Feeds:
Posts
Comments

Archive for the ‘வாழ்க்கை வரலாறு’ Category

ஸ்ரீராமகிருஷ்ணர் பற்றி சுவாமி விவேகானந்தர்….

ஒருவரிடம் கூர்த்த அறிவு, மற்றவரிடம் பரந்த இதயம். இந்த அறிவும் இதயமும் ஒருங்கே கொண்ட ஒருவர் பிறப்பதற்கான காலம் கனிந்தது. சங்கரரின் கூர்த்த அறிவும், சைதன்யரின் எல்லையற்ற பரந்த இதயமும் கொண்ட, எல்லா மதப் பிரிவுகளிலும் ஒரே இறைவனைக் காணக்கூடிய, ஏழைகள், பலவீனர்கள், கிழ்ஜாதியினர், தாழ்த்தப்பட்டவர் என்று இந்தியாவிலும் இந்தியாவுக்கு வெளியிலும் இந்த உலகிலுள்ள ஒவ்வொருவருக்காகவும் உருகும் இதயம்கொண்ட, அதே வேளையில்  இந்தியாவில் மட்டுமல்லாமல் இந்தியாவிற்கு  வெளியிலும் ஒன்றோடொன்று போராடிக் கொண்டிருக்கும் மதப்பிரிவுகள் அனைத்தையும் சமரசபடுத்தி அறிவுக்கும் உணர்ச்சிக்கும் சம  இடம் கொடுக்கின்ற, உலகம் தழுவிய மதம் ஒன்றை உருவாக்குவதற்குரிய சிந்தனை வளம் மிக்க ஒருவர் பிறப்பதற்கு உரிய காலம் வந்தது.

thakur-singing

அத்தகைய மனிதர் பிறந்தார். அவரது திருவடிகளின் கீழ் பல ஆண்டுகள் அமர்வதற்கான பெரும்பேறு எனக்குக் கிடைத்தது. அத்தகைய ஒருவர் பிறப்பதற்கான தேவை ஏற்பட்டது. காலமும் கனிந்தது, அவர் பிறந்தார். ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், எந்த நகரம் மேலை நாட்டுச் சிந்தனைகளால் நிறைந்திருந்ததோ, எந்த நகரம் மேலை நாட்டுக் கருத்துக்களின் பின்னால் பைத்தியமாக ஓடிக் கொண்டிருந்ததோ, எந்த நகரம் இந்தியாவிலுள்ள மற்றெல்லா நகரங்களையும் விட ஐரோப்பியமயமாகி விட்டிருந்ததோ அந்த நகருக்கு அருகிலேயே ஓரிடத்தில் அவரது வாழ்க்கைப் பணியெல்லாம் நடைபெற்றது. அவருக்கு நூலறிவு எதுவும் இல்லை. இந்த மாபெரும் அறிஞருக்குத் தமது சொந்தப் பெயரைக்கூட எழுதத் தெரியாது. ஆனால் கல்வி மிக்க நமது பல்கலைக்கழகப் பட்டதாரிகள் அவரிடம் அறிவுக் களஞ்சியத்தையே கண்டனர். இந்த ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் ஒரு விசித்திரமான மனிதர்.

அவர் இந்திய ரிஷிகளின் நிறைவாகத் திகழ்ந்தார். தற்காலத்திற்குரிய ரிஷி அவர், அவரது உபதேசங்களே இந்தக் காலத்திற்கு மிகவும் பயன் தருபவை என்பதை மட்டும் இப்போது கூறிக்கொள்ள விரும்புகிறேன். அவருக்குப் பின்னணியில் செயல்பட்டது தெய்வீக ஆற்றல் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். யாருக்கு தெரியாத, யாரும் கேள்விப்படாத ஒரு குக்கிராமத்தில் ஏழை அர்ச்சகராக பிறந்த அவர் இன்று ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் ஆயிரக்கணக்கான மக்களால் வழிபடப்படுகிறார். நாளை பல்லாயிரக் கணக்கான நபர்களால் வழிபடபடுவார். நேரம் கிடைத்து வாய்ப்பும் கிடைக்குமானால் அவரைப் பற்றி மேலும் பேசுவேன். ஆனால் இப்போது ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன்: உங்களிடம் நான் உண்மையான எதாவது ஒரு வார்த்தை பேசி இருந்தேனானால், அது அவருடையது, அவருடையது மட்டுமே; உண்மையில்லாத, தவறான, மனித இனத்திற்கு நன்மையைத் தராத எதையாவது நான் பேசியிருந்தால், அவையெல்லாம் என்னுடையவை, அதற்கு பொறுப்பாளி நானே.

