையா? இல்லை.

நாட்டு மக்களுக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்பதில் உள்ள  பேரார்வம்  தான் உண்மையில் தேசபக்தி.

பாரதம் முழுவதும் பார்த்துவிட்டேன். அறியாமையும், துன்பமும், ஒழுக்க  சீர்குலைவுகளும் தான் நான் கண்டவை. என் உள்ளம் பற்றியெரிகிறது. இந்தத் தீமைகளை வேரோடு களைய வேண்டும் என்று துடிக்கிறேன்.

“அவர்களின் தீவினை அது. அதனால் கஷ்டபடுகிறார்கள்” என்று கர்மம் பற்றி பேசுகிறார்கள். தயவு செய்து அப்படிப் பேசாதீர்கள். கஷ்டபடுவது அவர்களின் கர்மம் என்றால் அதிலிருந்து அவர்களை விடுவிப்பது நமது தர்மம்.

கடவுளைக் காண வேண்டுமானால் மனிதனுக்கு தொண்டு செய்யுங்கள். நாராயணனை அடைய வேண்டுமானால் பட்டினியில் வாடுகின்ற ஏழை நாராயணர்களுக்குச் சேவை செய்யுங்கள். அதுதான் உண்மையான தேச பக்தி.

392616_348803058553487_191559038_n

சுவாமி அகண்டானந்தர் சுவாமிஜின் தேசபக்தியை வர்ணிக்கும்போது:-

” ….சுவாமிஜி பாரதத்தின் மீது கொண்ட அன்பு சாதாரண விஷயம் அல்ல. அது வெறும் தேசபக்தி (patriostism) அல்ல. அது தேசாத்மபோதம். சாதாரண மனிதர்களுக்கு இருப்பது “தேஹாத்மா போதம்”, அதாவது உடம்பைத் தானாக உணர்வது. சுவாமிஜிக்கு இருந்ததோ ‘தேசாத்மபோதம்’. அதாவது நாட்டையே தானாக உணர்வது.

நாட்டு மக்களின் சுகம், துக்கம், அவர்களின் கடந்த காலம், எதிர்காலம், நிகழ் காலம் என்பவை பற்றியே அவர் சிந்தித்தார்.

தேசாத்மா போதத்துடன் அவரது உணர்வு நின்று விடவில்லை. அது விச்வாத்ம போதமாக விரிந்தது. பாரத மக்களுக்காக மட்டுமல்ல. உலக உயிரினங்கள் அனைத்துடனும் தம்மை ஒன்று படுத்திக் கொண்டு அவர்களுக்காக கவலைப்பட்டார் அவர். அனைவருக்கும் முக்தி கிடைக்காமல் அவருக்கு முக்தியில்லை……”

*****************************

Read Full Post »

சுவாமிஜியின் திட்டம் உதயம் ….

சுவாமிஜி இந்தியாவின் பல பகுதிகளுக்குச் சென்று கொண்டிருந்த காலத்தில் இந்தியாவின் நிலைமை மிக மோசமாயிருந்தது. நம் நாடு அப்போது சுதந்திரம் பெறவில்லை. ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டிருந்தது. மக்கள் வறுமையில் வாடினர். பெரும்பாலான மக்களுக்குப் போதிய உணவு கூட கிடைக்கவில்லை. மிகச் சில சிறுவர் சிறுமியரே பள்ளி செல்ல முடிந்தது. மக்கள் தைரியத்தை இழந்து விட்டிருந்தனர். அவர்களிடம் தன்னம்பிக்கை இல்லை. அவர்கள் உதவியற்றோராக நசுக்கப்பட்டனர். இவற்றையெல்லாம் கண்ட சுவாமிஜி கண்கள் கலங்கின. பழங்காலத்தில் இந்தியா எத்தகையதொரு உன்னத நிலையில் இருந்தது என்பதை அவர் நினைத்து பார்த்தார். பழங்கால தவ முனிவர்களையும் ரிஷிகளையும் அவர் எண்ணிப் பார்த்தார். அத்தகைய பெருமை வாய்ந்த நாடு எவ்வளவு கீழ் நிலையை அடைந்துவிட்டது என்று நினைத்து அழுதார். மீண்டும் நம் நாட்டைப் பெருமையுடைய நாடாக மாற்றுவது எவ்வாறு என்பது ஒன்றே அவர் எண்ணமாயிருந்தது.

தன் சுற்றுப் பயணத்தின் இறுதி இடமாக, இந்தியாவின் தென்முனையில் கன்னியாகுமரியை அடைந்தார். அங்கு ஆதிபராசக்தி தேவி ஒரு குமரி வடிவில் ‘கன்னியாகுமரி’ என்ற திருநாமத்தில் கோயில் கொண்டுள்ளாள். ஒவ்வொரு நாளும் அர்ச்சகர்கள் சந்தனத்தால் அலங்கரித்து அவளை வழிபடுவது வழக்கம். குமரிதேவி அதி அற்புதமான தோற்றத்துடனும் அழகான கண்களோடும், இனிய புன்முறுவலோடும் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறாள். இக்கோயில் கடற்கரையோரத்தில் இருக்கிறது. கடல் நோக்கிப்  பார்க்கும்போது தண்ணீர்க்குள்ளிருந்து சில பெரிய பாறைகள் நீட்டிக் கொண்டிருப்பதை நாம் கான முடியும். அந்தப் பாறைகளின் ஒன்றின்மீது அன்னை பகவதி ஒற்றைக் காலில் தவம் செய்த அடிசுவடு காணப்படுகிறது. அலைகள் அப்பாறைகளில் முட்டி மோதிச் செல்லும். அவற்றின் பின்னே, கண்ணுக்கெட்டிய தூரம், தண்ணீர்தான்!

Thittam

ஒருநாள், தேவியின் சுவடுடைய அப்பாறையின் மீது தியானம் செய்ய விரும்பி சுவாமிஜி கடலின் நடுவே நீந்திச் சென்று, அதனை அடைந்தார். அதன் மேலேறி பாறை முனையில் அமர்ந்தார். அங்கிருந்து தன் பேரன்புக்குரிய தாய்நாட்டை நோக்கிய அவருக்கு அந்நாட்டு மக்களின் மோசமான நிலை நிழலாடுகிறது . சுவாமிஜி மீண்டும் அழுதார். சுவாமிஜிக்கு இரண்டு நோக்கங்கள் இருந்தன. ஒன்று அவர் குரு ஸ்ரீராமகிருஷ்ணர் , மற்றொன்று அவர் பிறந்த இந்தியத் தாய்நாடு. அப்பாறையில் அமர்ந்து கொண்டிருந்தபோது சுவாமிஜி மூன்று நாட்களாக ஆழ்ந்த தியானத்தில் லயித்தார். இந்தியாவின் பெருமையை மீண்டும் நிலைநாட்ட,  தாம் செய்ய வேண்டியது என்ன என்பதை அப்போது அவர் உணர்ந்தார்.

‘கன்னியாகுமரியில், குமரி தாயின் கோயிலில், பாரத நாட்டின் தென்கோடியிலுள்ள அந்தப் பாறைமீது அமர்ந்து சிந்தித்தேன். என் மனத்தில் திட்டம் ஒன்று உதித்தது’ என்றார் சுவாமிஜி.

*********************

Read Full Post »