*************************************

Read Full Post »

சுவாமிஜியின் திட்டம் உதயம் ….

சுவாமிஜி இந்தியாவின் பல பகுதிகளுக்குச் சென்று கொண்டிருந்த காலத்தில் இந்தியாவின் நிலைமை மிக மோசமாயிருந்தது. நம் நாடு அப்போது சுதந்திரம் பெறவில்லை. ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டிருந்தது. மக்கள் வறுமையில் வாடினர். பெரும்பாலான மக்களுக்குப் போதிய உணவு கூட கிடைக்கவில்லை. மிகச் சில சிறுவர் சிறுமியரே பள்ளி செல்ல முடிந்தது. மக்கள் தைரியத்தை இழந்து விட்டிருந்தனர். அவர்களிடம் தன்னம்பிக்கை இல்லை. அவர்கள் உதவியற்றோராக நசுக்கப்பட்டனர். இவற்றையெல்லாம் கண்ட சுவாமிஜி கண்கள் கலங்கின. பழங்காலத்தில் இந்தியா எத்தகையதொரு உன்னத நிலையில் இருந்தது என்பதை அவர் நினைத்து பார்த்தார். பழங்கால தவ முனிவர்களையும் ரிஷிகளையும் அவர் எண்ணிப் பார்த்தார். அத்தகைய பெருமை வாய்ந்த நாடு எவ்வளவு கீழ் நிலையை அடைந்துவிட்டது என்று நினைத்து அழுதார். மீண்டும் நம் நாட்டைப் பெருமையுடைய நாடாக மாற்றுவது எவ்வாறு என்பது ஒன்றே அவர் எண்ணமாயிருந்தது.

தன் சுற்றுப் பயணத்தின் இறுதி இடமாக, இந்தியாவின் தென்முனையில் கன்னியாகுமரியை அடைந்தார். அங்கு ஆதிபராசக்தி தேவி ஒரு குமரி வடிவில் ‘கன்னியாகுமரி’ என்ற திருநாமத்தில் கோயில் கொண்டுள்ளாள். ஒவ்வொரு நாளும் அர்ச்சகர்கள் சந்தனத்தால் அலங்கரித்து அவளை வழிபடுவது வழக்கம். குமரிதேவி அதி அற்புதமான தோற்றத்துடனும் அழகான கண்களோடும், இனிய புன்முறுவலோடும் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறாள். இக்கோயில் கடற்கரையோரத்தில் இருக்கிறது. கடல் நோக்கிப்  பார்க்கும்போது தண்ணீர்க்குள்ளிருந்து சில பெரிய பாறைகள் நீட்டிக் கொண்டிருப்பதை நாம் கான முடியும். அந்தப் பாறைகளின் ஒன்றின்மீது அன்னை பகவதி ஒற்றைக் காலில் தவம் செய்த அடிசுவடு காணப்படுகிறது. அலைகள் அப்பாறைகளில் முட்டி மோதிச் செல்லும். அவற்றின் பின்னே, கண்ணுக்கெட்டிய தூரம், தண்ணீர்தான்!

Thittam

ஒருநாள், தேவியின் சுவடுடைய அப்பாறையின் மீது தியானம் செய்ய விரும்பி சுவாமிஜி கடலின் நடுவே நீந்திச் சென்று, அதனை அடைந்தார். அதன் மேலேறி பாறை முனையில் அமர்ந்தார். அங்கிருந்து தன் பேரன்புக்குரிய தாய்நாட்டை நோக்கிய அவருக்கு அந்நாட்டு மக்களின் மோசமான நிலை நிழலாடுகிறது . சுவாமிஜி மீண்டும் அழுதார். சுவாமிஜிக்கு இரண்டு நோக்கங்கள் இருந்தன. ஒன்று அவர் குரு ஸ்ரீராமகிருஷ்ணர் , மற்றொன்று அவர் பிறந்த இந்தியத் தாய்நாடு. அப்பாறையில் அமர்ந்து கொண்டிருந்தபோது சுவாமிஜி மூன்று நாட்களாக ஆழ்ந்த தியானத்தில் லயித்தார். இந்தியாவின் பெருமையை மீண்டும் நிலைநாட்ட,  தாம் செய்ய வேண்டியது என்ன என்பதை அப்போது அவர் உணர்ந்தார்.

‘கன்னியாகுமரியில், குமரி தாயின் கோயிலில், பாரத நாட்டின் தென்கோடியிலுள்ள அந்தப் பாறைமீது அமர்ந்து சிந்தித்தேன். என் மனத்தில் திட்டம் ஒன்று உதித்தது’ என்றார் சுவாமிஜி.

*********************

Read Full Post »

இமயமலையில்…..

ஒருமுறை சுவாமி விவேகானந்தர் இமயமலையில் நீண்ட மலைப்பாதை வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, மலைச்சரிவில், மேற்கொண்டு ஏறமுடியாமல் களைத்துப் போய் அமர்ந்திருந்தார் முதியவர் ஒருவர்.அவரைப் பார்த்ததும் அங்கே சென்றார் சுவாமி விவேகானந்தர். “நான் மிகவும் சோர்ந்து போய் விட்டேன். இந்த பாதையை இனி எப்படி கடக்கப் போகிறேன்? இனிமேல் என்னால் நடக்க இயலாது. என் நெஞ்சே வெடித்துவிடும் போலிருக்கிறது” என்று அவரிடம் புலம்பினார் அந்த முதியவர்.

Untitled-1அதற்கு விவேகானந்தர், “பெரியவரே! சற்று கீழே பாருங்கள். காலுக்கு கீழே நீண்டு தெரிகின்ற அந்த பாதை முழுவதும் உங்களால் கடக்கப்பட்டதுதான். இன்னும் கொஞ்சம் நடந்தால் போதும். முன்னால் தெரிகின்ற பாதையும் விரைவில் உங்கள் காலுக்கு கீழே வந்துவிடும்” என்றார்.

அவரது தெம்பூட்டுகின்ற இந்த வார்த்தைகளை கேட்டதும், சோர்ந்து போய் இருந்த பெரியவர் எழுந்து நடக்க ஆரம்பித்தார் மலையின் உச்சியை அடைந்தார்.

Read Full Post »

நரேனின் பிரார்த்தனை

ஸ்ரீ ராமகிருஷ்ணர் நரேனிடம் பேரன்பு செலுத்தினார். நரேனும் ஸ்ரீ ராமகிருஷ்ணரை உயிருக்குயிராக நேசித்தான். குருவுக்கும் சீடனுக்குமிடையே இத்தகையதொரு தூய்மையான பேரன்பு நிலவினால் மட்டுமே கடவுளைப் பற்றிய ஞானத்தை சீடன் பெற முடியும்.

ஸ்ரீ ராமகிருஷ்ணருடைய சீடனாகிய நரேன் மிகுந்த ஆனந்தத்தில் திளைத்தான். தட்சனேசுவரதிற்கு அடிக்கடி சென்று கடவுளைப் பற்றிக் கேட்பான். இச்சமயம் துக்ககரமான ஒரு சம்பவம் நிகழ்ந்தது. நரேனின் தந்தை காலமானார். குடும்பம் வறுமையில் வாடியது. சில சமயம் சாப்பிட எதுவுமிருக்காது. மிகவும் வருந்திய நரேன் ஒரு வேலை தேடிக் கொள்ள முடிவு செய்தான்.

பி.ஏ. பட்டம் பெற்ற புத்திசாலி மாணவன் நரேன். இருப்பினும் அவனுக்கு ஒரு வேலையும் கிடைக்கவில்லை. ஒவ்வொரு அலுவலகமாக ஏறி இறங்கிய போதிலும், வேலை கிடைக்கவில்லை. ‘நான் சிறிதேனும் சம்பாதிக்காவிட்டால் என் தாயும் சகோதர சகோதரிகளும் என்ன செய்வார்கள்? அவர்கள் கதி என்ன? என்ற சோகம் அவனை வாட்டியது.

Narenin Pirathanani

ஒருநாள் அனைத்தையும் ஸ்ரீ ராமகிருஷ்ணரிடம் கூறினான் நரேன். ‘நரேன், இன்று செவ்வாய்க் கிழமை. அன்னையிடம் எது வேண்டினாலும் அவள் அள்ளித் தருவாள். நீயே சென்று அவளிடம் கேள்’ என்றார் ஸ்ரீ ராமகிருஷ்ணர். அன்று மாலை நரேன் காளிகோயில் சென்று அன்னையிடம் பிரார்த்தித்தான். திரும்பி வந்த நரேனிடம் ‘அன்னை என்ன சொன்னாள்?’ என்று கேட்டார் ஸ்ரீ ராமகிருஷ்ணர்.

‘ஓ நான் அவளிடம் கேட்க மறந்துவிட்டேன்’ என்றான் நரேன்.

மறந்தாயா? செல், உடனே செல், சீக்கிரம்’ என்று அவனைத் திருப்பி அனுப்பினார் ஸ்ரீ ராமகிருஷ்ணர்.

இம்முறையும் நரேன் மறந்தான்.

மூன்றாம் முறை நரேன் மிகவும் அமைதியான முகத்துடன் திரும்பி வந்து கொண்டிருந்தான். ஸ்ரீ ராமகிருஷ்ணரிடம் ‘நான் எவ்வாறு அன்னையிடம் பணத்தை வேண்டுவேன்? அது மிகப் பெரிய பேரரசன் ஒருவனிடம் சென்று பூசணிக்காயை யாசிப்பது போலல்லவா ஆகிவிடும். பக்தி, சுயநலமற்ற அன்பு, அவளைப் புரிந்துகொள்ளும் ஆற்றல் ஆகியவற்றையே என்னால் அவளிடம் பிரார்த்திக்க முடிந்தது’ என்று கூறினான்.

பின்னர் நரேனின் குடும்பம் அடிப்படைத் தேவைகளுக்காக ஒருபோதும் வாடாது என்று ஸ்ரீ ராமகிருஷ்ணர் உறுதியளித்தார். அதன் பின்னரே வேலை தேடும் முயற்சியை கைவிடுவது சரியானது என்று நரேன் எண்ணினான்.

அன்று இரவு நரேனுக்கு ஸ்ரீ ராமகிருஷ்ணர் அன்னையைப் பற்றிய அற்புதமான பாடலொன்றைக் கற்பித்தார். அன்றிரவு முழுவதும் நரேன் அப்பாடலைப் பாடிக்கொண்டிருக்க, ஸ்ரீ ராமகிருஷ்ணர் ஆழ்ந்த பரவசத்திலிருந்தார்.

தொடரும் …..

Read Full Post »

சுவாமி விவேகானந்தரின் 150 ஆம் ஆண்டு பிறந்ததின விழா (1863-2013)

சுவாமி விவேகானந்தரின் சிந்தனையில் பாரதம்  மற்றும் சுவாமி விவேகானந்தரின் வாழ்வும் செய்தியும் கண்காட்சி

சுவாமி விவேகானந்தரின் 150 ஆம் ஆண்டு பிறந்ததின  விழாவை முன்னிட்டு விவேகானந்தா ஆத்ம சேவா சங்கம் மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் விவேகானந்தர் இளைஞர் மன்றம் சார்பில் 02/02/2013 அன்று தாம்பரத்தில் உள்ள வள்ளுவர் குருகுலம் பள்ளியில் “சுவாமி விவேகானந்தரின் சிந்தனையில் பாரதம்  மற்றும் சுவாமி விவேகானந்தரின் வாழ்வும் செய்தியும் கண்காட்சி ” அமைக்கப்பட்டது .

001

கண்காட்சியில் சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை மற்றும் அவரது செய்தியை விளக்கும் விதமாக படங்கள் வைக்கபட்டு இருந்தன. இதன் ஒரு பகுதியாக ஊக்கமூட்டும் வீடியோப் படங்கள் காண்பிக்கப்பட்டன. இந்த வீடியோ படங்கள் மாணவர்களை பெரிதும் கவர்ந்தன. கண்காட்சியில் புத்தக விற்பனையும் நடைப்பெற்றது.

002

கண்காட்சியில் 7 ஆம்  வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையுள்ள சுமார் 500 க்கு  மேற்பட்ட மாணவ , மாணவியர் கலந்து கொண்டனர். 80 க்கு மேற்பட்ட ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். அவர்கள் கூறுகையில் வீடியோ படம் மாணவர்களின் முன்னேற்றத்திற்கு ஏற்றதாக உள்ளது என்று கூறினர் . கண்காட்சியில் சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை மற்றும் செய்தியை அடிப்படையாக கொண்டு கேள்விகள் கேட்கப்பட்டன. இக்கேள்விகள் சரியான பதில் எழுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு கண்காட்சியின் முடிவில் பரிசுகள் வழங்கப்பட்டன. இத்தேர்வில் கலந்து கொண்ட மாணவ, மாணவி களுக்கு “விவேகானந்தர் அழைக்கிறார்” புத்தகமும் “மாணவனே மனதை ஒருமுகப்படுத்து ” என்ற புத்தகமும் வழங்கப்பட்டது.

005

கண்காட்சியின் நிறைவு விழாவில் சுவாமி ஆத்ம கனானத்தர் கலந்து கொண்டு தலைமை தாங்கினார். “மனிதா நீ மகத்தானவன் ” என்ற பாடலை பாடி மாணவர்களுக்கு தன்னம்பிக்கையூட்டும் விதமாக பேசினார். ஒரு ஆசிரியர் மாணவர்களிடம் உன் தாத்தாவின் தாத்தா பெயர் தெரியுமா என்று கேட்டார் அதற்கு மாணவர்கள் அனைவரும் தெரியாது என்று பதில் கூறினர். சரி காந்தியை பற்றி தெரியுமா என்று கேட்டார்.ஆம் தெரியும் என்று மாணவர்கள் அனைவரும் கூறினர். காந்தியை பற்றி தெரிந்த உங்களுக்கு ஏன் உங்கள் தாத்தாவின் தாத்தா பெயர் தெரியவில்லை என்று கேட்டார் அதற்கு மாணவர்கள் அனைவரும் அமைதியாய் இருந்தனர். அதில் ஒரு புத்திசாலி மாணவி எழுந்து காந்தி தாத்தா நம் நாட்டின் சுதந்திரத்துக்காக பாடுபட்டர் என் தாத்தா என்ன செய்தார் நான் ஏன் அவரை நினைவில் வைக்க வேண்டும் என்றார். அது போல நாம் வாழும் இந்த பூமியில் நாம் வாழ்ந்தற்குகான ஏதேனும் சான்றை விட்டுச்செல்ல வேண்டும் என்று கூறினார்.

008

தலைமையாசிரியர்  பேசும் போது இப்படி ஒரு வாய்ப்பு நமது பள்ளிக்கு கிடைத்தது  ஒரு பாக்கியம் என்றும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு மாணவ , மாணவி அனைவரும் அவரது வாழ்வில் முன்னேற வேண்டும் என்று கூறினார்.

009

தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சுவாமி பரிசுகள் வழங்கினார் மற்றும்  பள்ளிக்கு விவேகானந்தர் இளைஜர் மன்றம் சார்பில் நினைவுபரிசும் வழங்கப்பட்டது. விழாவின் முடிவில் பள்ளியின் நிறுவனர் திரு.சீனிவாசன் அவர்கள் பங்கேற்று விழாவினை சிறப்பித்தார்.

011

Read Full Post »

சிறுவயதில் விவேகானந்தர்

 

தொடரும் …..

Read Full Post »

சுவாமி விவேகானந்தரின் மன உறுதி…

ஒரு சமயம் சுவாமி விவேகானந்தர் லண்டன் மாநகருக்குச் சென்றிருந்தார். அங்கு அவரது நண்பர் ஒருவரின் பண்ணை வீட்டில் தங்கியிருந்தார். அந்தப் பண்ணை வீடு மிகப் பெரிய நிலப்பரப்பில், இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் இருந்தது. அங்கே நிறைய மாடுகள் வளர்க்கப்பட்டன.

ஒரு நாள் மாலை, பண்ணை மைதானத்தில் விவேகானந்தர் வாக்கிங் சென்று கொண்டிருந்தார். அவருடன் நண்பரும், நண்பரின் மனைவியும் நடந்து சென்று கொண்டிருந்தனர்.

அப்போது—

சற்றும் எதிர்பாராதவிதமாக ஒரு மாடு அவர்களை நோக்கி சீறிப் பாய்ந்து வந்தது. அதன் மூர்க்கத்தனமான ஓட்டத்தைப் பார்த்து பயந்து போன நண்பரின் மனைவி, அப்படியே மயங்கி விழுந்து விட்டார்.

அதைக் கண்டதும் விவேகானந்தரும், அவரது நண்பரும் துணுக்குற்றனர்.

மனைவியைத் தூக்க நண்பர் முயன்றார். அப்போது மாடு அவர்களை நெருங்கி விட்டது. நண்பருக்குக் கையும் ஓடவில்லை; காலும் ஓடவில்லை.

இன்னும் சில நொடிகள் அங்கே இருந்தால் மாட்டின் கொம்புகளுக்கு இரையாக நேரிடும் என்பதை உணர்ந்த நண்பர், தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள எழுந்து வேறு திசையில் ஓடினார். ஆனால், விவேகானந்தர் அப்படி இப்படி அசையாமல் ஆணி அடித்தது போல் அந்த இடத்திலேயே நின்றுவிட்டார்.

பாய்ந்து வந்த மாடு, கீழே விழுந்து கிடந்த நண்பரின் மனைவியையும் விவேகானந்தரையும் விட்டு விட்டு, ஓடிக் கொண்டிருந்த நண்பரைத் துரத்தியது.

அதைக் கண்ட நண்பர் பின்னங்கால் பிடறியில் அடிக்க, உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓடினார். மாடும் விடாமல் அவரைத் துரத்தியது.

அதிர்ஷ்டவசமாக ஒரு கட்டடத்திற்குள் புகுந்து தப்பினார் நண்பர். அதன் பிறகே பண்ணை ஊழியர்கள் ஓடிவந்து மாட்டைப் பிடித்துக் கட்டிப் போட்டனர்.

விவேகானந்தர் அதன் பிறகே அந்த இடத்தை விட்டு அசைந்தார்.

அங்கு வந்த நண்பருக்கோ ஒரே ஆச்சரியம். அப்போது நண்பரின் மனைவியும் மயக்கம் தெளிந்து எழுந்தார்.

“”சிறிது கூட பயமே இல்லாமல் அந்த ஆபத்தான நேரத்திலும் ஒரே இடத்தில் உறுதியாக உங்களால் எப்படி நிற்க முடிந்தது?” என்று கேட்டார் நண்பர்.

அதைக் கேட்டு மெல்லப் புன்னகைத்த விவேகானந்தர், “”நான் வித்தியாசமாக எதையும் செய்து விடவில்லை. வருவது வரட்டும்; சமாளிப்போம் என்ற ஒருவித மன உறுதியுடன் நின்றுவிட்டேன். ஓடுபவரைக் கண்டால் துரத்திச் செல்வது மிருகங்களுக்கு உரிய குணம். அதனால்தான் மாடு என்னை விட்டு விட்டு, ஓடிக் கொண்டிருக்கும் உங்களைத் துரத்தியது,” என்று முடித்தார்.

உயிருக்கு ஆபத்தான நேரத்தில் கூட, அதைக் கண்டு பயந்து ஓடாமல், வருவது வரட்டும் என்ற மன உறுதி பெற்றிருந்த சுவாமி விவேகானந்தரைப் பார்த்துப் பெரிதும் வியந்தார் நண்பர்.

உயிரே போகும் நிலை வந்தாலும் தைரியத்தை விடாதே ! நீ சாதிக்க பிறந்தவன் துணிந்து நில் , எதையும் வெல்.

–சுவாமி விவேகானந்தா ..

Read Full Post »

நீலகண்ட பிரம்மச்சாரி.

தஞ்சை எருக்கூரைச் சார்ந்தவர்.
தீவிரமான சுதந்திரப் போராட்ட வீரர்.

வாஞ்சிநாதன் கலெக்டர் ஆஷை சுட்டுக் கொன்ற வழக்கில் கைதான 14 பேரில் முதல் குற்றவாளி நீலகண்ட பிரம்மச்சாரி தான்.
வழக்கின் தீர்ப்பில் நீலகண்ட பிரம்மச்சாரிக்கு 71/2 ஆண்டு காலம் தண்டனை. சிறைசெல்லும்போது  அவருக்கு வயது 21  தான்.
சிறைவாசம் முடித்து வெளியே வருகிறார். நாள் முழுவதும் சுதேசி பிரச்சாரம். அதற்குக் கிடைத்ததோ பசியும், பட்டினியும் தான். பசி தாங்க முடியாமல் இரவு நேரத்தில் முகத்தை மறைத்துக் கொண்டு ‘இராப்பிச்சை’ எடுக்க ஆரம்பிக்கிறார்,பிச்சை எடுத்து சாப்பிட வேண்டிய நிலை தனக்கு வந்து விட்டதே என்று நினைத்த அவர், அதையும் நிறுத்தி விட்டார்.விளைவு பல நாள் பட்டினி.

ஒரு நாள் பசி பொறுக்கமுடியாமல். திருவல்லிக்கேணியில் தங்கியிருந்த தனது நண்பர் பாரதியாரைப் பார்க்க வருகிறார்.
பசியால் வாடிப்போன நீலகண்டனை பாரதியாருக்கு அடையாளமே தெரியவில்லை.

“பாரதி நான்தான் நீலகண்ட பிரம்மச்சாரி” என்று சொன்னவுடன், டேய், நீலகண்டா என்னடா, இது கோலம்” என்று அவரை கட்டி அனைத்துக் கொண்டார்.

“பாரதி, எனக்கு ஒரு நாலணா (25  பைசா) கொடேன். சாப்பிட்டு நன்கு நாளாச்சு” என்றார்.
இதைக் கேட்டவுடன் கண்கலங்கிய பாரதி அவருக்கு உணவு ஏற்பாடு செய்து கொடுக்கிறார்.
அப்போது பாரதியின் உள்ளத்தில் இருந்து வந்த உணர்ச்சிகரமான பாடல்தான்

“தனியொரு மனிதனுக்கு உணவில்லை எனில்
ஜகத்தினை அழித்திடுவோம்” – என்பதாகும்.

– விஜய பாரதம் (19-08-2011)

Read Full Post »

அவர் ஒரு வேதாந்தி!

சுவாமி விவேகானந்தர் ஒரு  முறை பாரிஸ் நகரவீதியில் தன ஐரோப்பிய சிஷ்யையுடன் கோச் வண்டியில் சென்று கொண்டிருந்தார்.

அந்தச் சமயத்தில் ஒரு வீட்டிலிருந்து இரண்டு பணக்காரச் சிறுவர்கள் வெளியே வந்தார்கள். கோச் வண்டியை ஓட்டியவர் வண்டியை நிறுத்தி அந்தப் பணக்காரச் சிறுவர்களை கட்டியணைத்து முத்தம்மிட்டார். சில வார்த்தைகள் பேசினார். மறுபடியும் வந்து வண்டியை ஓட்டிச்சென்றார் .

“யார் அந்தச் சிறுவர்கள்?” என்று கேட்டார் சுவாமிஜியின் சிஷ்யை. பதிலுக்கு வண்டியோட்டி “என் குழந்தைகள்தான்” என்றார்.
சுவாமிஜிக்கும், சிஷ்யைக்கும் ஒரே ஆச்சரியம்.கோச் வண்டிக்காரர் திரும்பிப் பார்த்தார்.பாரீஸில் இருந்த ஒரு வங்கியின் பெயரைச் சொல்லி, “அந்த வங்கியைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார்.

“ஒ! தெரியும். மிகப் பெரிய வங்கிதான். ஆனால், தற்போது திவாலாகிவிட்டது போல் தெரிகிறது!”
என்றார் சுவாமிஜியின் சிஷ்யை.

இதை கேட்டுவிட்டு வண்டியோட்டி அமைதியாக, “நான்தான் அந்த வங்கிக்குச் சொந்தக்காரன்! அந்த வங்கி இப்போது கொஞ்சம் சிரமநிலையில் இருக்கிறது. இந்தநிலையில் நான் மற்றவர்களுக்குச் சிறிதும் சுமையாக இருக்க விரும்பவில்லை. மீதம்மிருந்த சொத்தை விற்று இந்தக் கோச் வண்டி வாங்கினேன். இதை வாடகை வண்டியாக ஒட்டிக் கொண்டிருக்கிறேன். என் மனைவியும் சிறிது சம்பத்க்கிறார். கடன்களை அடித்தவுடன் மீண்டும் வங்கியைத் திறந்துவிடுவேன்!” என்றார்.

இதைக் கேட்டு கொண்டிருந்த சுவாமிஜி மிகவும் மகிழ்ந்து.”இதோ இந்த மனிதரை பார்! இவர்தான் சரியான வேதாந்தி. வேதாந்த கட்டத்தைத் தம் வாழ்க்கையில் நடைமுறைப் படுத்தியுள்ளார். பெரிய ஓர் அந்தஸ்திலிருந்து விழுந்தும் கூட இவர் சூழ்நிலைக்கு இரையாகி விடவில்லை. என்ன ஒரு தன்னம்பிக்கை இவரிடம் உள்ளது!” என்று கூறி ஆச்சரியப்பட்டார்.

அதற்க்கு பிறகு அவர் வீட்டிற்குப் போய் தமது மகிழ்ச்சியைத் தெரிவித்தார் சுவாமிஜி .

Read Full Post »

மனதில் இருவேறு துருவங்களாய் நின்று இரு கேள்விகள் ஆக்கிரமித்துக் கொண்டன.

“குருவின் லட்சியமா?’ குடும்பத்தின் கடைத்தேற்றமா?”

ஒருபுறம் வாழ்வினைப் பூரனமாக்கும் குருவின் வழிகாட்டல் உறுதியாய் வந்து நின்றது; மறுபுறம் தந்தையை இழந்து வாடும் தாய்,சகோதரரின் வறுமை நிலை எதிரியாய் வந்து நின்றது.

ஒரு குடும்பம் உய்ய வாழ்க்கையை நடத்துவது அல்லது வாழ்வாங்கு வாழ்ந்த மகானின் உபதேசங்களால் உயரிய வாழ்க்கையை வாழ்வது.

எதை ஏற்பது? எதை கைவிடுவது ?

ஒரு குடும்பமா? இல்லை உலகமே குடும்பமா?

சிந்தனைகளின் சுழலில் சிக்கித் தவித்த மனம்… கண்களை மூடியபடியே தியானத்தில் மூழ்கினார்; காட்சிகள் விரிந்தன; கடமையும், களத்தின் அவசியமும் புரிந்தன .

வென்றது குருவின் அன்பு; விலகியது தனிமனிதனை சார்ந்த      சிந்தனை.

மேற்சொன்ன மனநிலை சுவாமி விவேகானந்தரின் வாழ்வில் சவாலான, நெருக்கடியான சமயத்தில் ஏற்பட்டது.

சொர்கத்தை விட மற்றவர்களுக்காக நரகத்திற்கும் செல்லத் துணிந்த விவேகானந்தர், தன் குருவான ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் லட்சிய வடிவமாகவே வாழ்ந்தார்.

பாரத தேசத்தில் குருபக்தி புனிதமானது மட்டுமல்ல, என்றும் நமக்கு வழிகாட்டக் கூடியதாகவும் விளங்கும்.

Read Full Post »

Older Posts »